கொச்சி, மே 5- சேர்த்தலா அரசு நகர தொடக்கப்பள்ளியில் ஒரு மணி நேரத்தில் 247 மாணவ மாணவியரை சேர்த்து சாதனை படைத்துள்ளது. சனியன்று பகல் 11 மணி முதல் 12 மணி வரை சிறப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி வளாகத்தில் குவிந்தனர்.கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேர்த்தலா அரசு நகர எல்பி பள்ளி கடந்த ஆண்டு இரண்டு மணி நேரத்தில் 233 மாணவர்களை சேர்த்து தேசிய விருது பெற்றது. தேசிய சாதனைகளை மதிப்பீடு செய்யும் பெஸ்ட் ஆப் இந்தியா இந்த அங்கீகாரத்தை அந்த பள்ளிக்கு வழங்கியது. இடது ஜனநாயக முன்னணி அரசின் பொதுக்கல்வி பாதுகாப்பு நடவடிக்கைகளும், மாணவர் நட்பு பள்ளிக்கூடங்களாக நடத்தப்படும் பாடங்களும் – பாடத்திட்டங்களும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உதவியுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளி குறித்த விவரங்களை அறிந்து கொள்ள தனிஇணையதளமும், யுடியுப் சானலும் உள்ளது. இந்த பள்ளியில் மொத்தம் 650 மாணவர்கள் படிக்கின்றனர்.