tamilnadu

img

விளையாட்டுக்கதிர் : மறக்க முடியாத வானவில் தேசம்!- சி.ஸ்ரீராமுலு

“வெள்ளையின வீரர்கள் சுற்றி நிற்க. நடுவே கோப்பையை கையில் ஏந்தியபடி நிற்கும் அந்தக் கறுப்பின வீரர் தங்கள் நாட்டின் 6 கோடி மக்களுக்கும் காணிக்கையாக்கிய காட்சி, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த தருணம் அது”. விளையாட்டு உலகம் கடந்த ஆண்டில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி இருந்தாலும், இந்திய வீரர்கள் சிலர் அளப்பரிய சாதனை படைத்தாலும் நம்மை நாள்தோறும் ஆட்டிப் படைக்கும் பரபரப்புக்கு நடுவே வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வை எளிதாய் கடந்துவிட்டது. விளையாட்டுச் செய்திகளை தாங்கி வரும் பெரும்பாலான செய்தித்தாள்களின் பக்கம் சோகம் ததும்பியது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்கி நவம்பர் 12 ஆம் தேதி வரை ஜப்பானில் நடந்த ‘ரக்பி’ உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் அந்த வெற்றி மகத்துவம் தான் என்ன? என்கிறது மில்லியன் கேள்விகள்.  அதற்கு விடை தருகிறது பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘இன்வெக்ட்ஸ்’திரைப்படமாகும். உண்மைச் சம்பவங்களின் உயிர்ப்பான படைப்பு இது.

உயிர் நாதம்...
இளைஞர்கள் சிலர் ரக்பி பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அத்தனைபேரும் வெள்ளையர்கள். அருகிலேயே கருப்பின குழந்தைகள் கால்பந்து விளையாடுகிறார்கள். ஆனாலும் இருதரப்பும் வெவ்வேறு உலகங்களில் இயங்கிக் கொண்டிருப்பது தான் படத்தின் முதல் காட்சி! தென்னாப்பிரிக்கா ‘ரக்பி’ வீரர்கள் ஒரே இடத்தில் பயிற்சி செய்வதை தவிர்த்து நாடு முழுவதும் பயணம் செய்து குழந்தைகள், இளைஞர்களோடு இணைந்து விளையாட வேண்டும் என்கிறார் அதிபர் மண்டேலா. முதலில் தயங்கினாலும் நாடு முழுவதும் கிடைத்த வரவேற்பில் அசந்து போகிறார்கள் வீரர்கள். அந்த அணியில் ‘சஸ்டர் வில்லியம்ஸ்’ மட்டுமே கருப்பின வீரர். அவரை நோக்கி ஓடி வரும் கருப்பின குழந்தைகளுடன் வெள்ளை வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேரும்போது உற்சாகம் தானாக பொங்குகிறது. நிறம் மாறுகிறது. கருப்பு குழந்தைகளுக்கு ரக்பி கற்றுக் கொடுக்கிறார்கள். வெள்ளையும்-கருப்பும் இரண்டர கலந்து விடுகிறது! மண்டேலாவின் அந்த தொலைநோக்கு பார்வை வெற்றி பெறுகிறது!

அற்புதம்... அற்புதம்....
சிறு மைதானம், அதையொட்டிய சாலை, வாகனங்கள் அணி வகுக்கிறது. கால்பந்து விளையாடும் கருப்பின சிறுவர்கள் ‘மடிப, மடிப’ என  ஆனந்த கூத்தாடுகிறார் கள். எதிரில் இருக்கும் வெள்ளையின வீரர்களின் முகங்களில் அவ்வளவு வெறுப்புணர்ச்சி. ‘அந்த தீவிரவாதி’ விடுதலையானால் இனி நாட்டுக்கு கேடுதான் என்கிறார் பயிற்சியாளர். ஆம்! சிறையில் இருந்து விடுதலையாகும் அந்தக் கைதியின் பெயர் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்க மக்களின் உணர்ச்சிகரமான போராட்டத்தால் வன்முறையின் நிழல் படிந்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, 27 ஆண்டுகாலம் கொடுமைகளை அனுபவித்த அந்த போராளியின் விடுதலை உலக நாடுகளுக்கும் கறுப்பு மக்களும் புது வெளிச்சமாகும்.

வென்றது மக்கள் சக்தி...
காலம் கனிந்தது. முதல் பொதுத் தேர்தலை சந்திக்கிறது நாடு. மண்டேலா சார்ந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மகத்தான வெற்றி காண்கிறது. அதிபராக பொறுப்பேற்கிறார் மண்டேலா. 

நான் அவன் இல்லை!
பிரிட்டோரியா தலைமைச் செயலகத்திற்குள் அதிபராக நுழையும் மண்டேலாவுக்கு வேண்டாவெறுப்பாக வரவேற்ப்பு. மாற்றத்தை ஏற்க மனமில்லாமல் பணி விலகல் கடிதம் கொடுக்கிறார்கள் வெள்ளையர்கள். அவர் விடுதலைப் பெறலாம், தேர்தலில் வெற்றி பெறலாம். நாட்டை ஆள முடியுமா? என நம்மூரைப் போன்று முதலாளித்துவ பத்திரிகைகள் வரிந்து கட்டுகின்றன.  எதற்கும் அசராத மண்டேலா. ‘இதற்குத்தான் ஆசைப்பட்டாய்’ என்பதை உணர்ந்து அவரது முதல் நாள் பணி வித்தியாசமாக தொடங்குகிறார்.  அலுவலகச் செயலாளரிடம் மெல்ல பேசத் துவங்குகிறார். உள்நாட்டு கலவரம், வேலையின்மை, குற்றச் செயல்கள் என பட்டியல் நீள்கிறது. ஆனாலும், இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா ஸ்பிரிங் போக்ஸ் அணிகளின் ரக்பி போட்டியே அன்றைய தினம் பிரதான இடத்தை பிடிக்கிறது. ரசிகர்கள் இரண்டாக பிளவுப்பட்டு நிற்கும் மைதானத்தில், கறுப்பின ரசிகர்கள் இங்கிலாந்தை ஆதரித்து குரல் எழுப்புகிறார்கள். அதிபர் மண்டேலா மைதானத்திற்கு நுழைகிறார். பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ந்து போகிறார்கள். வீரர்களிடம் ஒருங்கிணைப்பு இல்லாமல் மிக மோசமாக தோற்கிறது தென்னாப்பிரிக்கா அணி. கேப்டனை நீக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. அத்தனை காட்சிகளும் மெய்சிலிர்க்கிறது.

மாமனிதர்....
இடைவேளைக்கு பின்னர், 1995 ஆம் ஆண்டில் அரசியல் களம், விளையாட்டு களம் மேலும் சூடேறுகிறது. ரக்பி உலகக் கோப்பையை நடத்த நாடு தயாராகிறது. வீரர்களோ தன்னம்பிக்கை இழந்து நிற்கிறார்கள். கேப்டன் பிராங்கோயிஸ் பியானருக்கு ஒரு அழைப்பு வருகிறது. குழப்பத்துடன் அதிபர் மாளிகைக்குள் நுழைகிறார். அவரை வரவேற்ற மண்டேலா நலம் விசாரிக்கிறார். வியந்து நிற்கும் பியானருக்கு தேனீர் வருகிறது. இருவரும் மெல்ல பேசுகிறார்கள். மண்டேலாவின் சிறை வாழ்க்கை நோக்கி திரும்புகிறது காட்சிகள்! வெளியில் வந்ததும் தனக்காக காத்திருக்கும் தன் தோழியிடம் சொல்கிறார் உலக கோப்பையை வென்று மண்டேலாவுக்கு பரிசு அளிக்க வேண்டும் என்றதும் அரங்கமே அதிர்கிறது.

அறை எண் 446!
ரசிகர்களின் உற்சாகம், உயிரைக் கொடுத்து விளையாடும் வீரர்கள். உலகக் கோப்பையின் முதல் ஆட்டம். ஆஸ்திரேலியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா வீரர்கள் பிரெஞ் அணியையும் புரட்டிி எடுக்கிறார்கள். அந்த வெற்றிக் கொண்டாடத்திலிருந்த கேப்டனுக்கு ஒரு செய்தி வருகிறது. அடுத்த நாள் காலை 6 மணிக்கு அனைவரும் தயாராக இருக்கிறார்கள். ராபின் தீவுகளுக்கு  அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அந்த தனிமைச் சிறையில் மண்டேலாவின் நிழல் உறைந்து கிடக்கிறது. வீரர்கள் மவுனத்தில் ஆழ்கிறார்கள். 27 ஆண்டு காலம் அடைக்கப்பட்டிருந்த அறை எண் 446 அருகே நின்றதும் மண்டேலா சொன்ன விக்டோரியா காலத்து பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. 

அலைகள் ஓயவில்லை....
உலகின் ‘நம்பர் ஒன்’நியூசிலாந்து வீரர்கள் படு ஆக்ரோஷமாக நடனம் ஆடுகிறார்கள். எல்லீஸ் ஸ்பார்க் ஸ்டேடியம் நிரம்பி வழிகிறது. 60 ஆயிரம் ரசிகர்கள் உற்சாக குரல் தென்னாப்பிரிக் காவின் நகரெங்கும் மிதந்து செல்கிறது. சிறிய ரக விமானம் ஒன்று மைதானத்தை நோக்கி வருகிறது. வீரர்கள் பதற்றத்துடன் பார்க்கிறார்கள். அதிபர் மண்டேலா கை அசைக்கிறார். உணர்ச்சி வெள்ளத்தில் உயிரைக் கொடுத்து விளையாடுகிறார்கள். போட்டி கடுமையாக இருக்கிறது. இரு அணிகளும் சம புள்ளிகள். கூடுதல் நேரத்தில் ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. நியூசிலாந்து தோற்கிறது. பார்வையாளர் மாடத்திலிருந்த மண்டேலா துள்ளி குதிக்கிறார். இன வேறுபாடுகளை மறந்து நாடே உற்சத்தில் மிதக்கிறது. வரலாறு திரும்புகிறது.  6 ஆம் எண் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜெர்சியை அணிந்தபடியே உலகக் கோப்பையை பரிசளிக்கிறார் மண்டேலா. 12 வருடங்கள் கழித்து 2007 ஆம் ஆண்டில் மீண்டும் கோப்பையை வெல்கிறது தென்னாப்பிரிக்கா. கறுப்பு வீரரின் எண்ணிக்கை இரண்டாக உயர்கிறது. மூன்றாவது முறையாக கோப்பையை கையில் ஏந்திய தென்னாப்பிரிக்கா அணியில் 17 வீரர்கள் கறுப்பினத்தவர். அதுமட்டுமா? முதன் முதலாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட அந்த அணியின் கேப்டன் சியோ கோல்சி இளமையில் அடுத்த வேலை உணவுக்கே வழியின்றி வறுமையில் வாடியதால், “எங்கள் வானவில் தேசத்தின் 6 கோடி மக்களுக்கும் இந்த கோப்பையை காணிக்கையாக்குகிறேன்” என்று தந்தையின் முன்பு தனது இந்த வாசகத்தை கவனமுடன் பதிவு செய்தார்.

;