tamilnadu

img

ஆவின் : லாபமா? நட்டமா? - சி. ஸ்ரீராமுலு

“கால்நடை வளர்ப்பு சாதாரணமானதல்ல. அந்த கஷ்டத்தை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். பால் உற்பத்தியாளர் சங்கங்கள் நட்டத்தில் இயங்கி வருவதால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது” -செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது. இது உண்மைதானா? என்று தேடியதி லிருந்து கிடைத்தவை.

40 ஆண்டு காலம்...

தமிழ்நாட்டில் கிராம அளவில் பிரதம பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு ஒன்றியம், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என  மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு உருவாக்கப்பட்டு 40 வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் பால் உற்பத்தி தொழிலில் 40 முதல் 50 லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. தினசரி சுமார் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. மாநில இணை யம்,19 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மற்றும் 12,600 தொடக்க பால் உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு சங்கங்களின் கீழ் தினமும் சராசரியாக 33 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது. மீதமுள்ள 1.77 லட்சம் லிட்டரை ஆங்காங்கே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்வதோடு தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்கின்றன.

மைல் கல்...

2010-11 ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 20.67 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 33.23 லட்சம் லிட்டராக அதிகரித்திருக்கிறது.  கொள்முதல் மட்டு மல்ல, பால் விற்பனையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. 1,30,034.22 லட்சம் லிட்டரில்  இருந்து படிப்படியாக அதிகரித்து 2017-18 ஆம் ஆண்டில் 1,63,501.91 லட்சம் லிட்டராக உயர்ந்திருக்கிறது. விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் கொண்டு வந்த பிறகு கிராமப்புறங்களில் மேலும் பால் உற்பத்தி அதிகரித்ததன் விளைவாக ஆவின் வரலாற்றில் 29.10. 2018 அன்று 37 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

பிடிவாதம்...

நாளொன்றுக்கு சராசரியாக 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்தாலும் 1980களில் தொடங்கப்பட்ட ஆவின் நிறுவனம் தொடக்க நிலையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொள்முதல் விலையை உயர்த்தி வந்தது. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க அதிமுக அரசு முன்வர வில்லை. பால் உற்பத்தித் தொழிலை நம்பி வாழ்ந்து வந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசின் பிடிவா தத்தால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களுக்கு வரவேண்டிய பால் தடைப்பட்டது. விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், வேலூர், நாமக்கல், கோவை, ஈரோடு, திருச்சி, காஞ்சி புரம் என பல பகுதிகளிலும் பாலை தரையில் ஊற்றி போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆவின் கொள்முதல் குறைந்ததால் தனியார் நிறுவனங்கள் பாலின் விலையை அதிகரித்தன. பால் தட்டுப்பாட்டால் நுகர்வோர் பாதிக்கப்பட்டனர்.

பணிந்தது...

அரசு முன்வந்தது. அந்த ஆண்டு மார்ச் மாதம் 3 ரூபாய் உயர்த்தினார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் ஆவின், பால் விற்பனை விலையை உயர்த்த வில்லை. அரசின் இந்த விலை ஏற்றத்திற்கு கைமேல் பலனும் கிடைத்தது. தனியாரிடம் சென்ற பால் முழுவதும் பால் ஒன்றி யங்களுக்கு மீண்டும் திரும்பியது. பால் கொள்முதல் அதி கரித்ததை தொடர்ந்து பால் விற்பனை, பால் பொருள் உற்பத்தி யில் ஆவின் நிர்வாகத்தை தலை நிமிரச் செய்தது. அடுத்த ஆறு, ஏழு மாதங்களில் மீண்டும் கொள்முதல் விலை 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ‘குருவி தலையில் பனங்காய்’ வைத்த கதை போன்று ஆவின் பால் விலையை 10 ரூபாய் உயர்த்தி நுகர்வோர் தலையில் சுமையை அதிகரித்தது அதிமுக அரசு.

கரையான் புற்றாக...

ஆட்சி மாறவில்லை என்றாலும் காட்சிகள் மாறின. 4 ஆண்டு காலமாக கொள்முதல் விலை உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது. பத்தாண்டு காலமாக நடந்த “கலப்படப் பால் ஊழல், ஒப்பந்தம் நீட்டிப்பு, நிர்வாக குளறுபடி, உணவுப் பொருட்கள் பராமரிப்பு குறைபாடு, முறைகேடு” உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பல கோடி ரூபாய் இழப்பை ஒருசில மாவட்டங்களில் தணிக்கைக் குழு அதிகாரிகள் கண்டறிந்தது ஊடகங்களில் வெளியான செய்தி பேரதிர்ச்சியானது. ‘கரையான் புற்று’ போன்று வளர்ந்த ஊழல், முறைகேடுகளை முறையாக விசாரணை நடத்தி ‘களை’ எடுப்பதற்கு மாறாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை (சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகள், பணியாளர்கள்) காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட அதிமுக அரசின் ஊழல் முறைகேட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

மீண்டெழுந்தது...

ஆவின் நிறுவனம் பால் விற்பனை மட்டுமின்றி பால் பண்ணைகளை துவங்கி கோவா, மைசூர்பா, பால்கோவா, தயிர், மோர், வெண்ணை, நெய், பால் பவுடர், ஐஸ்கிரீம், மில்க் ஷேக் என விதவிதமாக பால் உப பொருட்கள் தயாரிப்பில் இறங்கியது. ஆங்காங்கே விற்பனை நிலையங்க ளையும் துவக்கியது. மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பால் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட முடிந்தது. கடந்த 2014-15 ஆம் ஆண்டில் நஷ்டத்தை சந்தித்த கூட்டுறவு இணையம் ஒரு சில அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள், பால் உற்பத்தியாளர் கள், விவசாயிகளின் தன்னலமற்ற சேவை மற்றும் ஓய்வறியா உழைப்பால் அடுத்த ஆண்டில் மெல்ல மெல்ல நட்டத்தை சரி செய்து லாபத்துக்கு கொண்டு வந்தது. கடந்த ஆண்டு சுமார் ரூ.300 கோடி நிகர லாபத்தை ஈட்டி இருக்கிறது.

அன்றும் இன்றும்...

சட்டப்பேரவையில் தனது துறை மானியக் கோரிக்கை மீதான  கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்தும், எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு  பதிலளித்தும் பேசிய பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி,”தமிழ்நாட்டில் இரண்டாம் வெண்மை புரட்சியை எய்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவது பால்வளத் துறை, மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சத்து ணவான பால் உற்பத்தியை அதிகரித்து, மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக பால் உற்பத்தியை அதிகரிப்பதில் தொடர்ந்து வெற்றிகரமாக பணியாற்றி வருவதால் தமிழகத்தில் லாபத்தில் இயங்கி வரும் ஒரே துறை ஆவின்தான்”என்றார். சட்டமன்றத்தின் இந்த  கூட்டத்தொடரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சமர்ப்பித்த 2017-18 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையும் ஆவின் நிறுவனம் லாபத்தில் இயங்கி வருவதை உறுதி செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் லாபத்தில் இயங்கும் ஒரே துறை ஆவின் தான் என்று அன்றைக்கு கூறிய இதே அமைச்சர்தான், இன்றைக்கு ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தி யிருப்பது குறித்து விளக்கம் அளிக்கையில், 5 ஆண்டுக ளுக்குப் பிறகு பாலின் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் விலை அதிகரித்தது போல் தெரியும்; யார் ஆட்சியில் இருந்தா லும் இந்த மாதிரியான முடிவைத்தான் எடுப்பார்கள். இது தவிர்க்க முடியாதது. இதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

அடிமேல் அடி ..

விலைவாசி ஏற்றம், வறட்சி உட்பட தொடர் நெருக்கடி களிலும் பால் உற்பத்தியை அதிகரித்த பால் உற்பத்தியா ளர்கள், தொடர் சிக்கலில் இருந்து தங்களை விடுவிக்க பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று அனைத்து மட்டத்திலும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். போராட்டம் நடத்தியும் முறையிட்டனர். இந்த பிரச்சனை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில், மக்களவை மற்றும் வேலூர் தொகுதி தேர்தல் என ஆளும் கட்சி  அடி வாங்கியதை மனதில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டிருப்பது போல் தெரிகிறது எடப்பாடி அரசு. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதைப் போன்று கொள்முதல் விலை உயர்வை அறிவித்தது. 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்றும் அறிவித்த ஓரிரு நாட்களில், ஆவின் பால் விற்பனையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி நுகர்வோர் தலையில் சுமையை மாற்றியது. ஆவினை மீண்டும் நட்டத்தில் தள்ளும் இந்த முடிவு, தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமானது என்பதை விளக்க தேவையில்லை.

கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் மாநில நிர்வாகிகள் கூட்டம், சனியன்று  மாநிலத் தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் கே.முகமதுஅலி, மாநில பொருளாளர் எம்.சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின் பொதுச் செயலாளர் கே.முகம்மதுஅலி கூறியதாவது: தற்போது பால் விலை உயர்வு பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு பின் கடந்த 4 ஆண்டுகளில் பால் கொள்முதல் விலை உயர்வை தமிழக அரசு அறிவிக்கவில்லை. இக்காலத்தில் கால்நடை தீவனங்கள் விலை உயர்வு 50 சதவிகிதத்திற்கு மேலாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.28-ல் இருந்து 40 எனவும், எருமைப் பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.35-ல் இருந்து 50 எனவும் கொள்முதல் விலையை உயர்வு கேட்டுப் போராடி வருகிறோம். 

ஆவின் நிர்வாகம் ஆரம்ப சங்கங்களுக்கு சுமார் ரூ.200 கோடி வரை 50 நாட்கள் வரை பால் பணம் பாக்கி வைத்துள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் பால் கூட்டுறவு அமைப்புகளை பாதுகாப்பதற்கு தமிழக அரசு கால்நடை துறையின் மூலமாக 50 சதவிகித மானிய விலையில் கால்நடை தீவனங்கள் வழங்க வேண்டும். தற்போதைய குழுவில் தேவையான அளவிற்கு தரமான கால்நடை தீவனங்கள் ஆவின் நிர்வாகம் ஆரம்ப சங்கங்கள் வழங்கவேண்டும். ஒவ்வொரு வருடமும் வரவு, செலவுகளை முறையாக தணிக்கை செய்து பால் கூட்டுறவு அமைப்புகளில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை போனஸ் வழங்க வேண்டும். மாவட்ட ஒன்றியங்களிலும், மாநில இணையத்திலும் நிலவுகிற ஊழல்களை தடுக்க  வேண்டும். தற்போது குழுவில் நிர்வாக சீர்திருத்தம் செய்து செலவினங்களை குறைத்திட வேண்டும்.

ஆவின் பால் விற்பனை முகவர்களுக்கான கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும். பத்து வருடங்களாக இத்தொகை உயர்த்தப்படவில்லை. ஆரம்ப சங்கங்களின் செலவினங்களுக்கு தொகையை பால் கொள்முதல் விலையில் 5சதவிகிதம் என 2001இல் அரசு அறிவித்ததை அமல்படுத்த வேண்டும். தற்போது சுமார் பாதி தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. மீதித் தொகை பால் உற்பத்தியாளர்களின் விலையிலிருந்து பிடித்தும் கொள்கிற தற்போதைய நடைமுறையை கைவிட்டு ஐந்து சதவிகிதத் தொகையை ஆவின் நிர்வாகமே வழங்க வேண்டும். தனியார் நிர்வாகங்கள் பால் கலப்படம் செய்வதை கடுமையான சட்டங்கள் மூலம் தடுக்க வேண்டும். தனியார் கொள்முதல் செய்கிற பாலுக்கு அரசு அறிவித்த கொள்முதல் விலையை விட குறைவாக கொடுப்பதை அரசு அனுமதிக்கக்கூடாது. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற செப்டம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் ஆவின் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சங்கங்கள் ஆகியவற்றின் முன்பாக கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



 


 

;