tamilnadu

img

அவசரச் சட்டம் போட இப்போ என்ன அவசரம் பிரதமரே?

பிரதமர் மோடி அவர்களுக்கு, வணக்கம்.இந்த கடிதம் எழுதும் நேரத்தில் தாங்கள் நமது நாட்டில் இருப்பது எங்களது அதிர்ஷ்டந்தான். ஓய்வு ஒழிச்சலின்றி நாடு நாடாக சுற்றிக் கொண்டே இருந்த உங்களை நூறுநாட்களுக்கு மேலாக எங்கும் செல்ல முடியாமல் நாட்டிலேயே இருக்க வைத்த கொரோனாவுக்கு இந்த நேரத்தில் நாங்கள் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், இந்த கடிதம் உடனடியாக உங்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதனால் ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற ஒரு சின்ன எதிர்பார்ப்பு தான்.

ஜுன் மாசம் 3ந் தேதி தங்கள் தலைமையில் அமைச்சரவைக் கூடி, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்து ஐம்பது ஆண்டு காலத்தில் விவசாயிகளுக்கு கிடைக்காத மகிழ்ச்சி இதன் மூலம் கிடைக்கும் என்றும், கிராமப்புறத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட்டால் எங்களை விட சந்தோஷமடைபவர்கள் யார்?

உங்க அவசரம் ஏன்?
எங்களுக்கு இந்த மகிழ்ச்சி உடனடியாக கிடைக்கனும் என்பதற்காக பாராளுமன்றத்தை கூட்டாமல், மாநில அரசாங்கங்களைக் கூட கலந்து பேசாமல், விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கூட கருத்துக்கேட்காமல் அவசர சட்டமாக நம்ம நாட்டு குடியரசு தலைவர் மூலமாக வெளியிட்டு மத்திய அரசிதழிலும் ஜுன் 5ந் தேதி வெளியிட்டிருக்கீங்க! இவ்வளவு ஆர்வமாகவும், அவசரமாகவும் நீங்க சட்டத்தை வெளியிட்டிருப்பது தான் எங்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துது.ஏனென்றால், உங்க ஆட்சியில, எங்க ஆறு ஆண்டு கால அனுபவத்துல விவசாயிகளுக்கு சாதகமான, நன்மை அளிக்கிற எந்த விஷயத்தையும் நீங்க அவசரமா செஞ்சி நாங்க பார்க்காததுனால தான் இந்த சந்தேகம்!

2014 தேர்தலின் போது என்ன சொன்னீங்க! நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் தற்கொலை என்ற பேச்சுக்கே இடமிருக்காது, அப்படின்னீங்க! ஆனா இன்னைக்கு வரைக்கும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை நடந்து கொண்டே தான் இருக்கு! டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதம் விலை தீர்மானித்து விவசாயத்தை லாபகரமானதா மாத்துவோம் என்று சொன்னீங்க! செஞ்சீங்களா? மாறாக 2022ல் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்னு பிறகு பேச்ச மாத்திட்டீங்க! விவசாயிகள் விஷயத்துல எப்போதுமே நீங்க சொன்னத செஞ்சதில்லை! அதனால தான் அவசரச் சட்டம் போட்டாலும் நம்ப முடியாம இருக்குன்றத முதல்ல தெரிவிச்சிக்கிறேன்.

விவசாயிகளுக்கு பயன்படுமா?
ரெண்டு அவசர சட்டம் போட்டிருக்கிறா சொன்னாங்க! “வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020” அப்பறம், “விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020”. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை என்ன என்பது குறித்து “விவசாயத்துறையில் போட்டியை ஏற்படுத்தவும், விவசாயிகளுடைய வருமானத்தை பெருக்கவும், நுகர்வோருக்கு தாராளமாக பொருட்கள் கிடைப்பதற்காகவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நோக்கத்திற்கு மாறாக சட்டத்தின் அம்சங்கள் உள்ளதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கிறோம். விவசாயத்துறையில் போட்டி வரனும்னா, விவசாயம் லாபகரமானதாக இருக்கனும்; விவசாயத்தில் லாபம் கிடைக்கனும்னா வேளாண் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை தீர்மானிக்கனும்; தீர்மானிச்ச விலை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு சந்தை – கொள்முதல் உத்தரவாதம் இருக்கனும்! இல்லீங்களா?
இந்த சட்டத்தில் ‘ஸ்பன்சர்’ (Sponsor) என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறீர்கள். ‘பிறர் மேம்பாட்டுக்காக பொறுப்பேற்பவர்’ வார்த்தை விளையாட்டில் நீங்கள் வல்லவர் என்பதை உலகமறியும். இத்திருத்தச்சட்டத்திலேயும் அது நன்கு வெளிப்பட்டுள்ளது.

விலை தீர்மானிப்பது  யார்?
நாட்டில் 85 சதவீதம் சிறு-குறு விவசாயிகள். நாட்டில் பெரும் எண்ணிக்கையிலும், பெருமளவு வேளாண் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளுக்கு இந்த சட்டத்திருத்தம் பயன்படுமா? வேளாண் விளை பொருள் விற்பனை சந்தைகளில் விலை குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விலை தீர்மானிப்பது யார்? தற்போது அரசு தீர்மானிக்கிற விலையை சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் தருவதில்லை. சட்டம் இருக்கு! ஒப்பந்தம் இருக்கு! ஆனால் ஆண்டுக்கணக்கில் கரும்பு பாக்கியை வைத்திருக்கிறார்கள். அதிகாரிகளால், அரசால் முதலாளிகளை எதுவும் செய்ய முடியவில்லை. பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள் தான். வாழை, தென்னை, மரவள்ளி, பழங்கள் பயிரிடக்கூடிய விவசாயிகள் வியாபாரிகளிடம் முன்கூட்டியே பணத்தை பெற்று விவசாயப் பணிகளையே செய்கிறோம். மகசூலை அவர்களுக்கே கொடுப்பதாக வாய்மொழி ஒப்பந்தம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனா இந்த சட்டத்தில் வேளாண் விளைபொருளை எடுத்துக் கொள்ளும் போது பணம் கொடுக்கனும். இல்லையென்றால் மூன்று வேலைநாட்களில் வியாபாரிகள் கொடுக்கனும் என்று இருக்கிறது. இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் கோட்டாட்சியரிடம் புகார் செய்யலாம். அவர் சமசரத்தீர்வுக்கான ஒரு குழுவை நியமிப்பார். அதையும் சம்பந்தப்பட்ட வியாபாரி ஏற்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யலாம். பிறகு சிவில் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு அது சம்பந்தமான வழக்கை இங்கிலாந்து நீதிமன்றங்களில் நடத்தும் தந்திரமும், வசதியும் உங்கள் நண்பர் விஜய் மல்லையா உள்ளிட்டவர்களுக்கு சாத்தியப்படும். எங்களைப் போன்ற விவசாயிகள் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கெதிராக அப்படியெல்லாம் வழக்கு நடத்த முடியுமா? அப்படியே நடத்தினாலும் கம்பெனிகளுக்கு தர வேண்டிய பாக்கிக்காக விவசாயிகளின் நிலத்தை பறிமுதல் செய்யக்கூடாது என்று கருணையுடன் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியென்றால் நிலத்தைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் பறிமுதல் செய்யலாம் என்று அர்த்தம். எல்லாம் பறிபோன பிறகு நிலம் எப்படி எங்கள் கைவசம் இருக்கும்? அரசு விலையை, அது கட்டுப்படியானதாக இல்லையென்றாலும் ஏதோ ஒன்றை தீர்மானிக்கிறது. அரசு தீர்மானித்த விலைக்கு வியாபாரிகள் எடுப்பதில்லை. வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி சேர்ந்து கொண்டு குறைந்தவிலைக்கு ஏலம் கேட்கிறார்கள். விலையை நிர்ணயிப்பதில் அரசு தலையிடாது என்றால் என்ன நடக்கும்?

யார் பலனடைவார்கள்?
வர்த்தகர்கள், கம்பெனியோடு விலை குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ள இதில் வழி செய்யப்பட்டுள்ளது. பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் உதாரணத்திற்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விளையும் மாம்பழம் ரிலையன்ஸ் கம்பெனி வாங்குவது என்று முடிவெடுத்து விட்டால் வேறு கம்பெனியோ, அல்லது வர்த்தகர்களோ வருவார்களா? வேறு யாருமே வாங்க முன்வராத போது அந்த கம்பெனி தீர்மானித்த விலைக்குத்தானே விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

எங்கு வேண்டுமானாலும் சென்று விற்பனை செய்யலாம். ஒரு நாடு – ஒரே சந்தை என்று முழங்குகிறீர்கள். தருமபுரி மாவட்டம் தாதம்பட்டி கிராமத்தில் ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயி அதை சென்னைக்கு கொண்டு வந்து விற்பைனை செய்ய முடியுமா? வழக்கம் போல் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து வாங்கி அதிக விலை கிடைக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று வியாபாரிகள் தானே பலனடைவார்கள். கம்பெனிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டு பயிரிடுவது குறித்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னுடைய நிலத்தில் என்ன பயிரிட வேண்டுமென்பதை கம்பெனிகாரன் தீர்மானிப்பான். உலக சந்தையில் எந்தப் பொருளுக்கு கிராக்கி இருக்கிறதோ, எதில் கூடுதல் லாபம் கிடைக்குமோ அதைத்தான் பயிரிட வேண்டுமென கம்பெனி வற்புறுத்தும். நம் நாட்டு மக்களுக்கு தேவையான பொருள் இங்கு உற்பத்தி செய்ய முடியாது. பிறகெப்படி மக்களுக்கு தாராளமாக பொருட்கள் கிடைக்கும். நிலம் மட்டும் என்னுடைய பெயரில் இருக்கும். மற்ற எல்லாவற்றையும் ஒப்பந்தம் செய்து கொண்ட கம்பெனி தான் தீர்மானிக்கும் என்றால் எனக்கு எப்படி அது மகிழ்ச்சிதரக் கூடியதாக இருக்கும். அதனால நீங்க செய்யறது எல்லாமே ஏட்டிக்குப் போட்டியா இருக்குது. 

இதுதான் சுயசார்பா?
விவசாயாகிய நாங்க என்ன கேட்கிறோம்! நாங்க உற்பத்தி செய்கிற வேளாண் விளை பொருளுக்கு லாபகரமான விலை தீர்மானிங்க அப்படின்னு அரசாங்கத்த கேட்டா நீங்க வர்த்தகர்களையும், கம்பெனிகாரனையும் கைய காட்டுறீங்க! 130 கோடி மக்கள் வாழுகிற இந்தியாவை விட பெரிய சந்தை வேறு எது இருக்க முடியும். சுயச்சார்பு, உள்நாட்டு உற்பத்தி என்பதெல்லாம் பேச்சில் மட்டும் தானா?விவசாயிகளது கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்ட போதெல்லாம் விவசாயம் மாநில அரசாங்கத்தின் அதிகாரத்துக்குட்பட்டது. அதனால மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்ய முடியாதுன்னு சொன்னீங்க! இப்ப எந்த அதிகாரத்தில் மாநில அரசுகளை கேட்காமல் விவசாயம் குறித்த இந்த முக்கியமான முடிவுகளை எல்லாம் எடுக்குறீங்க! அதுவும் கொரோனா எப்படி நம்மள தாக்குமோ அப்படின்னு ஒவ்வொரு இந்தியனும் உயிரை கையில புடிச்சிக்கிட்டு அச்சத்துல இருக்கும் போது அதிலிருந்து மக்களை காப்பாத்தறத விட்டுட்டு, இந்த அவசரச் சட்டமெல்லாம் இப்ப அவசியமா பிரதமர் அவர்களே!

எங்க ‘விவசாயி’ கருத்து என்னவோ?
நானும் ஒரு விவசாயி தான் என்று விவசாயி பிம்பத்தை காப்பாற்ற படாதபாடுபடும் எங்கள் முதலமைச்சர் இந்த சட்ட திருத்த நடவடிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று மென்மையாக ஏதாவது சொன்னால் கூட நாங்கள் மகிழ்ச்சியடைவோம். அதனால விவசாயிகளை காட்டி உங்கள் உயிர் நண்பர்களுக்கு, பெருமுதலாளிகளுக்கு, கார்ப்பரேட்களுக்கு உதவ வேண்டிய அவசியமில்லை. நீங்க ஏற்கெனவே அவர்களுக்கு வேண்டியதை கூச்சமின்றி செஞ்சிட்டுதான் இருக்கீங்க!. கோடிக்கணக்கான விவசாயிகளை பாதிக்கிற இந்த அவசர சட்டங்களை அவசரமாக திரும்பப் பெறுமாறு கோடிக்கணக்கான இந்திய விவசாயிகள் சார்பாக இந்திய பிரதமராகிய உங்களை வேண்டிக் கேட்டுக்கிறோம். 

சோதனை எலிகளா?
எவ்வளவு பொருட்களை வேண்டுமானாலும் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்” என்று எங்கள் பக்கம் ஒரு பழமொழி உண்டு. அத்தியாவசிய பொருட்களை அரசு கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளும், கம்பெனிகளும் கொள்முதல் செய்தால் மக்களுக்கு எப்படி தாராளமாக கிடைக்கும்? நியாயமான விலையில் எப்படி விற்பார்கள்? பதுக்கி வைத்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மேலும் லாபம், கொள்ளை லாபம் என்ற நோக்கத்தில் தானே அவர்கள் செயல்படுவார்கள். பொருள் இருந்தும் வாங்க முடியாமல் மக்கள் பட்டினியால் வாட நேரிடும். அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் பொதுவிநியோக திட்டத்தில் மக்களுக்கு எப்படி அத்தியாவசிய பொருட்களை வழங்குவீர்கள்? அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். மக்களை, விவசாயிகளை சோதனை எலிகளாக நினைத்து விளையாடாதீர்கள் என்பதே எங்கள் வேண்டுகோள்.விலையை விவசாயிகளே தீர்மானிக்கலாம், எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு கொண்டு சென்று விற்கலாம் என்பதெல்லாம் விவசாயிகளுக்கு வீசப்படும் கவர்ச்சிவலை. சிக்கினால் மசாலா அரைத்து மணக்க மணக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார்கள் இந்தப் பெரு முதலாளிகள். எனவே, இத்திருத்தச் சட்டத்தால் வர இருக்கும் பாதிப்புகளை உணர்ந்து அவசர சட்டங்களை திரும்பப் பெற மத்திய பாஜக அரசை நிர்பந்திக்க வேண்டும். உழவர்களின் ஒன்றுபட்ட போராட்டம் ஆட்சியாளர்களின் தீய செயலை தடுத்து நிறுத்தும். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு, 
கடுமையாக பாதிக்கப்படப்போகும் இந்திய விவசாயிகளில் ஒருவன்

கட்டுரையாளர்  :  பெ.சண்முகம், பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

;