tamilnadu

ஒரத்தநாடு பகுதியில் கொரோனா வைரஸ் கண்டறியும் முகாம்

 தஞ்சாவூர்: ஒரத்தநாடு பேரூராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை சார்பாக, ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில்  கொரோனா அறிகுறி கண்டறியும் பரிசோதனை முகாம் கடந்த 6 தினங்களாக நடைபெற்று வருகிறது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய - மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒரத்தநாடு பேரூராட்சி நிர்வாகமும், ஒரத்தநாடு அரசு தலைமை மருத்துவமனை பொது சுகாதாரத்துறை சார்பாகவும், ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு முகாமை கடந்த வெள்ளிக்கிழமை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் தொடங்கி வைத்தார்.  இதில் சுகாதார ஆய்வாளர்கள் சரண்ராஜ், அமுதவாணன், செவிலியர்கள் தீபிகா, மருத்துவமனை உதவியாளர்கள் கணபதி, கண்ணன் ஆகியோர் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என கண்டறிந்து வருகின்றனர்.  இதுவரை இந்த மருத்துவக் குழு 500-க்கும் மேற்பட்டவர்களை சோதனை செய்துள்ளனர். மேலும் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் பரமசிவம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் நோய் தடுப்பு மருந்துகள் அடித்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.