tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-5 : கிடைத்தது அவர்களுக்கான வேதப் புத்தகம்....

1940ல் ஹெட்கேவார் காலமானதும் ஆர்எஸ்எஸ்சின் சர்சங்சலக்காக ஆனவர் கோல்வால்கர். 1973 வரை  அதன் உயர் தலைவராக இருந்தவர் அவரே. “குருஜி” என்றே அவரை அழைப்பார்கள் சங் பரிவாரத்தினர். காரணம் அவர்களின் சித்தாந்தத்தை ஒழுங்க மைத்துக் கொடுத்தவர் அவர். இந்தப் பதவிக்கு வருவதற்கு முன்பே, 1939லேயே அவர் எழுதியது “நாம் அல்லது நமது தேசியத்தின் வரையறை” எனும் நூல். அதன் காரணமாகவும் தனது இடத்திற்கு அவரை தேர்வு செய்தார் ஹெட்கேவார் எனலாம். இதைத்தான் “ஆர்எஸ்எஸ்சுக்கு கிடைத்தது ஒரு வேதப்புத்தகம்” என்கிறார் நூரானி.கூகுளில் கிடைக்கும் இந்த நூலைப் படித்தேன். ஏழு அத்தியாயங்களும் ஒரு முடிவுரையும் உள்ளன. அதன் முகவுரையில் “ஜி. டி. சாவர்க்கரின் ‘ராஷ்டிர மீமன்சா’ எனக்கு உத்வேகமும் உதவியும் தந்த ஒரு நூல். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் கோல்வால்கர். இதிலிருந்து இந்த நூல், சிலர் கூறுவதுபோல அந்த நூலின் சுருக்கம் அல்ல, மாறாக இவரின் சொந்த தயாரிப்பு என்பது உறுதியாகிறது.

தேசம் என்பதை வரையறை செய்யும் வேலையில் இறங்கி இப்படியொரு இலக்கணத்தை தந்திருக்கிறார்: “தேசம் எனும் கருத்தியலில் நாடு, இனம், மதம், கலாச்சாரம், மொழி எனும் அவசியமான, தவிர்க்க முடியாத ஐந்து கூறுகள் உள்ளன. இந்த ஐந்தும் இணைந்து ஒன்றாக இருக்கும்போது தேசம் இருக்கிறது. இதில் எந்தவொன்று அழிந்தாலும் தேசமே அழிந்து போகும்”.தேசத்திற்கான அவசியமான கூறுகளில் மதத்தைச் சேர்த்துள்ள தந்திரத்தை நோக்குங்கள். இதன்படி ஒரு மதத்தவர் எல்லாம் ஒரு தேசத்தவர் ஆகிறார்கள். உலகம் அப்படியா இருக்கிறது? ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒரு நாடாகவா இருக்கிறார்கள்? மத்திய கிழக்கு முஸ்லிம்கள் எல்லாம் ஒரு நாடாகவா இருக்கிறார்கள்? ஆசியாவின் பௌத்தர்கள் எல்லாம் ஒரு நாடாகவா இருக்கிறார்கள்? ஒரே மதத்தைக் கொண்டுள்ள மேற்கு பாகிஸ்தானும் கிழக்கு பாகிஸ்தானும்கூட தனித்தனி நாடுகளாகிப் போயினவே. இந்துக்கள் மட்டும் எப்படி ஒரு தேசமாக முடியும்? இந்துக்கள் அதிகம் உள்ள இந்தியாவும், நேபாளமும்கூடத் தனித்தனி நாடுகளாகத்தானே உள்ளன. ஆக, உலக யதார்த்தத்திற்கு ஒவ்வாத ஓர் இலக்கணத்தை தந்திருக்கிறார் கோல்வால்கர்.

இந்தியாவில் உள்ள இந்துக்கள் எல்லாம் ஒரு தேசம் என்கிறார். “சரித்திரத்திற்கு முந்திய காலந்தொட்டு இந்த நாட்டில் வாழ்வது புராதன இந்துஇனம். இதற்கு பொது கலாச்சாரம், பொது தாய்மொழி, பொது வழமைகள் உள்ளன. இந்த மகத்தான இந்து இனம் சிறப்பான இந்து மதத்தை போதிக்கிறது. இந்த மதத்தால் வழிநடத்தப்படும் இந்த இனமானது முசல்மான்கள் மற்றும் ஐரோப்பியர்களின் சீரழிந்த ‘நாகரிகங்களுடன்’ ஏற்பட்ட தொடர்பையும் மீறி கடந்த ஆயிரம் ஆண்டுகளாக உலகின் உன்னதமானதாகத் திகழ்கிறது” என்று பிரகடனப்படுத்துகிறார்.

அதாவது ஒரு தேசம் என்பதற்கு இவர் தந்து கொண்ட இலக்கணப்படியான அந்த ஐந்து கூறுகளும் இந்துக்களுக்கு உள்ளதாகவும், ஆகவே அவர்கள் ஒரு தேசம் என்கிறார். இது எவ்வளவு அபத்தம் என்பதற்கு “இந்து” எனும் சொல் நடப்புக்கு வந்ததே ஓராயிரம் ஆண்டுகளாகத்தான் எனும் ஓர் உண்மை போதும். அந்தச் சொல் 4 வேதங்களிலோ, 2 இதிகாசங்களிலோ, 18 புராணங்களிலோ, மனு உள்ளிட்ட தர்ம சாஸ்திரங்களிலோ கிடையாது. பிறகு எப்படி “புராதன இந்து இனம்” என்கிறார்? ஒரு இடத்தில் “இந்து, அதாவது ஆரிய இனம்” என்று சொல்லியிருக்கிறார். தற்போது அந்தச் சொல் புழக்கத்தில் இல்லை என்பதால்தான் இந்து இனம் என்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படியெனில் இவர் கூறுகிற இந்து தேசம் என்பது ஆரிய தேசமே!
இந்துக்களின் பொது தாய்மொழி எது என்று அவர் அடையாளம் காட்டும்போது அது மேலும் துலக்கமாக வெளிப்பட்டு விடுகிறது.

கோல்வால்கர் எழுதுகிறார்: “மொழி வித்தியாசங்களால் இங்கே பல ‘தேசங்கள்’ இருப்பதாக ஒரு தோற்றம் உள்ளது. உண்மையில் அப்படி இல்லை. சமஸ்கிருதம் எனும் ஒரு மொழி உருவாக்கியவைதான் அந்தப் பல ‘மொழிகள்’. அவை தாய் மொழியாம் சமஸ்கிருதத்தின் பிள்ளைகள். சமஸ்கிருதம் கடவுள்களின் மொழி. அது இமயத்திலிருந்து தெற்கு சமுத்திரம் வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை அனைவருக்கும் பொதுவானது. அனைத்து நவீன சகோதர மொழிகளும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை, நடைமுறையில் ஒன்றுதான். எனவே தேசத்திற்குத் தேவையான ஒரு மொழி இருக்கிறது”.இந்தியா பல மொழிவழி தேசியஇனங்களைக் கொண்ட ஒரு நாடு எனும் யதார்த்தத்தை மறுக்க தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளையும் சமஸ்கிருதத்தின் பிள்ளைகளாக்கிவிட்டார். சமஸ்கிருத மொழிக் குடும்பம் வேறு, திராவிட மொழிக் குடும்பம் வேறு என்று தெளிவாக நிரூபித்திருக்கிறார்கள் மொழியியல் வல்லுநர்கள். கோல்வால்கரோ சமஸ்கிருதத்திலிருந்துதான் இவையும் பிறந்தன என்று ஒரே போடாகப் போடுகிறார்! போட்டு, இந்துக்களின் பொது தாய்மொழி சமஸ்கிருதம் என்கிறார்! அப்படியெனில் ஏன் அதை இந்துக்கள் அனைவருக்கும் சொல்லித் தரவில்லை? உயர் வருணத்துப் பெண்களுக்குகூட சொல்லித் தரவில்லையே. தாய்மார்கள் அறியாத தாய்மொழி. அபத்தத்தின் உச்சம், தமிழ் உள்ளிட்ட பிற தேசிய மொழிகளைத் தரம் தாழ்த்தும் அக்கிரமம்.

தேசியத்தின் வரையறைக்கு மதத்தையே பிரதான கூறாக்கியதால் வந்த வினை இது. இதனால் பிற மதத்தவரை அந்த தேசியத்திற்கு அப்பால் இருத்தும் விபரீதமே மிச்சமானது. “இந்துஸ்தானம் எனும் இந்த நாட்டில் இந்து மதம், இந்து கலாச்சாரம், இந்து மொழி என்பவற்றைக் கொண்ட இந்து இனம் உள்ளது. அது தேசம் எனும் கருத்தியலை முழுமையாக்குகிறது. இதற்கு வெளியே இருக்கும் அனைவரும் மெய்யான தேசிய வாழ்விற்கு வெளியே இருப்பவர்கள். அவர்கள் எல்லாம் தேசிய லட்சியத்திற்கு துரோகிகள் மற்றும் எதிரிகள் அல்லது பதமான நோக்கில் சொன்னால் முட்டாள்கள்” என்கிறார் கோல்வால்கர்.இந்து மதத்தை ஏற்காதவர்கள் எல்லாம் தேசியம் என்பதற்குள் வரவே மாட்டார்கள். காரணம் இவரின் தேசியம் அந்த ஒற்றை மதத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே இதர மதத்தவர் எல்லாம் எதிரிகள். அவர்கள் இந்த தேசத்தில் இருக்க வேண்டும் என்றால் இரண்டே வழிகள்தான் உண்டு என்கிறார். அவை: “இந்துஸ்தானத்தில் உள்ள அந்நிய இனங்கள் இந்து கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்க வேண்டும், இந்து மதத்தை மதிக்கவும் போற்றவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது தங்களின் தனி இருப்பைக் கைவிட்டு இந்து இனத்தில் இணைந்திட வேண்டும். அல்லது இந்து தேசத்திற்கு முழுமையாக அடங்கியவர்களாக, குடியுரிமைகள்கூட இல்லாதவர்களாக, எந்த உரிமையும் கோராதவர்களாக இந்த நாட்டில் இருக்கலாம். இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை”.

இந்தியாவின் சிறுபான்மை மதத்தவருக்கு இவர் காட்டும் வழியைப் பார்த்தீர்களா! சுயமரியாதை இல்லாதவர்களாக, சொந்த குடியுரிமை இல்லாதவர்களாக, நடைப்பிணங்களாக அலைய வேண்டும் என்கிறார். இந்தக் காலத்தில் சிஏஏ எனும் குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தது என்றால், என்பிஆர்- என்ஆர்சி எனப் பேசினார்கள் என்றால் அதன் சித்தாந்த ஊற்றுக்கண் இதில் உள்ளது.பிற மதத்தவருக்குத்தானே பிரச்சனை என்று எண்ணி விடக் கூடாது. இந்து தேசியம் என்பது இந்துக்கள் அனைவருக்குமான தேசியம் அல்ல. அது அந்தப் பெயரில் கட்டமைக்கப்படும் உயர்வருணத்தவரின் தேசியம். அதனால்தான் இந்த மண்ணின் புராதன இலக்கியங்கள் தேசம் பற்றி இப்படி சொல்லியிருப்பதாகக் கூறுகிறார் கோல்வால்கர்: “தேசத்திற்கான ஒரு நல்ல நாடு என்பதில் இந்து மதம் வகுத்துள்ள சமுதாயத்தின் நான்கு வகுப்பார் இருக்க வேண்டும். அங்கே இந்து மதம் மற்றும் கலாச்சாரம் உத்தரவிட்டுள்ள சமூகச் சட்டங்களை ஏற்காத மிலேச்சர்கள் இருக்கக் கூடாது. வர்ணங்கள் மற்றும் ஆசிரமங்களைக் கொண்ட மக்கள் செழிப்பாக இருக்கும் பூமியே அந்த தேசம்”.அதாவது வருணாசிரமத்தை, பிறப்பின் அடிப்படையிலான பேதத்தை வாழ்வு முறையாகக் கொண்டதே அந்த தேசியம்! அப்படியெனில் பிற மதத்தவர் மட்டுமல்ல சூத்திரர்கள் மற்றும் பஞ்சம இந்துக்களும் சாதியச் சட்டகத்திற்குள் அடங்கி வாழ வேண்டியவர்களே. இந்து தேசியம் என்றபெயரில் அவர் முன்வைத்திருப்பது மனுவாத தேசியமே. இதுதான் சங் பரி வாரத்திற்கு கிடைத்துள்ள அந்த வேதப் புத்தகத்தின் சாரம்.

இன்னும் சந்தேகம் இருந்தால் கோல்வால்கரின் இந்த அழைப்பை செவிமடுங்கள்: “உலகின் முதலாமான, மகத்தான சட்டம் தந்தவரான மனு தனது சட்டத்தை வகுத்தபோது கூறினார்: அனைவருக்கும் முந்திப் பிறந்த பிராமணர்களின் புனித காலடியில் தங்களது கடமைகளை அறிந்து கொள்ள உலகமாந்தர் அனைவரும் வரட்டும்”.

===அருணன் ===

(தொடரும்)

 

;