tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-12 : சம்பூகன் மண்டலை வீழ்த்த மீண்டும் ராமர்!

நூரானியின் நூலில் “ராமரின் பெயரால் அதிகாரம்” என்றொரு அத்தியாயம் உள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி உள்ள இடமே ராமர் பிறந்த இடம், அங்குதான் அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பதை தனது வகுப்புவாத அரசியலுக்கான நிகழ்ச்சிநிரலின் மிக முக்கியமான கூறாகக் கொண்டது ஆர்எஸ்எஸ். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்து வாக்கு வங்கியை உருவாக்கவும், அதற்கு ராமரைப் பயன்படுத்தவும் அது தீர்மானித்தது. ராமர் மீதான பக்தியினால் அந்த இயக்கத்தை அது துவக்கவில்லை. பக்திதான் காரணம் என்றால் மசூதியை அவர்கள் குறி வைத்திருக்க மாட்டார்கள் அல்லவா? வேறுவொரு இடம் பார்த்து எப்போதோ கட்டியிருப்பார்கள். பாபரா? ராமரா? என்று கேள்வி எழுப்பினால்தான் அவர்கள் விரும்பும் மதவெறி அரசியல் வேர்விடும் என்று கணக்குப் போட்டு களத்தில் இறங்கினார்கள்.

விஸ்வ இந்து பரிஷத்திற்கு இந்த வேலை ஒதுக்கப்பட, அது பஜ்ரங் தள் எனும் ஓர் இளைஞர் பிரிவை உருவாக்கியது. அதாவது ஆர்எஸ்எஸ்சுக்கு ஒரு பேரன் பிறந்தது. அந்த பஜ்ரங் தள்ளின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது: “ராம்-ஜானகி ரத யாத்திரையை நடத்த 1984ல் விஎச்பி முடிவு செய்தது. அந்த யாத்திரைக்கு பாதுகாப்பு தர பஜ்ரங் தள் அமைக்கப்பட்டது. அதுவும் ராம ஜென்ம பூமி இயக்கத்தில் இணைந்து கொண்டது. இந்து சமுதாயத்தை அவமதிக்கும் எந்தவொரு சின்னத்தையும் சிறிதும் பொறுத்துக் கொள்ள அது தயாராயில்லை. நாட்டையும் தர்மத்தையும் காக்க எந்தவகை தியாகத்தையும் செய்ய அது தயாரானது”. தர்மத்தை காப்பது என்ற பெயரிலும், அதற்காக தியாகம் செய்வது என்ற பெயரிலும் எத்தகையதொரு பட்டாளத்தை ஆர்எஸ்எஸ் உருவாக்கியது என்பதை எளிதில் உணரலாம். பஜ்ரங் தள் என்பதன் நேரடி அர்த்தம் அனுமன் படை. அது எப்படி லங்கா தகனம் நடத்தியது என்பதை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இத்தகைய தயாரிப்போடு இருந்த நிலையில்தான் மத்தியில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வி.பி.சிங் பிரதமரானார் 1989ல். அவருக்கு ஒருபுறம் கம்யூனிஸ்டுகளும் மறுபுறம் பாஜகவும் வெளியிலிருந்து ஆதரவு தந்தார்கள். அந்த அரசுதான் பி.பி. மண்டல் தலைமையிலான கமிஷனின் பரிந்துரையாம் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை மத்திய அரசு பணிகளில் அமலாக்குவதாக அறிவித்தது. அவ்வளவுதான், ஆர்எஸ்எஸ் வட்டாரம் கொதித்தெழுந்தது.

அதனது ஏடான ஆர்கனைசர் (26-8-1990) ஆத்திரத்தோடு எழுதியது: “தனது 150 ஆண்டு கால அந்நிய ஆட்சியில் பிரிட்டீஷாரால் சாதிக்க முடியாததை வி.பி.சிங் ஓராண்டுக்குள் சாதிக்கப் போவதாக மிரட்டுகிறார். விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஹெட்கேவார் காலத்திலிருந்து செய்யப்பட்ட இந்து சமூகத்தை ஒன்றுபடுத்தும் மகத்தான பணியை இவர் சிதைக்கப் பார்க்கிறார். சமுதாயத்தை மண்டல்மயமாக்குவதன் மூலம் இந்துக்களை முற்பட்டோர், பிற்பட்டோர், ஹரிஜனங்கள் என்று பிளக்கப் பார்க்கிறார்”.எப்படி? இந்து சமூகத்தில் சாதிரீதியிலான பிளவுகளே இல்லையாம், எல்லாம் இப்பத்தான், மண்டல்குழு பரிந்துரையை அமலாக்குவதன் மூலம்தான் வருகிறதாம்! சாதியம் இருப்பதால்தான் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது எனும் யதார்த்தத்தை அவர்களின் மனுவாத மனோ நிலை ஏற்க மறுத்தது. அவர்களின் ஏடு தொடர்ந்துகூறியது: “இடஒதுக்கீடு அரசியலானது சமூகக் கட்டமைப் புக்குச் செய்யும் பேரழிவு கற்பனைக்கும் அடங்காதது. அது திறமையற்றவர்களுக்கு சகாயம் காட்டுகிறது, திறமையானவர்கள் வெளியேறுவதை ஊக்குவிக்கிறது, சாதிப்பிளவை கூர்மையாக்குகிறது”.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டு அதற்குப் பிறகு வெளிப்படுவதுதான் மெய்யான திறமை அல்லது திறமையின்மை. வருண அடிப்படையில் சூத்திரர்கள் பஞ்சமர்களுக்கு கல்வி கற்கும் உரிமை இல்லை என்று பல நூறு ஆண்டுகளாகஅடக்கி வைத்துவிட்டு திறமையை அளக்க முற்படுவது காலை ஒடித்துவிட்டு ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறச் சொல்லும் கயமைத்தனம். அப்படியும், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதி உள்ளவர்களில்தான் பிற்படுத்தப்பட்டோர் அந்த ஒதுக்கீட்டிற்கு தேர்வு செய்யப்படுவர். இதெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல இந்த இடஒதுக்கீட்டை வன்மையாக எதிர்த்தது ஆர்எஸ்எஸ். அதன் மூலம் அது அனைத்து இந்துக்களுக்கான அமைப்பு அல்ல, மனுவாதிகளுக்கானது என்பது புரிபட்டது.

எழுத்தோடு நிற்கவில்லை. தில்லியில் தனது மாணவர் பிரிவாகிய ஏபிவிபியைத் தூண்டிவிட்டு மாணவர்களைக் கலகத்தில் இறக்கி விட்டது. அதில் பெரும் கொடுமை அவர்களை தீக்குளிக்க வைத்து தியாகிகளாக்கியது. இவர்கள்தாம் போராட்டங்களே கூடாது என்று பிறருக்கு புத்தி சொல்வார்கள். ஆனால் தங்களது சுயநலனுக்கு ஆபத்து என்றதும் பெரும் போராளிகளை உருவாக்கினார்கள். தலைநகரம் பற்றி எரிந்தது. அன்றைய நிலைபற்றி அத்வானி ஆய்வாளர் கிறிஸ்டோபர் ஜாப்ரிலாட்டுக்கு பின்னாளில் கொடுத்த பேட்டி:

“மண்டல் விவகாரம் எனக்குப் பெரும் அழுத்தத்தை கொடுத்தது-குறிப்பாக எனது தொகுதியாகிய புதுதில்லியில். அங்கே தீக்குளிப்புகள் நடந்தன. எனது வீட்டுக்கு தினசரி பெற்றோர்கள் வந்தார்கள் ‘ஏன் இந்த அரசை ஆதரிக்கிறீர்கள்? ஆதரவை வாபஸ் பெறுங்கள்’ என்றார்கள். மண்டல் விவகாரத்தில் வாபஸ் பெறுவது அரசிற்கு பெரும் பலனைத் தந்துவிடும் என்று நான் உணர்ந்தேன். நான் சொன்னேன்: ‘இந்த அரசாங்கம் மோசமாக நடக்கிறது. என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உரிய நேரத்தில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்”. (இந்து தேசிய இயக்கமும் இந்திய அரசியலும்:1925-1990) சங் பரிவாரத்தினரின் நயவஞ்சகத்தைப் பாருங்கள். பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கூடாது என்பதே அவர்களின் கொள்கை, ஆனால் அதற்காக அரசைக் கவிழ்த்தால் பிற்படுத்தப்பட்டோரின் வாக்கு போய்விடும்; எனவே “உரிய நேரத்தில் நடவடிக்கை”! அந்த உரிய நேரம்தான் அயோத்தி ராமர் கோயிலுக்காக அத்வானியின் ரத யாத்திரை. மண்டல் அமலாக்க அறிவிப்பை 1990 ஆகஸ்டு 7ல் வெளியிட்டார் வி.பி.சிங். செப்டம்பர் 25ல் அயோத்தி நோக்கி ரதத்தில் கிளம்பினார் அத்வானி! இது பற்றி வி.பி. சிங் கேட்டதற்கு “நீங்கள் மண்டலைத் தூக்கினீர்கள், நாங்கள் கமண்டலைத் தூக்கினோம்” என்றார் வாஜ்பாய்! இவ்வளவுதான் இவர்களின் ராம பக்தி. மண்டல் எனும் சம்பூகனை வீழ்த்தவே மீண்டும் ராமரின் தயவை நாடினார்கள்!

எதிர்பார்த்தபடி யாத்திரை சென்ற பாதை எங்கும் மதக்கலவர அபாயம் எழுந்ததால் அத்வானியைக் கைது செய்தார் பீகார் முதல்வர் லாலு பிரசாத் அக்.23 அன்று. இதற்காகக் காத்திருந்தது போல அன்றே அரசுக்கு தந்துவந்த ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை ஜனாதிபதி வெங்கட்ராமனிடம் கொடுத்தார் வாஜ்பாய். இப்படியாக சூத்திரர்களுக்காக வரலாற்றில் ஒரு ஷத்திரியர் தனது பதவியை இழந்தார்! ஆம், வி.பி.சிங் ராஜ வம்சத்தில் பிறந்தவர்.சமூக நீதிக்கு எதிராக ராமர் கோயில் பிரச்சனையைத் தீவிரமாக்கியவர்கள் புலி வாலைப் பிடித்தவர்களானார்கள். பாபரா, ராமரா என்று கேள்வியை எழுப்பிய பிரச்சாரம் முடிவில் பாபர் மசூதி இடிப்பில் முடிக்கப்பட்டது. அதை திட்டமிட்டே செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் அன்றைய பிரதமர் நரசிம்மராவிடம் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி தனது சுயசரிதையில் அத்வானி எழுதியிருப்பது: “ராஜு பையா(ஆர்எஸ்எஸ் தலைவர்)ராவிடம்கூறினார்: ‘அயோத்தியில் லட்சக்கணக்கான மக்கள் கூடப் போகிறார்கள். நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு கரசேவை நடக்கும்படிச் செய்ய நாங்கள் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு அதற்குள் வராவிட்டால் என்னாகும்? ஏதேனும் மோசமானது நடந்தால் என்னாகும்? அப்படி நடக்காது என்று நம்புகிறேன். அதனால்தான் டிசம்பர் 6க்குள் ஒரு தீர்ப்பை வாங்குவதன் அவசியத்தை அரசுக்கு வலியுறுத்துகிறேன்”.

மோசமானது நடக்கும் என்று பிரதமரிடம் கோடி காட்டியதை நோக்குங்கள். அப்போதும் அதைத் தடுக்காத பிரதமரின் லட்சணம் தனிக் கதை. ஆனால் ஏதோ கரசேவகர்களால் அந்த இடிப்பு வேலை யதேச்சையாக நடந்தது அல்ல என்பது நிச்சயம். அவ்வளவு பெரிய மசூதியை அப்படியெல்லாம் சாதாரணமாக இடித்துவிட முடியாது என்பது எளிய பொது அறிவு. அதற்கான திட்டமிட்ட ஏற்பாடு, ஒத்திகை எல்லாம் நடந்திருக்கும் எனப் பலரும் ஊகித்ததையும், கண்ணாரக் கண்ட சில காட்சிகளை சிலர் விவரித்ததையும் சட்டென்று ஒதுக்கிவிட முடியாது. சங் பரிவாரம் கச்சிதமாகத் தனது வேலையை முடித்தது. மசூதியின் அந்த மூன்று டூம்கள் ஒவ்வொன்றாகச் சரிந்தன. மதநல்லிணக்க மரபு, சட்டத்தின் ஆட்சி, சிறுபான்மையோரின் நம்பிக்கை எனும் மூன்றும் மடமடவென சரிந்தன.

\டிசம்பர் 7 அன்று ஆர்எஸ்எஸ் தடைசெய்யப் பட்டது. அதாவது மூன்றாவது முறையாக. கூடவே விஎச்பி, பஜ்ரங் தளமும் தடைசெய்யப்பட்டன. அரசின் அறிவிக்கைகள் கூறின: “சில மத வகுப்பார் அந்நிய மதங்களைக் கொண்டிருப்பதால் அவர்களை இந்திய குடிமக்களாகக் கருத முடியாது எனும் கோட்பாட்டைக் கொண்டது ஆர்எஸ்எஸ். பஜ்ரங் தளத்தின் பயிற்சி முறையானது இவற்றில் பங்கு பெறுவோர் இதர மதத்தவர் மீது வன்முறை கிரிமினல் பலத்தைப் பிரயோகிக்கும் ஆபத்தைக் கொண்டது”. இவைதாம் ராவ் அரசே இவர்களுக்கு கொடுத்த சான்றிதழ்கள்!பயங்கரவாதம் பற்றி மிக அதிகமாகப் பேசுவார்கள் சங் பரிவாரத்தினர். ஆனால் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறி, அதற்கு தந்த வாக்குறுதியை மீறி, நாட்டின் சட்டங்களை மீறி இவர்கள் பாபர் மசூதியை இடித்தது பயங்கரவாதச் செயல் இல்லையா? அதைத் தொடர்ந்து நடந்த பல பயங்கரவாதச் செயல்களுக்கு அதுவே பிறப்பிடம். இதில் கொடுமையிலும் கொடுமை அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த 1992ன் டிசம்பர் 6. அது அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம். அந்த நாளை தங்களின் வெற்றிநாளாகக் கொண்டாட முடிவு செய்தே இந்த வேலை பார்த்திருக்கிறார்கள். இதற்காகவும் வரலாறு இவர்களை மன்னிக்காது.

மசூதி இடிப்பைத் தொடர்ந்து நடந்த மதக் கலவரங்களில் 2000த்திற்கும் மேற்பட்டோர் மாண்டு போனார்கள். பம்பாய் கலவரத்தில் மட்டும் 900 பேர் சாவு, 2000த்திற்கு மேற்பட்டோர் படுகாயம். நாட்டில் இந்து, முஸ்லிம் பிளவை ஏற்படுத்தி தங்களுக்கான இந்து வாக்கு வங்கியை வெற்றிகரமாக உருவாக்கியது ஆர்எஸ்எஸ். அதன் பலனை 1998, 1999 மக்களவைத் தேர்தல்களில் அனுபவித்தது. வாஜ்பாய் தலைமையில் பாஜக கூட்டணி அரசு மத்தியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் ஆட்சி நடத்தியது. “தர்ம சாஸ்திரக் காவலர்களின்” வழிகாட்டுதலின்படியான ஆட்சியை அமைப்பது எனும் ஆர்எஸ்எஸ்சின் கனவு நனவானது!

====அருணன்====

(தொடரும்)