tamilnadu

img

வெற்று முழக்கங்கள் நிறைந்த பட்ஜெட்- சி.பி.கிருஷ்ணன் -

 “சப் கா சாத், சப் கா விகாஸ், சப் கா விஷ்வாஸ்” அதாவது “அனைவருடனும். அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை” என்ற கோஷங்களை முன்வைக்கிறது மத்திய பாஜக அரசு. இந்த முழக்கங்களின் அடிப்ப டையில் அனைவருக்காகவும் செயல்படுகிறதா இந்த அரசு என்பது தான் பிரதானமான கேள்வி. தனிநபர் வருமானத்தில் 122வது இடம் ஜிடிபி என்கிற மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்தால் தான் அனைத்து மக்களின் வளர்ச்சியை உத்தர வாதப்படுத்த முடியும் என்கிறது மத்திய அரசு. எனவேதான் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஐந்து வருடங்களில் எட்ட திட்டமிட்டுள்ளோம் என்கிறார்கள். அமெரிக்கா (21.4), சீனா (14.1), ஜப்பான் (5.2), ஜெர்மனி (3.9) ஆகிய நான்கு நாடுகளுக்கு அடுத்தபடியாக 2.9 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக 5 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது என்று மத்திய அரசு பெருமை பேசுகிறது. ஆனால் தனிநபர் வருமானம் என்று பார்த்தால் இந்தியா, உலக நாடுகளில் 122 ஆவது இடத்தில் இருக்கிறது என்ற உண்மை மக்களிடமிருந்து மறைக்கப்படுகிறது. உலக அரங்கில் பட்டினியால் வாடும் மக்களைக் கொண்ட 119 நாடுகளில் 100வது இடத்தில் இந்தியா உள்ளது என்ற உண்மை பகிரப்படுவதில்லை. அவர்கள் சொல்வது போல் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் அளவை எட்டுமா? சென்ற பட்ஜெட்டில் 12 சதவீதம் வளர்ச்சி என்று கணிக்கப்பட்டது. ஆனால் ஆண்டு முடிவில் அவர்கள் கணக்குப்படியே 5 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியே எட்ட முடிந்துள்ளது.

இதுவே உண்மையான அளவீடில்லை என்று ஆளும் கட்சிக்காரர்களும், பிரதமரின் முக்கிய பொருளாதார ஆலோசகராக நான்காண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அர்விந்த் சுப்ரமணியம் போன்றவர்களும் கூறுகிறார்கள். இந்த பட்ஜெட்டில் 10 சதவீத வளர்ச்சி என்று கணிக்கிறார்கள் அப்படியானால் உண்மையான வளர்ச்சி என்னவாக இருக்கும் என்பதை யாரும் எளிதில் கணித்துக் கொள்ளலாம். இதே நிலை தொடர்ந்தால் 5 ட்ரில்லியன் டாலர் பொருளா தாரத்தை அடைய 10 ஆண்டுகளுக்கு மேலாகும். வளர்ச்சியால் பயனடைவது யார்? மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னதான் வளர்ச்சி அடைந்தாலும் அது எல்லோரும் பயனடையும் வகையில் மறுபங்கீடு செய்யப்படவில்லை என்றால் அந்த வளர்ச்சியால் சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. “1980களில் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2-3 சதவீதமாக இருந்தபோது வேலை வாய்ப்பு பெருகியிருந்தது. அது பின்னர் 6-7 சதவீதமாக உயர்ந்தபோது வேலை வாய்ப்பு சுருங்கியுள்ளது” என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் ஆய்வு கூறுகிறது. இதற்கு பிரதான காரணம் பிந்தைய வளர்ச்சி “வேலை இல்லா வளர்ச்சி” என்ற கட்டத்தை கடந்து “வேலை இழப்பு வளர்ச்சி” ஆக மாறி உள்ளதால்தான்.  130 கோடி மக்களைக் கொண்ட நமது நாட்டில் கடுமையான ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. 2014 ல் பாஜக ஆட்சிக்கு வந்த போது மேல் தட்டில் உள்ள 1% பெரும் பணக்காரர்களிடம் அவ்வாண்டு உற்பத்தியான செல்வாதாரத்தின் 49% குவிந்தது. இவ்வரசு தொடர்ந்து கடைபிடித்த கொள்கையின் காரணமாக 2018 ல் மேல் தட்டில் உள்ள 1% பெரும் பணக்காரர்களிடம் அவ்வாண்டு உற்பத்தியான சொத்தின் 73% குவிந்துவிட்டது. இன்னொரு புறத்தில் கோடானு கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

2020 ஜனவரி மாதம் 21ஆம் தேதி ஆக்ஸ்பாம் நிறுவனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியபடி அடித்தட்டில் உள்ள 50% மக்களிடம், அதாவது 65 கோடி இந்தியர்களிடம் நாட்டின் மொத்த சொத்தில் வெறும் 2.8 சதவீதம் மட்டுமே உள்ளது. பட்ஜெட்டின் திசைவழி என்ன? சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் முடிந்த பின்பும் கூட அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர், கல்வி, சுகாதாரம், சாலை, மின்சாரம், குடியிருப்பு ஆகியவை அனைத்து மக்களையும் எட்டாத நிலைதான் உள்ளது. இந்தப் பின்னணியில் ஒரு நாட்டின் வரவு செலவு கணக்கு என்பது அந்த நாட்டின் பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரியும், ஒன்றுமில்லாத வறியவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிட்டும் வகையில் கூடுதல் செலவினமும் கொண்டதாக அமைய வேண்டும். ஆனால் பாஜக அரசின் 6 பட்ஜெட்டுகளும் அவ்வாறு இல்லை. இந்த ஏழாவது பட்ஜெட்டும் அதற்கு சற்றும் விதிவிலக்கல்ல. இந்த அரசின் பார்வையே உண்மை நிலையிலிருந்து முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது. உண்மையில் 60 கோடி உழைப்பாளிகள் தாம் இந்த நாட்டின் அனைத்து செல்வங்களையும் உருவாக்குபவர்கள் என்பதற்கு விளக்கம் எதுவும் தேவை யில்லை. வெறும் மூலதனத்தை மட்டும் வைத்துக் கொண்டு மனித வளம் இல்லாமல் எந்த செல்வத்தையும் உற்பத்தி செய்து விட முடியாது. ஆனால் “இந்த நாட்டின் செல்வாதாரங்களை உருவாக்குபவர்கள் இந்திய பெரு முதலாளிகள்தாம்” என்று நிதிநிலை அறிக்கையில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த கோளாறான பார்வையினால் தான் ”முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்பதுபோல் அனைத்து அறிவிப்புகளின் பலனுமே பாமர மக்களின் நலன் நாடுவதாக இல்லை.  

தேர்தல் ‘ஜும்லா’க்கள் 2014ல் ஆட்சிக்கு வரும்போது எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் “விவசாயிகளின் விளை பொருட்களுக்கான செலவினைப் போல ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச கொள்முதல் ஆதார விலை இருக்கும்” என்று கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டு விட்டது. விவசாயத்திற்காக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 16 அம்ச திட்டம் எதுவும் இந்த திசை வழியில் இல்லை. ஆனால் 2022ல் ”விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்” என்று மட்டும் வெற்றாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்பை கணிசமான எண்ணிக்கையில் உருவாக்குவதற்கும் இந்த பட்ஜெட்டில் எந்த வழிவகையும் செய்யப்பட வில்லை. “வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை” என்பதெல்லாம் தேர்தல் ஜும்லாவாக மாறிவிட்டது. வேலை வாய்ப்பை உருவாக்கு பவர்கள் என்று கூறி பெரு முதலாளிகளுக்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கும் சலுகை மேல் சலுகையாக வாரி வழங்கப்படு கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை மழை பெரும் பணக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய சொத்து வரி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது. அதேபோல் பெரு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய கார்ப்பரேட் வரியும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு 400 கோடி ரூபாய் சுழற்சி (turn over) உள்ள ஒரு நிறுவனம் நிச்சயமாக குறைந்தபட்சம் ஓராண்டில் 32 கோடி ரூபாயாவது வருமானம் ஈட்டும் என்பதுதான் வரையறுக்கப்பட்ட நிலை. அவ்வளவு வருமானம் ஈட்டும் கார்ப்பரேட்டுகளுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு லட்சக் கணக்கான கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.  உள்நாட்டில் புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கும், அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்கும் இந்த பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆண்டு சுழற்சி 100 கோடி ரூபாய் வரை உள்ள புதிதாக துவக்கப்படும் நிறுவனங்களுக்கு அவற்றின் மொத்த லாபத்திற்கு தொடர்ந்து மூன்றாண்டுகள் எந்த வரியும் விதிக்கப்படாது. 2024 மார்ச் 31 வரை அடிப்படை கட்டுமானத்தில் முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு வட்டி, டிவிடெண்ட் மற்றும் மூலதன லாபம் ஆகியவை எதற்கும் வரி கிடையாது. ஆனால் இந்தச் சலுகைகள் எதுவும் உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க பயனளிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது, எனவேதான் 45 ஆண்டுகளில் காணாத வேலையில்லாத் திண்ட்டாட்டத்தை நாடு அனுபவிக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு, அடிப்படைக் கட்டுமானத்தை பலப்படுத்த உதவும் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு, சென்ற பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் 9500 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

எல்லாம் தனியார்மயம் எல்லாவற்றையும் பிபிபி (அரசு-தனியார் கூட்டு) என்ற வகையில் தனியாரிடம் ஒப்படைக்க இந்த அரசு முயற்சிக்கிறது. உணவுக் கிடங்கா, உழவர் ரயில் வண்டியா, உயர் கல்வியா எல்லாம் தனியாருடன் கூட்டு. கல்வியையும் சுகாதாரத்தையும் ஒருசேர சீர்குலைக்கும் வகையில், புதிதாக துவக்கப்படும் தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்திக் கொள்ள இந்த பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறம் மருத்துவக்கல்வியை சாதாரண மக்களுக்கு எட்டாக்கனி ஆக்குவதுடன் மறுபுறம் அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு கிடைத்துவரும் இலவச சிகிச்சையையும் காலி செய்துவிடும். 10 அரசு வங்கிகளை 4 வங்கிககளாக ஒன்றிணைத்து 6 வங்கிகளை மூடிவிடுமாம். இப்படி இணைக்கப்பட்ட வங்கிகளின் பங்குகளை மேலும் தனியாருக்கு விற்பார்களாம். ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை எல்ஐசியிடம் கொடுத்துவிட்டு, அவ்வங்கி யை தனியார் வங்கி என்று ரிசர்வ் வங்கி வரையறுத்துவிட்டது. தற்போது அரசிடம் மீதமுள்ள பங்குகளையும் தனியாரிடம் கொடுத்து அவ்வங்கியை முழுமையாக தனியார் வங்கியாக மாற்றுவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. மணி மேகலையின் அட்சய பாத்திரம் போல் அரசுக்கு வேண்டும்போதெல்லாம் அடிப்படை கட்டுமானத்திற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் துறைவாரி வழங்கி வரும் எல்ஐசியின் பங்குகளையும் தனியாருக்கு விற்பதற்கான அறிவிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரி கட்டாதவர்களுக்கு ஊக்கம் ”தகராறல்ல, நம்பிக்கை மட்டுமே” என்று மத்திய அரசு வருமான வரி கட்டாதவர்களைப் பார்த்து சமாதானக் கொடியை காட்டுகிறது. ஏற்கனவே மறைமுக வரி சம்பந்தமாக 189000 வழக்குகளை இந்த அரசு முடித்து வைத்துள்ளதாம். நேரடி வரி கட்டாமல் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள வகையில் 489000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகளையும் அதே வழியில் முடித்து வைக்க “வழக்கு தொடுத்தவர்கள் 31.03.2020-க்குள் சர்ச்சையில் உள்ள தொகையை மட்டும் கட்டினால் போதும். அவர்கள் வட்டி, அபராதம் என்று எதுவும் கட்டத் தேவையில்லை” என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது மத்திய அரசு.  அதே சமயம், மத்திய வர்க்க மக்களுக்கு வருமான வரி குறைக்கப்பட்டாலும் கூடவே அனைத்து சலுகைகளும் பறித்துக் கொள்ளப்பட்டன. இரண்டு திட்டங்களில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிறது அரசு. புதிய திட்டத்தால் பலருக்கு பயனில்லை. வருமான வரி விலக்கு என்பது கடந்த பல ஆண்டுகளாகவே 2.5 லட்சம் ரூபாயாகவே உள்ளது. 2015-16 ல் வருமான வரி தாக்கல் செய்தவர்களில் 76 லட்சம் பேர் மட்டுமே 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் காட்டியுள்ளனர். அதில் 56 லட்சம் பேர் மாதச் சம்பளம் பெறுபவர்கள். இப்பகுதியினருக்கு வருமான வரியில் இந்த பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை.  நிதிப் பற்றாக்குறை யாரிடம் வசதி உள்ளதோ, யாரிடம் வரி வசூல் செய்ய வேண்டுமோ அவர்களிடம் வசூல் செய்யாதது மட்டுமல்ல, அவர்களுக்கு வரிச் சலுகைகளையும், வட்டிச் சலுகைகளையும், மற்ற சலுகைகளயும் வாரி வழங்குகிறது இந்த அரசு. வாஜ்பாய் அரசின் போது உருவாக்கப்பட்ட எப்ஆர்பிஎம் (நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை) சட்டம் நிதிப் பற்றாக்குறையை ஜிடிபியில் 3% க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது. எனவே நிதி மேலாண்மை இந்த அரசுக்கு மிகப் பெரிய சவா லாக உள்ளது.

அதை சமாளிப்பதற்கு இந்த அரசு பாமர மக்கள் மீது புதிய, புதிய தாக்குதல்களை தொடுக்க எத்தனித்துள்ளது. அதற்கான முன்னறிவிப்பு இந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரிதாக உள்ள நிதியை உகந்தவாறு செலவழிக்க, மத்திய அரசின் திட்டங்களையும், மத்திய அரசு முன் மொழியும் திட்டங்களையும் இந்த அரசு ஆய்வுக்கு உட்படுத்தி அதை ஒட்டு மொத்தமாக மாற்றி அமைக்க உள்ளதாம். அப்படியானால் ஏழைகளின் வயிற்றை இறுக்கிக் கட்ட வேண்டும் என்று பொருள்.  கண்ணிரண்டும் விற்று பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் 2.10 லட்சம் கோடி ரூபாய் திரட்ட உள்ளதாம் இவ்வரசு. இது சென்ற ஆண்டு இலக்கை போன்று இரண்டு மடங்கு ஆகும். சாமானிய மக்களின் சேவகனாக விளங்கும் பொதுத்துறையை அழிக்க இவ்வரசு தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் மூலம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தாம். “கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கை கொட்டி சிரியாரோ?” என்றார் முண்டாசுக் கவிஞர் பாரதி. வெற்று முழக்கங்கள் மூலமாகவே பெரும்பாலான மக்களை தொடர்ந்து மயக்கத்தில் ஆழ்த்திவிட முடியும் என்று ஆழமாக நம்புகிறது மத்திய அரசு. அதன் வெளிப்பாடே இந்த பட்ஜெட்.

;