tamilnadu

img

விதை நெல்லை விற்கும் விபரீதம் - ஜி.ராமகிருஷ்ணன்

பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க டிசம்பர் மாதம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் அணி திரள்வீர்!

சில நாட்களுக்கு முன் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் வெளியிட்ட ஒரு அறிவிப்பு, அடுத்தடுத்த வேறு பரபரப்பான நிகழ்வுகளால் பலரின் கவனத் திற்கு வராமல் போயிருக்கும் (இதையெல்லாம் கவனிக்கக் கூடாது என்பதற்காகவும்தானே அந்தப் பரபரப்புகள்!)  பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், ஷிப்பிங் கார்ப்ப ரேசன், கன்டெய்னர் கார்ப்பரேசன், தெரி நீர்மின் உற்பத்தி கார்ப்பரேசன், வடகிழக்கு மின்சக்தி கார்ப்பரேசன் ஆகிய வற்றைத் தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ளதாக அவர் அறிவித்தார். இவையனைத்தும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்.  மத்திய அரசு எதிர்கொள்ளும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகத்தான் இந்த முடிவு என்கிறார் அமைச்சர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை பொதுத்துறை நிறுவனங்கள். அவற்றைத்  தனி யாருக்கு விற்பது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கப்படுவதில் போய்த்தான் முடியும்.

வளர்ச்சியின் அடித்தளம்

பொதுவாக கச்சா எண்ணெய், சுத்திகரிப்பு, எரிவாயு, உருக்கு, மின்சாரம், நிலக்கரி, சிமெண்ட், உரம் ஆகிய 8 தொ ழில்களை பொருளாதாரத்தின் முதன்மையான தொழில்கள் என்று அரசு அடையாளப்படுத்துகிறது. இதன் பொருள்,  ஒட்டுமொத்தத் தொழில் வளர்ச்சிக்கு இவை அடிப்படையா னவை என்பதே.  இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள்தான் கடந்த 72 ஆண்டுகளில் நமது தேசம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகின்றன.  தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல,  இந்நிறுவனங்கள் வரியாக, ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் செலுத்தி உள்ளன. இம்மாதிரியான பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனி யாருக்கு விற்கக்கூடாது. அப்படி விற்பது விதைநெல்லை வீசியெறியும் விபரீதமன்றி வேறென்ன? 

நட்டத்தில் இயங்குபவை அல்ல!

மேற்கண்ட பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங் குபவை அல்ல. இவையனைத்துமே லாபமீட்டி வருபவை.  பாரத் பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவ னத்தின் கடந்தாண்டு வருமானம் ரூ.3,37,622கோடி. லாபம் மட்டும் ரூ.11,964 கோடி. (மத்திய அரசுக்கு செலுத்திய வரி மட்டும் ரூ.40,347 கோடி).

  • கன்டெய்னர் கார்ப்பரேசன் நிறுவனத்தின் வருவாய் ரூ.7,214 கோடி. லாபம் ரூ.1,789 கோடி. 
     
  • ஷிப்பிங் கார்ப்பரேசன் நிறுவனத்தின் கடந்தாண்டு வருமானம் ரூ. 4,144 கோடி. லாபம் மட்டும் ரூ.611.24 கோடி. 
     
  • வடகிழக்கு மின்சக்தி நிறுவனத்தின் கடந்தாண்டு வருவாய் ரூ.1,632 கோடி. லாபம் ரூ. 293 கோடி. 
     
  • தெரி நீர்மின்உற்பத்தி நிறுவனத்தின் கடந்தாண்டு வருவாய் ரூ.272.8 கோடி. லாபம் ரூ.77.1 கோடி. 

இவ்வாறு அரசின் வருவாய்க்கும்,நாட்டின் பொருளா தாரத்திற்கும் முதுகெலும்பாக விளங்குகிற இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது பொருளாதார வளர்ச்சியை கடுமையாக முடக்கிவிடும். 

பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி

சுதந்திரமடைந்த 1947ல் இந்தியாவினுடைய பெட்ரோலிய பொருட்களின் தேவை 27.2 லட்சம் டன். இந்தத் தேவை பெரும்பான்மையாக இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்பட்டது. காரணம் அன்றைய உள்நாட்டு சுத்திகரிப்பு திறன் 3 லட்சம் டன் மட்டுமே. அப்போது பெட்ரோலியத்தொழில் முழுக்க முழுக்க பர்மா ஷெல், இஎஸ்எஸ்ஓ, கால்டெக்ஸ் ஆகிய மூன்று வெளிநாட்டுப் பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.  எண்ணெய், எரிவாயு  உற்பத்திக்காக  பல பொதுத்துறை நிறுவனங்களைத் தொடங்கிய பிறகோ நிலைமை முற்றிலும் மாறியது. 

தற்போது இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.20 கோடி டன். இதில் 2.29 கோடி டன் அளவுக்குப் பொ துத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. தனியார் கம்பெனிகள் உற்பத்தி செய்வது 90.6 லட்சம் டன் மட்டுமே.  இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் 14.88 கோடி டன் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு; 9.6 கோடி டன் தனியார் நிறுவனங்களின் பங்கு.  எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் எரிசக்திதான் தொழில், விவசாயம், சேவைத்துறை, ஏன் இந்திய பொருளா தாரத்திற்கே ரத்த நாளமாக விளங்கியது, விளங்கி வருகிறது.

தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக...

கச்சா எண்ணெய் உற்பத்திக்காக ஓஎன்ஜிசி நிறுவனம் ஆய்வு செய்து எண்ணெய் படுகைகளைக் கண்டு பிடித்து 48 எண்ணெய் கிணறுகளை  அமைத்தது. ஆனால், அந்தக் கிணறுகள் அனைத்தையும் மத்திய அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டுத் தனியார் கம்பெனிகளுக்குத் தாரை வார்த்து விட்டது. மேலும், இந்துஸ்தான் பெட்ரோ லியம் நிறுவனத்தினுடைய ரூ.40,000 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகள் அனைத்தையும் ஓஎன்ஜிசி நிறு வனம் வாங்கிக் கொள்ள மத்திய அரசு கட்டளையிட்டது. இதனால் மத்திய அரசுக்கு ரூ. 40,000 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால் ஓஎன்ஜிசி நிறுவனம் வேறு பல பகுதிகளில் எண்ணெய் எரிவாயு பணிகளை  விரிவாக்கம் செய்ய முடியாமல் நெருக்கடிக்கு உள்ளானது. இந்த நெருக்கடியைச் சாக்கிட்டுத் தனியார் வந்து புகுவதற்கு வழிசெய்யப்படும் என்று விளக்கத் தேவையில்லை.

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உள்நாட்டு, வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு சாதகமான கொள்கையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறபோதிலும், இந்தியாவினுடைய பெட்ரோலிய பொருட்களின் தேவையை கணிசமான அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களே பூர்த்தி செய்து வருகின்றன. குறிப்பாக  பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 2.75 கோடி டன் சுத்திகரிப்பு செய்கிறது. மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி வரி செலுத்தவதோடு, ரூ. 11 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டித் தருகிறது. இந்த நிறுவனத்தை முழுவதுமாக தனியாருக்கு விற்றுத் தன்னுடைய நிதி நெருக்கடியை ஈடுகட்டப் போவதாக மத்திய அரசு கூறுவதை என்னவென்பது? இத்னுடன் ரூபாய் 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்துஸ்தான் பாரத் எண்ணெய் நிறுவனத்தினுடைய பங்குகளை வாங்கியது ஓஎன்ஜிசி;  தற்போது அப்பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட மத்திய அரசு நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது. 

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தையும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி விட்டால் பொதுத்துறை நிறுவனங்களை விட ரிலையன்ஸ் நிறுவனம் கூடுதலாக எண்ணெய் சுத்தி கரிப்பு செய்யும் வாய்ப்பு உருவாகும். இது எதிர்காலத்தில் எண்ணெய் விலையை ரிலையன்ஸ் கம்பெனி தீர்மா னிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் ஆபத்து உருவாகும்.

நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் முடிய மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.5.47 லட்சம் கோடி.  பற்றாக் குறையைப் போக்க ரிசர்வ் வங்கியை வற்புறுத்தி ரூ. 1.76 லட்சம் கோடி மத்திய அரசு பெற்ற கதை நமக்குத்தெரி யும். அதேவேளையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரிச் சலுகையை இதே அரசு அளித்தது. ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு கார்ப்பரேட் நிறுவ னங்களின் வராக்கடனை ரத்து செய்து சலுகையளித்த தையும் அனைவரும் அறிவோம். மக்கள் நலத்திட்டங்க ளுக்கு நிதி ஒதுக்கீட்டை வெட்டி சுருக்கி கார்ப்பரேட் கம்பெனி களுக்கு கோடி கோடியாய் சலுகை அளித்து இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை பொதுத்துறை நிறுவனங்க ளை விற்பதன் மூலம் ஈடுசெய்ய மத்திய அரசு முடி வெடுத்துள்ளது.

1991ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் ஆட்சியாளர்களும், பாஜக ஆட்சியாளர்களும்  மத்திய அரசின் நிதிப் பற்றாக் குறையை போக்குவதற்காக என பொதுத்துறைப் பங்கு களை விற்று வந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியாவது நட்டத்தில் இயங்கிய நிறுவனங்களை முற்றாக விற்பனை செய்தது. பாஜக அரசோ கோடி கோடியாய் லாபமீட்டித் தருகிற பொதுத்துறை நிறுவனங்களையே விற்று வருகிறது. 

தடையை மீறி போராட்டம்

பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களைச் சார்ந்த 21 தொழிற்சங்கங்கள் மேற்கண்ட மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கையை எதிர்த்து நவம்பர் மாதம் 28 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. இப்போராட் டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தாராளமய பொருளாதாரக் கொள்கை துவங்கிய காலத்திலி ருந்து (1991) நீதிமன்றங்களும் பெரும்பான்மையாகவே இக் கொள்கைக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்து வருகின்றன.

சிபிஎம் அழைப்பு

பாரத் பெட்ரோலியம் நிர்வாகம் தனியார் கம்பெனிக்கு கை மாறுவதால் ‘மகாரத்னா’ அந்தஸ்தைப் பெற்ற இந்நிறு வன தொழிலாளர்களின் பணி நிலைமையில் எந்த மாற்ற மும் ஏற்படாது என பொது மேலாளர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாதிட்டிருக்கிறார். பாரத் பெட்ரோலியம் தனி யாருக்கு சென்று விட்டால் அது மகாரத்னாவாக இருக்காது, அந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு இருக்காது. மேலும் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல சலுகைகளும், உரிமைகளும் பறிக்கப்படும் என்பதை சொல்லத் தேவையில்லை. இருப்பினும் தடையை மீறி தொ ழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவிருக்கிறார்கள்.

இத்தகைய மத்திய அரசின் தேச விரோத கொள் கையை எதிர்த்து டிசம்பர் மாதம் முழுவதும் நாடு தழுவிய மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கட்சி அணிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.  பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்பட மத்திய தொழிற்சங்கங்கள் மிகப் பிரம்மாண்ட மான முறையில் ஜனவரி 8 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கும் தயாராகி வருகின்றன.  இத்தகைய தொடர்ச்சியான போராட்டங்களை மாபெரும் வெற்றி பெறச் செய்ய களமிறங்குவோம்.





 

;