tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 23

1644 - சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 1600களின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, வணிகத்துக்கான உரிமம் பெற்று, சூரத்தில் தங்கள் தளத்தை அமைத்துக்கொண்டது. ஏற்கெனவே இந்தியாவில் காலூன்றியிருந்த டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியுடன் நறுமணப்பொருள்(ஸ்பைஸ்) வணிகத்தில் போட்டியிட, மலாக்கா நீரிணைக்கு அருகாமையில் ஒரு துறைமுகம் வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கருதினர். 1522இலேயே வந்துவிட்ட போர்ச்சுகீசியர்கள், சாவ் டோம்(தற்போதைய சாந்தோம்) பகுதியில் தங்களுக்கு ஒரு துறைமுகத்தை அமைத்துக்கொண்டிருந்த நிலையில், டச்சுக்காரர்களும் 1612இல் பழவேற்காடு பகுதியில் தங்களுக்கான தளத்தை அமைத்திருந்தனர். 1639 ஆகஸ்ட் 20இல், காளஹஸ்தியின் நாயக்கரான தர்மலா சென்னப்ப நாயக்கர் உதவியுடன், விஜயநகரப் பேரரசர் பெட வெங்கட்ட ராயரை, சந்திரகிரி அரண்மனையில், கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரான்சிஸ் டே சந்தித்து, ஆறு மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட நிலப்பகுதியை (மதராசப்பட்டணம் என்னும் மீனவ கிராமம்), இரண்டாண்டு குத்தகைக்குப் பெற்றதுடன், அதில் கோட்டை அமைக்க அனுமதியும் பெற்றார். குத்தகைத் தொகை ஆண்டுக்கு 5 கோடி பகோடாக்கள் என்று கூறப்படுகிறது.


அப்போது ஒரு பகோடா என்பது மூன்றரை ரூபாய். மூவாயிரம் பவுண்டுகள் செலவில், 1644இல் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற ஏப்ரல் 23, இங்கிலாந்தில் புனித ஜார்ஜ் தினம் என்று கொண்டாடப்படும் நாளானதால், கோட்டைக்கும் அப்பெயரே சூட்டப்பட்டது. ஜார்ஜ் என்பவர், கிறித்துவத்தைக் கைவிட மறுத்ததால், 303 ஏப்ரல் 23இல் கொல்லப்பட்டதாக நம்பப்பட்டு, புனிதர் பட்டமளிக்கப்பட்ட கிரேக்க வீரர். புனித ஜார்ஜ் கோட்டை ஒயிட் டவுன் என்றும், அதைச் சுற்றிலும் உருவான தொழிலாளர் குடியிருப்புகள் ஜார்ஜ் டவுன் அல்லது பிளாக் டவுன் என்றும் அழைக்கப்பட்டன. சென்னை நகரம் உருவாவதற்கே அடிப்படையான இந்தக் கோட்டை உருவாவதில் முக்கியப்பங்காற்றிய ப்ரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், சென்னையை உருவாக்கியவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.


அறிவுக்கடல்

;