tamilnadu

img

புதிய ஒளி காட்டிய ஸ்ரீதேவி

ஆச்சரியமும் பெருமிதமும் ஒருங்கே அமையப் பெற்ற செய்தி இது. படத்தில் உள்ள பெண் குழந்தையின் பெயர் ஸ்ரீதேவி. முதுவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் பெயர் செல்லமுத்து. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலையில் உள்ள பூச்சி கொட்டாம்பாறை செட்டில்மெண்ட்டில் வசிப்பவர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத் தில் உள்ள சாலக்குடி என்ற இடத்தில் உள்ள பழங்குடியினர் உண்டு - உறைவிட பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். ஊரடங்கு காரணமாக சொந்தஊருக்கு வந்துவிட்டார். இவர் ஊரிலிருந்து ஏதாவது வாகனத்தை பார்க்க வேண்டுமென்றாலே ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். பிறகுஅங்கிருந்து சாலக்குடி 150 கிலோ மீட்டர்தூரம். இந்த ஒரு மாணவி தேர்வு எழுதுவதற்காக கேரள மாநில அரசு வாகனத்தை அனுப்பி அவரை அழைத்துச் சென்று தேர்வு முடிந்த பிறகு மீண்டும் ஊருக்கு கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர். இதற்காக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

அதைவிட ஆச்சரியம் தமிழ்நாட்டில்முதுவர் பழங்குடியினத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் பெண்இவர் தான். அதை விட ஆச்சரியம் திருச்சூர் மாவட்டத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளதுடன் அனைத்து பாடத்திலும் ஏ+ மதிப்பெண்பெற்றுள்ளார். இதனால் அம்மாநிலஅரசு பதக்கம் வழங்கி கௌரவித் துள்ளதுடன், இம்மாணவியின் உயர் படிப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்வதாக கேரள கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். திருமூர்த்திமலையில் எந்த செட்டில்மெண்ட்டிலும் மின்சார வசதி என்பதேகிடையாது. மின்சாரமில்லாத பூச்சிகொட்டாம்பாறை கிராமத்திலிருந்து தான் ஸ்ரீதேவி எனும் தாரகை ஜொலித்திருக்கிறார். முதுவர் இனத்தில் பெண்குழந்தைகளை வெளியே அனுப்பமாட்டார்கள். பருவமெய்திய உடனேயே திருமணம் செய்து கொடுத்துவிடுவது அவர்கள் வழக்கம். உயர்ந்த மலைச்சிகரத்தில் தான் இவர்களின் குடியிருப்புகள் இருக்கிறது. அதனாலேயே தாங்கள்தான் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் என்ற பெருமிதம் அவர்களுக்கு உண்டு. அதனால் வேற்று சமூகத்தை சார்ந்த ஆண்களை பார்த்தாலே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவர். 

இப்போது சில மாற்றங்கள் ஏற்பட்டுஆரம்பக் கல்வி கற்க அனுப்புகின்றனர். இதில் பாராட்டுக்குரியவர் ஸ்ரீதேவியின் அப்பா செல்ல முத்துதான். தனது இனத்தின் கட்டுப்பாடுகளை மீறி மூத்த மகள் சிவகாமியையும் பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார். ஆனால் முடிக்கவில்லை. இரண்டாவது மகள்ஸ்ரீதேவி முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம் முதுவர் இனத்தவரிடத்தில் விழிப்புணர்வும், மாற்றமும் ஏற்படும் என்று நம்புகிறோம்.புதிய ஒளியை முதுவர் இனத்திற்கு காட்டியுள்ளார் ஸ்ரீதேவி. வாழ்த்துக்கள் மகளே!

===பெ.சண்முகம்====

;