தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தொடர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொரோனா வைரஸ் தடுப்பு பற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது," தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேர், அவர்களின் வீடுகளிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுத் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி வந்த மேலும் 30 பேரின் விவரங்களைச் சேகரிக்கக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வெளிநாடு சென்று வந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். கண்காணிப்பில் உள்ள அனைவருக்கும் தினமும் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 144 தடை உத்தரவினால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு எந்த தடையும் இல்லை.
தேவைப்பட்டால் காய்கறி மார்க்கெட் 24 மணி நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்படும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும்தான் பொதுமக்கள் வெளியே வர வேண்டும். இதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்காக 100 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 50 படுக்கைகள் கொண்ட மற்றொரு பிரிவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.