சென்னை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பவர்கிரிட் நிறுவனமும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளன.இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் முழுமையான இழப்பீடு வழங்காமல் நிறுவனங்கள் மின்கோபுர பணிகளை காவல்துறையின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வருகின்றன. திட்டப்பணிகள் நிறைவடைந்து விட்டால் இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க எந்த உத்தரவாதமும் இல்லாமல் இருக்கிறது.
நிலம், மரங்கள், பயிர்கள், கட்டிடங்கள்ஆகியவற்றிற்கு அரசு தீர்மானித்த தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் முழுமையாக செலுத்திய பிறகே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். கிணறுகளுக்கு இழப்பீடு தீர்மானிக்க வேண்டுமென்று தமிழக மின்துறை அமைச்சரிடம் நேரில் வற்புறுத்திய பிறகும் அதற்கான அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை.எனவே, மின்கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து விதமான பாதிப்புகளுக்கும் முழுமையான இழப்பீடு உடனடியாக வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடு வழங்கப்படாத விவசாயிகளின் நிலத்தில் மின்கோபுரம் தொடர்பான பணிகள் செய்வதை நிறுத்துவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் செப்டம்பர்-7 ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த இயக்கம் நடைபெறவுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.