tamilnadu

விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

தருமபுரி, ஏப். 21-பென்னாகரத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை மண்டல மேலாளருக்கு கல்லூரி மாணவ, மாணவிகள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஏரியூர், பெரும்பாலை, தாசம்பட்டி, நாகமரை, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகள் மலைகள் சூழ்ந்த பகுதிகளாகும். இப்பகுதியிலிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்விப் பயிலவும், வேலைக்காகவும் சென்னை, திருப்பூர்,கோவை போன்ற வெளி மாவட்டத்துக்கும் கர்நாடகம், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு அளிக்கசொந்த ஊர்களுக்கு வந்தவர்கள், பின்னர் வெளி மாவட்டங்களுக்குச் செல்ல பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.இங்கிருந்து தருமபுரி வழித்தடத்துக்கும், மேச்சேரிவழிதடத்துக்கும் இரவு 9.30 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குச் செல்வதற்கும் பேருந்துகள் இரவு 9 மணிக்கு மேல் இயக்கப்படுவதில்லை. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதியுறும் நிலை உள்ளது.எனவே விடுமுறை நாட்களில் பென்னாகரத்தில் இருந்து வெளியூர் செல்வதற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துத் துறை மண்டல மேலாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;