tamilnadu

img

செல்லா நோட்டுக்கு வங்கியில் நின்றது போல பிறப்புச் சான்றிதழ் கேட்டு அலைமோதும் மக்கள்... பேரா.அருணன் பேச்சு

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாஸ் திருமண அரங்கில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் தலைமை வகித்தார். மாநகர நிர்வாகி என்.குருசாமி வரவேற்றார். 

மருத்துவர் மருததுரை, தமுஎகச மாநிலகவுரவத் தலைவர் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர். தமிழக மக்கள்ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “உலகம் முழுக்கவே மத உணர்வுகள் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தது. மரணத்திற்குப் பிறகும் மறுவாழ்வு உண்டு என்ற நம்பிக்கை பழங்கால மக்களுக்கு இருந்தது. சமண மதத்தின் கூறுகள் கிறித்தவ மதத்தில் இருந்ததால் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். பௌத்தமதத்தின் கூறுகளான சமத்துவம் இருந்ததால்இஸ்லாமிய மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். சமண, பௌத்த மதத்தை ஒழித்துக் கட்டியது போல் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தையும் ஒழித்துக்கட்ட வேதமதம் திட்டமிட்டுள்ளது. அது ஒருநாளும் நடக்காது. மற்ற மதங்களை ஒழித்துக் கட்டிவிட்டு ஒரே மதத்தை உருவாக்க திட்டமிடுகின்றனர். அதனை எதிர்க்கவேதமிழக ஒற்றுமை மேடை உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மதம் என்று சொல்கிறார்களே அதில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் எனபெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் உணர வேண்டும். இந்து மதம் என்பது பல மதங்களின் கூட்டமைப்பு ஆகும். இதில் சிறுபான்மையினராக உள்ள வேத மதத்தினர் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே இருந்த மதுரை வீரன் சிலைவெளியே மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பஞ்சமர்களின் சிலை உள்ளே இருப்பதா என்ற சாதி ஆதிக்க உணர்வு காரணமாகும். ஆதிக்க மதமாக உள்ள வேத மதத்தினர் இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் ஒழிக்கமுயற்சிக்கின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெற்றால் அடுத்த குறி பஞ்சமர்களின் தெய்வமான சுடலைமாடனும், கருப்பண்ணசாமியும், அய்யனாரும்தான். இதனை உணர்ந்து தமிழர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்காக போராடுகிறீர்களே என எங்களை நோக்கி சிலர் கேள்வி எழுப்புகின்றனர். பாதிக்கப்படுவோருக்கும், ஒடுக்கப்படுவோருக்கும் தானே போராட முடியும். தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் குரல் போல ஒலிக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊதுகுழல் போல இருக்கிறது. திராவிட கட்சிகளின் பெயரில் ஆட்சியில் இருக்கும் அமைச்சர் பேச்சை கவனித்தால் மதவாதம் எந்த அளவுக்கு தலைதூக்கி நிற்கிறது என்பது விளங்கும். தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை சில கட்சிகள் தூண்டிவிடுகின்றன என அமைச்சர் பேசுகிறார். அப்படி என்றால்இந்து பயங்கரவாதமும் வரும் என்கிறார்.பயங்கரவாதத்தை மதத்தோடு தொடர்புபடுத்தலாமா. இதனை ஒரு அமைச்சர் பேசலாமா. பயங்கரவாதத்தை எந்த மதத்தோடும் முடிச்சு போடாதீர்கள். ஒரு காலத்தில் தமிழகத்தில் மதநல்லிணக்கம் கொடிகட்டி பறந்தது. அண்ணாவும் காயிதே மில்லத்தும் போற்றிய நட்பு நாட்டுக்கு உதாரணமாக இருந்தது. அதனைக் கண்டு மக்கள் மத ஒற்றுமையோடு செயல்பட்டனர். 

ஆனால் இன்றைக்கு அமைச்சர் ஒருவர் மத பிரிவினையை ஊக்குவிக்கும் விதமாக பேசுகிறார். எதிர்க்கட்சியினரை பார்த்துபாகிஸ்தானில் உள்ளவர்களுக்கான போராடுகிறீர்களே என்று கேட்கிறார். அவர்கள் மக்கள் இல்லையா?. செல்லா நோட்டுக்கு வங்கியில் நின்றதுபோல், இன்றைக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்டு அலுவலக வாசலில் நிற்கும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. அது வேண்டாம் என்றுதான் அதனை எதிர்த்து இன்றுமனித சங்கிலியில் பொதுமக்கள் கரம் கோர்த்து நிற்கின்றன. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கைகோர்த்து நின்றனர். இன்றைக்கு மக்கள் உரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு அமைச்சர்களே துணை போகின்றனர் என்றால் ஆபத்து எந்த அளவு உள்ளது என உணர வேண்டும். தேசத்தைக் காத்த மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் பணி காலத்தின் அவசியமாகும்” என்றார். 

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், கே.பக்கிரிசாமி, சி.ஜெயபால், எம்.மாலதி, பி.செந்தில்குமார், என்.வி. கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் இரா.புண்ணியமூர்த்தி, ராஜன், ஆர்.வாசு, அரவிந்தசாமி, சரவணன், தமுஎகச மாவட்டச் செயலாளர் விஜயகுமார், காங்கிரஸ், திராவிடர் கழகம், ஐக்கிய ஜமாத், உலமாக்கள் சபை, சமூக நல்லிணக்க இணையம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம், அறநெறி மக்கள் இயக்கம், சமவெளி விவசாயிகள் இயக்கம், தாளாண்மை உழவர் இயக்கம், வெற்றி தமிழர் பேரவை மற்றும் திரளான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சை மாநகர நிர்வாகி அப்துல் நசீர் நன்றி கூறினார்.

;