பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் மீது விதிகள் பாய்வதும், மதிக்கப்பட வேண்டியவர்களை
மிதிப்பதும், என்ற அராஜகத்தின் உச்சக்கட்ட காட்சிகள் நிறைந்த ஆட்சி தமிழகத்தில்
நடக்கிறது.“அம்மாவின் ஆட்சி”, என்று மூச்சுக்கு முந்நூறு முறை,வாயளவில் மட்டும் கூறிக்
கொள்ளும் இவர்கள், தங்களின் ஆட்சியின் செயல்பாடுகள் மூலம், தங்களை கலப்படமில்லாத
அக்மார்க் பாஜகவின் நிழல் ஆட்சி என்பதை மக்களுக்கு உணர்த்துகின்றனர்.
அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில், செயற்கையாக சமூக விரோதிகள் புகுந்து
விட்டது போன்றதொரு நாடகத்தை நடத்தி, இளைஞர்கள் மீது தடிய அடி நடத்தினர். மண்ணுக்காகவும்,
மக்களுக்காகவும், மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் மக்கள் நடத்திய
போராட்டத்தின் இறுதி நாளில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நிறைவேற்றியது போன்று மற்றும்
ஒரு சமூக விரோதிகள் நாடகத்தை அரங்கேற்றி 13 அப்பாவி மக்களை சுட்டு கொன்றது தமிழக அரசு.
தீண்டாமை ஒரு பாவ செயல் மட்டும் இல்லை, அது ஒரு குற்ற செயல். மக்களை எதன் அடிப்படையிலும்
இழிவு படுத்தும் செயலை எவர் செய்தாலும், அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர். சட்டம்
இவ்வாறு இருக்க, தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில், அம்மக்கள் வாழ்விடங்கள் உள்ள
பக்கவாட்டின் சுவரை மட்டும் சுமார் 20 அடியில் அமைத்து, தீண்டாமை சுவரை எழுப்பியது ஒரு தனி நபர்
செய்த குற்றம். அத்தகைய தீண்டாமை சுவரைப் பற்றியும், அந்த சுவரால் தங்களுக்கு உள்ள
பாதுகாப்பின்மை பற்றியும், அந்த பகுதி மக்கள் பல முறை கோரிக்கை மனுக்களை அரசு அதிகாரிகளிடம்
கொடுத்தும், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது அரசின் குற்றம். மக்கள் பயந்தது
போலவே, அந்த தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து உறங்கிக் கொண்டிருந்த 17 உயிர்களை காவு
வாங்கியது. அத்தகைய குற்றச் செயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நியாயம் கேட்டு போராடிய
பாதிக்கப்பட்ட மக்கள் மீதும், ஜனநாயக சக்திகள் மீதும் அரசுதடி அடி நடத்தி, போராட்டகாரர்களுக்கு
வழக்கம் போல் சமூக விரோதிகள் பட்டம் சூட்டி, சிலரை சிறையில் அடைத்து மீண்டும் ஒரு சாதனையை
படைத்தது பாஜகவின் நிழல் அரசு.
டிசம்பர் 4 அன்று, மீண்டும் அது போன்றதொரு ஏற்க இயலாத சாதனையை நிறைவேற்றி உள்ளது தமிழக
அரசு. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு
இடையூறாக இருக்கும் போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி, வடலூரில் தொடங்கிய 400
கிலோ மீட்டர் நடைபயணத்தின், இறுதி நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்த
கோரிக்கைகளை முதல்வரிடம் கொடுக்க வந்த, இந்திய ஜனநாயக மாதர்சங்க நிர்வாகிகள் மற்றும்
தோழியர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுவாகவே மக்கள் நலம் சார் போராட்டங்களின் குரல் வலையை, சமூக விரோதிகள் என்ற பெயர் சூட்டி
அழித்து நெறிக்கும் இந்த அரசு, ஜனநாயக மாதர் சங்க தோழர்கள் மீது நடந்த அடக்கு முறைக்கும்,
கைதுக்கும் பின்னணி கூற என்ன நாடகத்தை சிந்தித்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.
தற்போதைய மத்திய, மாநில அரசுகளின் பார்வையில் மக்களுக்காக, சமூக நீதிக்காக, பெண்களின்
பாதுகாப்பிற்காக போராடும் அனைவரும் சமூக விரோதிகள். இந்த அரசின் பார்வையில் மதச் சண்டையை
தூண்டும், பெண்களை இழிவு செய்யும் மனிதர்கள் மட்டுமே தேச பக்தர்கள். இத்தகைய தேசபக்தர்கள்
காவலர்களை இழிவாக பேசிய, முதல்வர் மற்றும் துணை முதல்வரை தரம் தாழ்த்தி பேசிய வாசகங்கள்
அனைத்தும் இந்த அரசால் ரசிக்கப்படும். இத்தகு பார்வை குளற்பாடுகள் உள்ள அரசுகள் மக்களுக்கு
எவ்வகையில் நன்மை பயக்கும் என்றுமக்கள் சிந்திக்க வேண்டும்.
400 கிலோ மீட்டர் நடந்து வந்த ஜனநாயக மாதர் சங்க தோழிகளின் வீரமிகு கால்களின் வரலாறு
மகத்தானது.
1. பிறப்பு முதல் இறப்பு வரை பெண் என்ற ஒற்றை காரணத்தால் உடலாலும், உணர்வாலும்
பெண்களும், குழந்தைகளும்எங்கு பாதிக்கப்பட்டாலும், அங்கு உதவ ஓடிச் செல்லும் முதல் கால்கள் அது.
2. மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் பெண்களுக்கு கொடுமைகள் நிகழ்த்தப் படும் போது,
அதை தடுக்க விரையும்கால்கள் அது.
3. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு முக்கிய காரணமான மதுவை ஒழிக்க
போராடும் கால்கள் அது.
4. பொள்ளாச்சியில் பெண்கள் பாதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு நியாயம் கேட்டு போராடிய
கால்கள் அது.
5. பெண் என்ற காரணத்தால் பணி இடங்களில் சம ஊதியம் மறுக்கப்படுவதை, எதிர்த்து இன்றும்
போராடும் கால்கள் அது.
6. அரசியலில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராடும் கால்கள் அது.
7. பெண்களுக்கு வீரம் குறைவு, பலம் குறைவு என்ற தவறான கற்பிதங்களை தவிடு பொடியாக்கி,
கொட்டும் மழையிலும் 400 கிலோ மீட்டர் தூரத்தை, செங் கொடி ஏந்தி நடந்து வந்த கால்கள் அது.
முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர் பெருமக்களின் குடும்பத்தில் உள்ள பெண்களையும்
உள்ளடக்கிய, அனைத்து பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்திய இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்
வெற்றி அடைந்த நடைபயணத்திறகு அனைத்து பெண்களின் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
தன் மாநிலத்தில் உள்ள பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுடையது.
அந்த பொறுப்பை வலியுறுத்தும் கோரிக்கைகளை கொடுக்க வந்த ஜனநாயக மாதர் சங்க தோழிகளின்
மீதான நடவடிக்கைகள் அனைத்தும் கடும் கண்டனத்திறகுறியது. அரசின் இந்த தவறான அணுகுமுறையை
அனைத்து பெணகள் சார்பாகவும் கடுமையாக கண்டிக்கிறோம்.