tamilnadu

img

தமிழக பட்ஜெட்டும் மின்சாரத் துறையும் - எஸ்.எஸ்.சுப்பிரமணியன்

2020-2021ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக துணை முதல்வ ரும் நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ். மூன்று மணி நேரம் உரையுடன் சமர்ப்பித்தார்.  நிதி நிலை அறிக்கையில் மின்துறையை பற்றி குறிப்பிடும் போது தனிநபர்மின் நுகர்வில் 1467 யூனிட்கள் மின் நுகர்வு செய்து, இந்தியாவில் அதிக தனிநபர் எரிசக்தி பயன்பாடு கொண்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது என்று பெருமை பட குறிப்பிட்டுள்ளார்.

நிதி நிலை அறிக்கையில் மின்சார உற்பத்தியை பொருத்தவரையில் சில ஆண்டுகளாக மாநில மத்திய அரசுகளின் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார கொள்முதல் போன்றவைகள் மூலம் 15,296 மெகாவாட் உற்பத்தி திறன் கூடுதலாக மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவுத்திறன் 21,780 மெகாவாட்டாக உள்ளது. இதில் 13,343 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (சூரிய ஒளி காற்றாலை மின் உற்பத்தி) திறனும் அடங்கும் என்றும், அதனால் தமிழகம், மின் மிகை மாநிலம் என்றும் தற்பெருமை பேசுவதும் அறிக்கையின் உள்ளடக்கமாகும்.

அறிக்கையில் தமிழக மின் உற்பத்தி திறன் 31,780 மெகாவாட் என்று குறிப்பிட்டு அதில் 13,343 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி என்றும் குறிப்பிடுவதிலி ருந்து, இது நிரந்தரமாக ஆண்டு முழுவதும் கிடைக்கும் உற்பத்தி ஆதாரமாக சொல்ல முடியாது என்று குறிப்பிடுவ திலிருந்து, மொத்த மின் உற்பத்தி திறனான 31,780 மெகாவாட்டிலிருந்து 13,343 மெகாவாட் திறன் கழிந்துவிட்டால் 18,347 மெகாவாட் மின் உற்பத்தி என்பது அனல், புனல், எரிவாயு, மத்திய தொகுப்பு அதீத விலையில் மின்சார கொள்முதல் ஆகியவற்றின் மூலமே 18,437 மெகாவாட் மின்விநியோகம் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று வாரிய புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதாவது:

அனல் -                                       4380 மெகாவாட்
புனல் -                                        2307 மெகாவாட்
எரிவாயு -                                  516 மெகாவாட்
மத்திய தொகுப்பு -             6152 மெகாவாட்
மின்சார கொள்முதல் -    5451 மெகாவாட்

மொத்த மின் உற்பத்தி திறன் - 18,746 மெகா வாட்டாகும். இதில் புனல் மூலம் மின் உற்பத்தி என்பது, அதாவது 2307 மெகாவாட், என்பது கோடைக் காலத்தில் தொடர்ச்சியாக மின் உற்பத்தி செய்யும் ஆதாரமாக கொள்ள முடியாது. இவைகளை பார்க்கும் போது கோடை தேவையை சமாளிக்க 16,439 மெகாவாட் மின்சாரமே கிடைக்கும் நிலையில் உள்ளது. 16,439 மெகாவாட்டில் கூட 5451 மெகாவாட் மின்சாரம் வெளிசந்தையில் அபரிமிதமான விலை கொடுத்து வாங்கும் மின்சாரமும் உள்ளடங்குமாம்.

வெளி சந்தையில் மின்சாரம் வாங்குவோரை பொறுத்தவரையில் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் 3180 மெகாவாட்டுக்கும் சென்ற ஆண்டு கோடை தேவையை சமாளிக்க முதலில் 1000மெகாவாட்டும், பின்னர் 500 மெகாவாட் மின்சாரம் வெளிசந்தையில் கொள்முதல் செய்ய மின்வாரிய ஒழுங்குமுறை அனுமதி அளித்தது. நீண்டகால ஒப்பந்தம், மின் தேவையை சமாளிக்க அனுமதி அளித்த 1500 மெகாவாட்டை சேர்த்தாலே 4680 மெகாவாட் தான். ஆனால் இவைகளை எல்லாம் மீறி 5451 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் மின்சார கொள்முதல் செய்யும் மீடியேட்டராக மின்துறை அமைச்சர் தங்கமணி விளங்குகின்றார் என்றால் மிகையல்ல. இந்த ஆண்டு கோடை காலத்தில் தமிழகத்தின் மின்சார தேவை 17,500 மெகாவாட் இருக்கும். இதை தமிழக மின் உற்பத்தி திறனை வைத்து எதிர்கொள்ள முடியும்.

தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதால், மின்வெட்டு இருக்காது என்று உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தின் இந்த ஆண்டு கோடையில் மின்தேவை 17,500 மெகாவாட் தமிழகத்தின் நிரந்தர மின் உற்பத்தி ஆதாரமான அனல், எரிவாயு, மத்திய தொகுப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டால், 10988 மெகாவாட்தான் நிரந்தரமாக கிடைக்கும் ஆதாரமாகும். மீதம் உள்ள 6512 மெகாவாட் மின்சாரத்தை ஜீபூம்பா போட்டு மின்சார உற்பத்தியை உயர்த்த உள்ளாரா அல்லது தொழிலாளர்களின் உதிரத்தால் உழைத்து உருவாக்கிய மின்வாரிய நிதியை மின்சார சந்தையில் மயானக் கொள்ளைவிட போகின்றாரா என்பது தான் நம்முன் உள்ள கேள்வி.

சென்ற ஆண்டு மின் பற்றாக்குறையை எதிர்கொள்ள மின்சார கொள்முதல் அதாவது 5451 மெகாவாட் மின்சாரம் வாங்க செலவழித்த தொகை 41,000 கோடியாகும். அந்த ஆண்டில் மொத்த வருமானமே 46,000 கோடி. இந்த ஆண்டு சுமார் தோராய கணக்கின் அடிப்படையில் பார்க்கும் போது சுமார் 6512 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டி உள்ளதால் சென்ற ஆண்டு கொள்முதலுக்காக செலவழித்த தொகையைவிட அதாவது ரூ.41,000 கோடியை விட கண்டிப்பாக கூடுதலாக செலவு செய்தால் தான் மின் தேவையை எதிர்கொள்ள முடியும்.

கடந்த 10 ஆண்டு காலமாக மின் தேவையை எதிர்கொண்ட வரலாற்றைப் பார்ப்போமேயானால் 2013-2014ஆம் ஆண்டில் மின்சார உற்பத்தி 30,543 யூனிட் கொள்முதல் செய்ததோ 58517 யூனிட்கள், 2016-2017ஆம் ஆண்டில் மின்சார உற்பத்தி 29,079 யூனிட், கொள்முதல் செய்ததோ 76,505 யூனிட் 2017-2018 ஆம் ஆண்டில் மின்சார உற்பத்தி 27,893 யூனிட் கொள்முதல் செய்ததோ 78,954 யூனிட். இந்த புள்ளி விபரங்களை பார்க்கும் போது தேவையான மின் நிலையங்களை அமைத்து மின் உற்பத்தி செய்து மின் தேவையை எதிர்கொள்வதைவிட அந்த விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து மின்சார நிதி கஜானாவை காலி செய்யும் மின் கொள்முதல் செய்யும் நபராகவே மின்துறை அமைச்சர் தங்கமணி விளங்குகிறார்.

மேலும் நிதி நிலை அறிக்கையில் மின்வாரியத்தின் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. நிதி நெருக்கடியே அரசின் கொள்கையால், தலையீட்டால் ஏற்படுகின்றதே தவிர, மற்ற வகையில் அல்ல என்பதை குறிப்பிட வேண்டி உள்ளது.  அதாவது அரசு மின்நுகர்வோருக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல் அதீத விலையில் சுயநல எதிர்பார்ப்போடு மின்சார கொள்முதல் செய்வது, மின் நுகர்வோர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் அளிப்பது, தளவாட சாமான்கள் கொள்முதல் வீணான தலையீட்டை செய்து நிதி இழப்பை ஏற்படுத்துவது, மின் உற்பத்தி நிலையங்களில் கட்டுமான பணிகள் அமைப்பதில் வீணான தலையீட்டை செய்து நிதி இழப்பை ஏற்படுத்துவது, மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுமான பணிகள் அளிப்பதில் வீணான தலையீடு, மின் நிலையங்கள் அமைப்பதை குறிப்பிட்ட காலத்தில் முடிக்கும் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்காதது. 

மின்சாரம் பரிமாற்றம் செய்யும் போது வாரியத்திற்கு வரவேண்டிய வருவாயை வசூலிப்பதில் வீணான தலையீடு போன்றவைகளால் ஏற்படும் இழப்பீட்டை அரசு தான் ஈடுசெய்ய வேண்டும். அதை முழுமையாக ஈடு செய்யவில்லை என்பதுதான் அரசின் மீது எழும் குற்றம்சாட்டாகும். ஆனால் நிதி நிலை அறிக்கையில் மாறாக மின்வாரியத்திற்கு ஏற்படும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் பணியை இந்த நிதி அறிக்கையில் செய்துள்ளோம் என்று குறிப்பிடுவது உகந்தது அல்ல.

நிதி நிலை அறிக்கையில் மின்வாரியத்திற்கு 20,115.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மின்வாரியத்திற்கு நிதி நிலை அறிக்கையில் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாகவும், அதற்கு நில பின்னணி உள்ளதாகவும் சில செய்திகள் கசிந்து உள்ளன. ஆனால் மின்சாரம் ஒரு தாய் நிறுவனம், அது அசைந்தால் மாநிலமே அசையும். அதுமட்டுமல்லாமல் மின்சாரத்துறை ஒரு சேவைத்துறையாகும்.  அதை மனதில் கொண்டு ஆளும் அரசுகள் பல சலுகைகளை, மானியங்கள் போன்றவற்றை அறிவிக்கின்றன. அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற வேண்டுமானால் அரசு இந்த அறிக்கையில் ஒதுக்கீடு செய்தது என்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போடுவது போல் தான் உள்ளது. 

மேலும் மத்திய அரசு இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கும் போது, மாநிலங்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ள அனல்மின் நிலையங்கள் மூடப்படும் என்று அறிவித்து மூடப்பட உள்ள அனல்மின் நிலையங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழகத்தில் மேட்டூர் அனல் மின் நிலையம் அலகு - 1, 840 மெகாவாட், தூத்துக்குடி அனல்மின்நிலையம் 1050மெகாவாட், வடசென்னை அனல்மின் நிலையம் 630 மெகாவாட், நெய்வேலி அனல்மின் நிலையத்தில் சில அலகுகள், அதாவது தமிழ்நாடு மின்சார வாரியம் நேரிடையாக மின் உற்பத்தியில் ஈடுபடும் அதாவது 2510 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையங்களை 2022ல் மூடும் பட்டியலில் உள்ளது என்பதை பார்க்கும் போது தமிழகத்தில் அனல்மின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 1810 மெகாவாட்டாக சுருங்கும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை மின் நுகர்வோர்களும், மின்வாரிய ஊழியர்களும் உணர்ந்து மாற்று மின்உற்பத்தி ஏற்பாட்டுக்கு தமிழக அரசை நிர்ப்பந்திக்க வேண்டி உள்ளது.

கட்டுரையாளர் : முன்னாள் தலைவர், 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)

 

;