tamilnadu

img

தண்ணீர் பஞ்சத்தைப் போக்க நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் பல கி.மீ. அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் போர்வெல் கிணறுகளும் வறண்டுவிட்டன.கடந்த ஆண்டு பருவமழை பற்றாக்குறையால் தமிழகத்தின் வடக்கு வடமேற்கு மற்றும்தென் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பவில்லை. காவிரி தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோதும், திட்டமிட்ட நீர் மேலாண்மை இல்லாத நிலையில் பல லட்சம் கன அடி நீர் கடந்த ஆண்டு வங்கக்கடலில் கலந்து வீணானது. போதிய அளவுஉபரி நீர் கிடைத்தும் குளங்கள் கண்மாய்களுக்கு திருப்பும் கால்வாய் திட்டங்கள் இல்லை.அப்படி இருந்த கால்வாய் திட்டங்களும் சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில் பிப்ரவரி இறுதியில் இருந்து நீர்நிலைகள் வற்றத் தொடங்கியதால், நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென குறைய தொடங்கியது. இது மார்ச் மாதத்தில் இன்னும் அதிகரித்து இப்போது கடும் வறட்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டங்களை நம்பியே கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரம் உள்ளது. ஆனால் தாமிரபரணி காவிரியில் தண்ணீர் இல்லாததால் குடிநீர்த் திட்டங்களின் கீழ் பயன்பெறும் கிராமங்கள், நகரங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் அளவு குறைக்கப்பட்டுள்ளது.போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பெரும்பாலானவர்கள் குடிநீரை விலைக்கு வாங்கி நிலைமையை எதிர்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் அன்றாடப் பயன்பாட்டுக்கான தண்ணீரின் தேவைக்கு நிலத்தடி நீரையே பொதுமக்கள் நம்பியிருக்கின்றனர். கோடைகாலத்தில் போட்டிபோட்டு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து அன்றாடப் பயன்பாட்டுக்கு தண்ணீர் எடுப்பதால் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் நீர்மட்டம் சரிந்துள்ளது.தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யும் என்று வானிலை மையம் நம்பிக்கைகொடுத்தாலும் மழை எப்போது பெய்ய தொடங்கும் என்பது பற்றி வானிலை அறிவிப்புஎதுவும் இல்லை. இதனால் தென் மாவட்டங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நகர்ப்புறங்களில் புதிதாக குடியேற்றங்கள் அமைத்தபோது, 50 அடியில் தண்ணீர் கிடைத்தது. ஆனால் இப்போது 200, 300 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைத்த வீடுகளில் கூட சுத்தமாக தண்ணீர் இல்லை.குடியேற்றப் பகுதிகளை ஒட்டிய பெரிய நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் நீர் நிலைகளுக்கான தண்ணீர் வரத்தும் தேக்கமும் அடியோடு இல்லாமல் போய்விட்டது.

நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாத நிலையில் 200 அடிவரை அமைக்கப்பட்ட பழைய ஆழ்குழாய் கிணறுகள் பயனற்றுள்ளன. இதனால், அன்றாட பயன்பாட்டுக்கான தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கத் தொடங்கியுள்ளனர். மத்திய நிலத்தடி நீர்வாரியம் 2017-ம் ஆண்டுவெளியிட்ட விபரத்தில் தமிழகத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.20 ஆண்டுகளுக்கு முன்னர் 10 மீட்டர் ஆழத்தில்இருந்த நிலத்தடி நீர் இப்போது 50 முதல் 60 மீட்டர் ஆழத்துக்குச் சென்றுவிட்டது. நீர் சேமிப்பு, நீர்நிலை சீரமைப்பு பணிகள் இல்லாவிட்டால் இந்த நிலைமை மோசமாகும் என்று மேலும் எச்சரித்துள்ளது. ஆனால் ஆட்சியாளர்கள் இதுகுறித்து கண்டுகொள்வதாக இல்லை.இராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுகிறது. எனினும் முதுகுளத்தூர், கடலாடி பகுதிகள் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள்தங்கள் குடிநீர் தேவைக்காக தள்ளு வண்டிகளில் குடங்களை அடுக்கிக் கொண்டு 3 முதல் 5 கி.மீ தூரம் நடந்து சென்று கூட்டு குடிநீர் திட்டகுழாய்களில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுவும் வாரம் ஒருமுறைதான் வருகிறது. நிலத்தடி நீர் கடும் உப்புத்தன்மை கொண்டதாக உள்ளதால் அதை பயன்படுத்த முடியவில்லை என்று இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.சென்னை போன்ற நகரங்களில் பகலில்வேலைக்கு செல்பவர்கள் இரவில் ஓய்வெடுக்கவாய்ப்பில்லாமல் தண்ணீர் குடங்களுடன் தெருத்தெருவாய் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியாக வசிக்கும் முதியவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். பெருநகர மாநகராட்சி ஆனபிறகு சென்னையின் எல்லை பல மடங்கு விரிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குழாய்களின் வழியாக தண்ணீர் இணைப்பு, புதை சாக்கடை வசதிகளை செய்துதருவதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. பெருநகரப் பகுதிக்குள் இருக்கும் நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் இல்லை. ஏரிகள், குளங்கள்அனைத்தும் குப்பை மேடுகளாகவே காட்சியளிக்கின்றன. உடனடியாக தமிழக அரசு நகரம் முதல் கிராமம் வரை தண்ணீரை சேமிக்கும் முறைகள்குறித்து புதிய திட்டங்களை கொண்டுவரவேண்டும். மக்களின் இன்னல்களை புரிந்துகொண்டு குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசுநிரந்தரத் தீர்வுகாணவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து செயல்படவேண்டும்.

என்னதான் தீர்வு?

இப்போதைய கோடைக் காலத்தை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள கண்மாய், குளங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரி சீர் செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்ச

னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். இல்லாவிட்டால் வருங்காலத்தில் மிகவும் சிரமப்பட வேண்டியநிலை ஏற்பட்டு விடும் என்று மத்திய நிலத்தடி நீர் வாரியம் எச்சரித்துள்ளதையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

;