புதுக்கோட்டை, நவ.16- புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிய தடகள வீரருக்கும், வீராங்கனைக்கும் எளிமையான முறை யில் வெள்ளிக்கிழமையன்று திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை கவிநாடு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். தனியார் தடகள பயிற்சியாளர். இவரது மகள் சூரியா. இவர் தடகள போட்டியில் சிறப்பிடம் பெற்றதன் மூலம் தெற்கு ரயில்வேயில் இவருக்கு வேலை கிடைத்தது. தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். ஆசிய அளவில் நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இதேபோன்று, புதுக்கோட்டையை அடுத்த அகரப்பட்டியைச் சேர்ந்த ஜி.லட்சுமணனும் லோகநாதனிடம் பயிற்சி பெற்று ஆசிய அளவிலான போட்டியில் சாதனை படைத்து வருகிறார். இவருக்கு விளையாட்டு பிரிவுக்கான ஒதுக்கீட்டில் இந்திய ராணு வத்தில் வேலை கிடைத்தது. இவரும் தொடர்ந்து தடகள போட்டியில் பங்கேற்று பல்வேறு பதக்கங்க ளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமையைத் தேடித் தந்துள்ளார்.
லட்சுமணன், சூரியா ஆகியோரின் சாதனையை நாடே கொண்டாடியது. இந்நிலையில் விளையாட்டுக்கு இடையே இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இந்நிலையில், இருவருக்கும் புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன் கோயிலில் எளிய முறையில் திருமண விழா நடைபெற்றது. உறவினர்களுடன், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.