articles

img

ஏழு ஆண்டு கால மோடி ஆட்சியில் வங்கித்துறையின் பின்னடைவு.....

இந்த ஆண்டு மே 26 திருவாளர் மோடி அவர்கள் பிரதமராக பதவி ஏற்று 7 ஆண்டுகள் முடிந்துள்ளன. இந்த காலகட்டத்தில் வங்கித் துறை ஏராளமான மாற்றங்களை சந்தித்துள்ளது. அதனால் பயனடைந்தவர்கள் கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் தாம். சாதாரண மக்களின் வாழ்நிலையில் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனியார்மயத்தை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் பாய்கிறது இந்த அரசு. நேற்று வெளியான செய்தியின் படி “இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியும், சென்ட்ரல் வங்கியும் உடனடியாக தனியார் மயமாக்கப்படவுள்ளன. பாங்க் ஆப் இந்தியாவும் அடுத்ததாக அந்த பட்டியலில் உள்ளது.பதவியேற்ற சில மாதங்களிலேயே மோடி அரசு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுத்துறை வங்கிகளின் சேர்மன்கள் கூட்டத்தை “அறிவு சங்கமம்” என்ற பெயரில் கூட்டியது. அதில் அரசு வங்கிகளை படிப்படியாக தனியார்மயமாக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படிதான் கடந்த 7 ஆண்டுகளாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

27 அரசு வங்கிகள் 12 ஆக சுருங்கிவிட்டன
மோடி ஆட்சிக்கு வரும்போது 27 அரசு வங்கிகள் இருந்தன. அவற்றில் ஐடிபிஐ வங்கியை இந்த நிதி ஆண்டிற்குள் முழுமையாக தனியார்மயப்படுத்தும் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மற்ற 26 அரசு வங்கிகள்  2017, 2019, 2020ஆம் ஆண்டுகளில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு 12 வங்கிகளாக சுருங்கிவிட்டன. அதன் விளைவாக 1.ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் 2. ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் 3. ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் 4. ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா 5. ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர் 6. பாரத் மஹிளா வங்கி (பெண்களின் சேவைக்காக பிரத்யேகமாக துவக்கப்பட்ட வங்கி) 7. தேனா வங்கி 8. விஜயா வங்கி 9. சிண்டிகேட் வங்கி10. அலகாபாத் வங்கி  11. ஆந்திரா வங்கி 12. கார்ப்பரேஷன் வங்கி 13. ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் 14. யுனைடெட் வங்கி ஆகிய 14 அரசு வங்கிகள் காணாமல் போய்விட்டன. இவையெல்லாம் நாட்டின் பல்வேறு பகுதி மக்களுக்கு தனித்தன்மையுடன் சிறப்பாக செயல்பட்டு வந்தவை. இணைப்பின் காரணமாக இதுவரை சுமார் 5000 கிளைகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் பல்லாயிரம் கிளைகள் மூடப்படவுள்ளன. இதன் காரணமாக சாமான்ய மக்களுக்கான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த, வளரும் நாடுகளில் 2500 மக்களுக்கு ஒருவங்கி கிளை உள்ளது. ஆனால் நம் நாட்டில் 14000 மக்களுக்கு ஒரு வங்கி கிளை தான் உள்ளது. இருந்தபோதும் இணைப்பின் விளைவாக பல்லாயிரம் கிளைகள் மூடப்படுகின்றன.

தனியார்மயம்
ஏன் இணைக்கிறீர்கள் என்று கேட்டால் இணைப்பின் மூலம் கெட்டிப்படுத்துகிறோம் என்று  சொல்கிறார்கள்.ஆனால் மறுபுறம் ஐடிஎப்சி, பந்தன் வங்கி என்ற 2 நாடு தழுவிய வங்கிகள், 11 பேமண்ட் வங்கிகள், 9 சிறிய தனியார்வங்கிகள் உள்ளிட்ட 22 தனியார் வங்கிகள் 2015-17 காலகட்டத்தில் துவக்கப்பட்டுள்ளன. ஏன் புதிய தனியார் வங்கிகளை துவக்குகிறீர்கள் என்றால் போட்டியை ஏற்படுத்துகிறோம் என்கிறார்கள். ஆக அரசு வங்கிகளை சுருக்கி, தனியார் வங்கிகளை விரிவுபடுத்துவதுதான் மோடி அரசின் நோக்கம்.தற்போதுள்ள 12 அரசு வங்கிகளில் அதிகபட்சமாக 4 வங்கிகளைத் தவிர மற்ற 8 வங்கிகளும் தனியார்மயமாக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது மோடி அரசு. அதில் முதல் கட்டமாக இரண்டு வங்கிகளின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.

சாமான்ய மக்களுக்கான விவசாய கடன், சிறு, குறு தொழில் கடன், கல்விக்கடன், சுயஉதவி பெண்கள் குழுக்களுக்கான கடன் என்று கடன் வழங்குவது அரசு வங்கிகள்மட்டுமே. மறுபுறம் சாமான்ய மக்களை கந்து வட்டிக்காரர்கைப் போல் புதிய தனியார் வங்கிகளும், சிறிய தனியார் வங்கிகளும் கசக்கிப் பிழிகின்றன. அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில்தான் மோடி அரசு செயல்படுகிறது. இதன் காரணமாக இந்த கொரோனா காலத்திலும் ஏழை,எளிய மக்கள் வருமானமிழந்த நிலையில் தங்களின் மிச்ச சொச்ச சிறு சொத்துக்களையும் இழந்து வருகிறார்கள்.

செல்லா நோட்டு அறிவிப்பு
2016ஆம் ஆண்டு செல்லா நோட்டு அறிவிப்பின் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். கையில் காசு இருந்தும் அது தடாலடியாக செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் மருத்துவம் மறுக்கப்பட்டு சில இளம் குழந்தைகள் இறந்து போனார்கள். வரிசையில் நின்று மயங்கி விழுந்து இறந்தவர்கள், மாரடைப்பால் இறந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், வேலைப்பளுவால் இறந்த வங்கி ஊழியர்கள் என்று100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூட மோடி அரசு தயாராக இல்லை. புழக்கத்திலிருந்த செல்லா நோட்டுக்களில் 99.9% வங்கிக்குள் வந்துவிட்டன. அறிவிக்கப்பட்ட 50 நாட்களுக்குள் மாற்ற முடியாத நோட்டுக்கள் இன்னும் மக்களிடத்தில் உள்ளன. கறுப்புப் பணமும் ஒழியவில்லை. கள்ளப்பணம் 2000 ரூபாய் நோட்டில் புதிதாக புழங்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஒழியவில்லை. மாறாக புதிய வடிவில் பல்கிப் பெருகி உள்ளது. செல்லா நோட்டு அறிவிப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட 70க்கும்மேற்பட்ட வழக்குகள் 2016ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளன. அவை என்றைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.ஆனால் மோடி அரசின் இந்த நடவடிக்கையால் வங்கித்துறையின் கடன் வழங்கல் - வசூல் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. வெளிநாடுகளில் இந்திய நாணயத்தின் நாணயம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது.

எப்ஆர்டிஐ மசோதா
2017ஆம் ஆண்டு மோடி அரசு நிதித்தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு (எப்ஆர்டிஐ) என்ற மசோதாவை கொண்டு வந்தது. அதன்மூலம் ஏதேனும் ஒரு வங்கி திவாலானால் அவ்வங்கியில் உள்ள வைப்புதாரர்களின் வைப்புத் தொகையை கொண்டு நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கான மசோதா இது. ஒரு வேளை இது சட்டமாகியிருந்தால் வங்கியில் உள்ள மக்களின் வைப்புத் தொகைக்கு எந்த பாதுகாப்பும் இருந்திருக்காது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பின்காரணமாக 2018ஆம் ஆண்டு இந்த மசோதா கைவிடப்பட்டது.

ஐபிசி சட்டம்
2016ஆம் ஆண்டு மே மாதம் ஐபிசி என்ற திவால் சட்டம் மோடி அரசால் கொண்டுவரப்பட்டது. 2020 மே மாதம்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த சட்டத்தின் நான்காண்டு செயல்பாடுகளை பற்றி சில புள்ளி விவரங்களை பொது வெளியில் பகிர்ந்துள்ளார். அதன்படி “ரூபாய் 4.3 லட்சம் கோடி வராக் கடனுக்காக221 வழக்குகள் இச்சட்டத்தின் மூலமாக தீர்த்து வைக்கப்பட்டன. இதில் 2.29 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது”. இதில் 7 பெருநிறுவனங்களுக்கு மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படியாக கார்ப்பரேட்டுகளுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

வராக்கடன் 
2014ல் மோடி அரசு ஆட்சிக்கு வரும்போது அரசு வங்கிகளின் மொத்த வராக் கடன் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி.இந்த 7 ஆண்டு காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகைரூ. 6 லட்சம் கோடிக்கு மேல். அதற்குப் பிறகும் தற்போதுள்ள வராக் கடன் ரூ. 9 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இவ்வராக் கடனில் சுமார் 90% அளவிற்கு ரூ. 5 கோடியும் அதற்குமேல் கடன் வாங்கி திரும்பி செலுத்தாத பெருங்கடனாளிகளுக்கு சொந்தமானது. சாமான்ய மக்களுக்கு வழங்கப்படும் விவசாய கடன், குறுந்தொழில் கடன், கல்விக்கடன், பெண்களுக்கான சுயஉதவிக்குழு கடன் ஆகியவற்றால் ஏற்படும் வராக் கடன் ஒட்டுமொத்த வராக் கடனில்2 சதவீதம் கூட கிடையாது. அரசு வங்கிகளை ஏன் தனியார்மயமாக்குகிறீர்கள் என்று மத்திய நிதியமைச்சரைக் கேட்டால் “நாங்கள் ரூ. 3 லட்சம் கோடிக்கு மேல் அரசு கஜானாவிலிருந்து அரசு வங்கிகளுக்கு மூலதனமாக வழங்குகிறோம். இது தொடர முடியாது. எனவேதான் தனியார்மயமாக்குகிறோம்” என்று கூறுகிறார். கார்ப்பரேட் பெருநிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வராக் கடனை வசூலித்தாலே அரசு கஜானாவிலிருந்து பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனம் கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.

கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் துவங்க அனுமதி
2020 நவம்பர் மாதம் ரிசர்வ் வங்கி ஒரு கொள்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பெரிய கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் துவங்க அனுமதிக்கப்படும். நவீன தாராளமயக் கொள்கைக்கு ஆட்சியாளர்கள் உதாரணம் காட்டும் அமெரிக்காவில்கூட பெரிய கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் துவங்க அனுமதிப்பது கிடையாது. இவ்வாறு அனுமதிக்கப்பட்டால் அத்தொழில் நிறுவனங்கள் தங்களுக்குள்ளேயே கடன் கொடுத்துக் கொள்வார்கள். மக்கள் நலனை புறக்கணிப்பார்கள். 1969க்கு முன்னால் இதுதான் நமது நாட்டு அனுபவம். எனவேதான் 1969 ஜூலை 19ஆம் நாள் 14 பெரிய தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன. இருந்தும் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிற மோடி அரசு அதே பாதையில் பயணிக்க எத்தனிக்கிறது.

கிராம வங்கிகளின்  பங்கு விற்பனை
2016ல் மோடி அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலமாக கிராம வங்கிகளின் பங்குகளில் 49 சதவீதம் வரை தனியாரிடம் கொடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு கிராம வங்கிகள்தான் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கான கடன் வழங்குவதில் முன்னணியில் நிற்கிறது. 21,000 கிளைகளைக் கொண்ட 43 வங்கிகள் நாடெங்கிலும் உள்ள 650க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் திறம்பட செயல்பட்டு வருகின்றன. இவ்வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்றால் எந்த நோக்கத்திற்காக 1976ல் இவ்வங்கிகள் உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் முற்றிலுமாக சிதைந்துவிடும். தற்போது மத்திய அரசாங்கம் இந்த முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கூட்டுறவு வங்கிகளையும் தனியார்மயமாக்க முயற்சி
2020ஆம் ஆண்டு வங்கிகள் ஒழுங்கமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்ததன் மூலமாகஇந்திய அரசாங்கம் கூட்டுறவு வங்கிகளை மாநில அரசின்கட்டுப்பாட்டிலிருந்து நேரடியாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டது. சமீப காலமாக ரிசர்வ்வங்கி மத்திய அரசின் மற்றொரு துறையாக செயல்படுகிறது. மேலும் நகர கூட்டுறவு வங்கிகளை சிறிய தனியார் வங்கிகளாக மாற்றுவதற்கான முயற்சியிலும் மோடி அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆக ஒட்டுமொத்தமாக கூட்டுறவு வங்கிகளின் மக்களுக்கான மகத்தான சேவையை முடக்கும் விதத்தில் மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

5 கோடி கையெழுத்து
சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமென்று சொன்னால் அதற்கு வங்கிகள் மிக முக்கியமான பாத்திரம் வகிக்க வேண்டும்.  பொதுத்துறை, கிராம, கூட்டுறவுவங்கிகளையெல்லாம் தனியார்மயமாக்கி விட்டால் மக்களின் சேமிப்பிற்கும் பாதுகாப்பு இருக்காது. சாமான்ய மக்கின் வாழ்வு மேம்படவும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்காது.சில ஆண்டுகளில் இதனுடைய விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். நம் நாட்டு மக்களை வறுமையின் கோரப்பிடியில் தள்ளிவிடும். ஏற்கனவே அதிகரித்துள்ள ஏற்றத்தாழ்வுகள் இன்னும் பன்மடங்கு பெருகிவிடும். எனவேதான் மோடி அரசின் தனியார்மயமாக்கும் கொள்கையையும், வங்கித்துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அதனை சீரழிக்கும் வேலையையும் கண்டித்து 10 லட்சம் வங்கி ஊழியர்கள் 2021 மார்ச் 15, 16 ஆகிய இரு தினங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 2021 மே 26ஆம் தேதி மோடி அரசின் 7 ஆண்டு காலஆட்சி நிறைவை நாடெங்கிலும் கறுப்பு தினமாக கடைபிடித்தனர். இந்த நாசகர கொள்கையை எதிர்த்து பொதுமக்களிடையே 5 கோடி கையெழுத்துகளை பெறும் இயக்கத்திற்கான அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. மோடி அரசின்மக்கள் விரோதக் கொள்கையை முறியடிப்போம். மக்கள் நலன் காப்போம்.

கட்டுரையாளர்  : சி.பி.கிருஷ்ணன்