கும்பகோணம், மே 14- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து கடந்த மாதம் முதல் கும்பகோணம் தாராசுரம் நேரு அண்ணா காய்கறி அங்காடியில் நடைபெற்று வந்த சில்லறை வணிகம் நிறுத்தப்பட்டது. அதனால் சில்லறை வணிகம் விற்பனை கும்பகோணத்தில் பல்வேறு பள்ளி திடல்களிலும், தட்டு வண்டிகளிலும் நடைபெறுகிறது. இந்நிலையில் கும்பகோணம் தாராசுரம் நேரு அண்ணா காய்கறி அங்காடியில் தங்கியிருந்த லாரி ஓட்டுநர் பச்சமுத்து என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து அங்காடியில் நடைபெற்ற மொத்த காய்கறி வணிகமும் இரவோடு இரவாக மூடப்பட்டடு பாதுகாப்பை கருதி நகரின் இதர சாலைகள் மூடப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது. மேலும் மார்க்கெட்டுக்கு நாள் தோறும் லாரிகள் மூலம் வரும் காய்கறி லோடுகள் கும்பகோணம் தாராசுரம் அடுத்த புறவழிச்சாலையில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனைகள் நடைபெறுகிறது.