tamilnadu

img

வேளாண் நிலம் : இளம் ஆட்டுக் குட்டிகள் பராமரிப்பு


இன்றைய இளம் குட்டி நாளைய ஆடு. அதாவது நடமாடும் ஏடிஎம்களான இந்த ஆடுகளை சரியான முறையில் பராமரிப்பு செய்வதன் மூலம் பல வகையில் லாபம் அடையலாம்.குட்டி ஈன்ற உடனே அதன் மூக்கில் அடைத்து உள்ள திரவத்தை துணியை கொண்டு துடைத்து விட வேண்டும். இதன் மூலம் குட்டிகளுக்கு எளிதான சுவாசம்.பின்னர் தொப்புள் கொடியை மூன்று அங்குலம் விட்டு மீதியை கத்தரி கொண்டு வெட்டி விட்டு பின் டிங்சர் அயோடின் திரவத்தை பஞ்சு மூலம் எடுத்து வெட்டிய இடத்தில் விட வேண்டும் இதன் மூலம் குட்டிக்கு ஏற்படும் நோய் தொற்றுகளை தவிர்க்கலாம்.

குட்டி எழுந்து நின்ற உடனே தாயிடம் சீம்பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். அதாவது ஆடு சினையாக இருக்கும் போதே காம்பில் உள்ள துவாரம் மெழுகு போன்ற பொருளால் அடைக்கப்பட்டு இருக்கும்.காரணம் பாக்டீரியாக்கள் உள் சென்று ஆட்டின் மடியில் நோய்களை உருவாக்காமல் இருக்க. அதனால் நாம் காம்பை பிடித்து ஒரு தடவை பால் கறந்தால் அந்த அடைப்பு வெளிவந்து குட்டி பால் குடிக்க எளிதாகி விடும்.சீம்பாலை குட்டிகள் வயிறு முட்ட குடிக்க விட வேண்டும். அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உடையது என்பதால் குட்டிகளை இளம் வயதில் தாக்கும் பல நோய்களை தடுக்கும் ஆற்றல் உடையது.சில ஆடுகள் குட்டிகளை அதிகமாக ஈனும் ஆனால் பால் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் பசும் பாலை புட்டிப்பால் ஆக கொடுக்க வேண்டும். அவை பால் குடித்த பின் வயிறு முட்டி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

பிறந்து சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு கண்டிப்பாக மருத்துவர் ஆலோசனை உடன் முதல் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் குட்டிகள் திடமாக வளரும்.குட்டி பிறந்த நாற்பது நாள் அல்லது புல் நன்கு மேய கற்றுக் கொண்ட பிறகு அடர் தீவனம் சாப்பிட பழக்க வேண்டும். அடர் தீவனத்தில் சிறு வெல்லம் கலந்து கொடுத்தால் எளிதில் பழகி விடும்.அடர் தீவனத்துடன் கண்டிப்பாக “தாது உப்பு கலவையை” கலந்து கொடுக்க வேண்டும் அப்போது தான் குட்டிகளுக்கு சரி விகித உணவு கிடைத்து வளர்ச்சி மிக வேகமாக இருக்கும்.தடுப்பூசிகள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் சிறு வயது முதலே சரியான காலகட்டத்தில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆடு வளர்ப்பு தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.கண்டிப்பாக ஒவ்வொரு குட்டிக்கும் ஒரு பதிவேடு வைத்து அதில் பதிவிடலாம். அப்படி இல்லை என்றால் குட்டியை புகைப்படம் எடுத்து அதில் இவற்றை தேதி வாரியாக இவற்றை பதிவு செய்யலாம். சிலர் காதுகளில் பிளாஸ்டிக் அட்டைகளை பதித்து அதன் மூலம் தகவல் பதிவிடுகின்றனர் .

அடர் தீவனம் என்று பார்த்தால் அதை நாமே தயாரிப்பது சிக்கன செலவிற்கு வழிவகுக்கும். அதேசமயம் மேய்ச்சல் நன்கு இருக்க வேண்டும்.அதாவது நூறு கிராம் தீவனத்தில் சிறிது மக்காச்சோளம் மாவு , சிறிது கம்புமாவு, கேழ்வரகு மாவு, உளுந்து தோல், மற்றும் அரிசி தவிடு. வசதி இருந்தால் கடலை புண்ணாக்கு தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து கொடுக்கலாம்.அதேபோல் அசோலாவை அடர் தீவனத்தில் கலந்து கொடுக்கும் போது நமக்கு தீவன தயாரிப்பு சிக்கனமாகும். அடுத்து இதில் வளர்ச்சிக்கான அமினோ அமிலங்கள் இருப்பதால் குட்டிகள் வளர்ச்சி வேகமாக இருக்கும்.அடுத்து பிறந்த சுமார் நான்கு மாதங்கள் பிறகு பொலிகிடாவிற்கு மட்டும் தேவையான கிடா குட்டிகளை தேர்வு செய்து அவற்றை தனியாக வளர்க்க வேண்டும் . மற்ற கிடா குட்டிகளுக்கு விதை நீக்கம் செய்யலாம்.இவ்வாறு செய்வதன் மூலம் இவை மற்ற ஆடுகளை தொந்தரவு செய்யாமல் தீவனத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வேகமாக அதிக எடை பிடிக்க வாய்ப்பு.சுமார் இருபத்தைந்து முதல் முப்பது ஆடுகளுக்கு ஒரு பொலி கிடா போதுமானது.

;