tamilnadu

அறுந்து கிடக்கும் மின்கம்பியை தொடுவதோ, மிதிப்பதோ கூடாது மாணவர்களுக்கு பள்ளித் தாளாளர் அறிவுரை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம்-அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், செவ்வாய்க்கிழமை அன்று மாணவர்களுக்கான மழைக்கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளித் தாளாளர் வழக்குரைஞர் வி.ஏ.டி.சாமியப்பன் தலைமை வகித்து பேசியதாவது, “தற்போது மழைக்காலமாக இருப்பதால், மாணவர்கள் மழை பெய்யும் போதோ, இடி, மின்னலின் போதோ மரங்கள், பழுதடைந்த வீடுகள், கட்டடங்கள் அருகே செல்லக் கூடாது.  பழுதடைந்த மின்கம்பங்கள் அருகே செல்லக்கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகில் செல்வதோ, தொடுவதோ, மிதிப்பதோ கூடாது. உடனடியாக மின்வாரிய அலுவலர்க ளுக்கு தகவல் அளிப்பதோடு, பொதுமக்கள் யாரும் மின்கம்பியை தொடாதவாறு எச்சரிக்கை செய்ய வேண்டும். மழைநீர் வாய்க்கால், பாசன வாய்க்கால்களை எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும். குளம், குட்டை, ஏரி, கடல் பகுதியில் குளிக்கக் கூடாது. குடிதண்ணீரை நன்கு காய்ச்சி, ஆறவைத்து குடிக்க வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மை யாக பராமரிக்க வேண்டும். மழையில் நனைந்து விடாமல் இருக்க குடைகள், மழைக்கோட்டு களை பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் கண்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மாணவ, மாணவிகள் பாதுகாப்புடன் பள்ளி முடிந்து வீடு திரும்ப வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில், அறக்கட்டளை பொருளாளர் பி.பாலசுப்பிரமணியன், பள்ளி முதல்வர் சம்பத், துணை முதல்வர் சரோஜா, நிர்வாக அலுவலர் பிலவேந்திர ராஜ், அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.