tamilnadu

பிரதமர் திட்டத்தில் வீடு கட்டியதாக வாடகை வீட்டில் வசிப்பவருக்கு வாழ்த்து கடிதம்... ஊழல் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம்

தஞ்சாவூர்:
தஞ்சையில் வாடகை வீட்டில் வசிப்பவருக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டியதற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் வந்ததால் அதிர்ந்து போன குடும்பத்தினர், ஆட்சியரிடம் விசாரணை கோரி மனு அளித்தனர்.தஞ்சாவூரை அடுத்த கரந்தையை சேர்ந்த இளம்வழுதி(64), கூட்டுறவு அச்சகத்தில் எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில், புதிய வீடு கட்டாத நிலையில், அவருக்கு புதிய வீடு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் ஒன்று வந்துள்ளது.

அந்த கடிதத்தில், “புதிய வீடு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் என்றும், புதிய வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், திடக்கழிவு மேலாண்மை, பாதுகாப்பான குடிநீர், எரிசக்தி சேமிப்பு மற்றும் மரக்கன்று நடுதல் போன்றவற்றில் முக்கிய கவனத்தை செலுத்தவும். புதிய வீடு குழந்தைகளுக்கு மேம்பட்ட கல்வியையும், சுகாதாரமான வாழ்க்கையையும், புதிய வாய்ப்புகளையும் பெற உதவியாய் இருக்கும் என்றும், சிறந்த வீடுகளை அங்கீகரிக்க வீட்டை புகைப்படம் எடுத்து செயலியில் ஏற்றி அனுப்பினால் விருது வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், அவரது குடும்பத்தினர் குழப்பமடைந்து, இளம்வழுதி தஞ்சை ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் புகார் மனு அளித்தார்.இதுகுறித்து இளம்வழுதி கூறுகையில், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் சேர விண்ணப்பம் பெற்று சென்றனர். அப்போது சொந்தமாக நிலம் இல்லை என கூறியும், எனது விபரங்களை வாங்கி சென்றனர். ஆனால் தற்போது நான் வீடே கட்டாத நிலையில், வீடு கட்டியதாக கடிதம் வந்துள்ளது. தனக்கு தெரியாமல் தனது பெயரில் மத்திய அரசிடம் இருந்து பணம் பெறப்பட்டுள்ளதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி தவறு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன்” என்றார்.