tamilnadu

திருப்புறம்பியம் பெருமாள் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருட்டு

கும்பகோணம், பிப்.12- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில் உள்ள சீனிவாசபெருமாள் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன. திருப்புறம்பியம் தெற்கு வீதியில் ஆதிதாசப்ப நாயுடு பரம்பரைக்கு சொந்தமான சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் அதே ஊரைச் சேர்ந்த பராங்குசம் என்பவர் தினமும் பூஜைகளை செய்து, பராமரித்து வருகிறார். இந்நிலையில் திங்களன்று இரவு கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் கோவிலுக்கு பூஜை செய்ய வந்தபோது, கோவிலுக்குள் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பூஜை செய்யப்பட்டு வந்த ஒன்றரை அடி உயரம் உள்ள ஐம்பொன்னாலான பெருமாள் சிலை, பத்மாவதி மற்றும் மற்றொரு தாயார் சிலையும், பீரோவில் இருந்த வெள்ளி ஜடாரி, வெள்ளி பூஜை பொருட்கள் ஆகியவற்றையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி பராங்குசம், கிராமத்தில் உள்ளவர்களை அழைத்து சென்று பார்த்தபோது, கோவிலின் பின்பக்கம் 20 அடி உயரம் கொண்ட மதில் சுவரில் மர்ம நபர்கள் ஏறி வந்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும், மேலும், கோவில் உள்ளே மூலவர் கதவில் இருந்த மணிகளில் கிரீசை தடவி சத்தம் வராமல் இருப்பதற்காக வைத்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து பூசாரி பராங்குசம் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.