tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு ஆதரவு

சேலம், ஏப்.13- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு தலைவர் சாந்தி பிரேம்குமார் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத சக்திகள் வெற்றி பெற்றால் அது நாட்டின் ஜனநாயக அமைப்பிற்கு முடிவுகட்டக் கூடும். இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைகள் சிதைக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், மதவாத சக்திகளின் கூட்டணியை வீழ்த்துவதே நோக்கம். அதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது எனவும் தனிமனித சுதந்திரத்தை மதித்து நம் முடிவை யார் மீதும் திணிக்காமல் இடம் பொருள் ஏவல் அறிந்து ஒவ்வொருவரும் சமூக உணர்வுடன் தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தார்.மேலும், தமிழகத்தில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான கிறிஸ்துவ மக்கள் உள்ளனர்.


கடந்த ஐந்துஆண்டுகளாக மோடி தலைமையிலான மத்திய அரசு கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல இன்னல்களை செய்துள்ளது. இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒற்றை கலாச்சாரத்தைமுன்னிறுத்தி சமய அடிப்படையிலான அரசியலை முன்னெடுக்க மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது. மதக்கலவரங்கள் மூலம்சிறுபான்மையினரின் அடையாளங்கள் மற்றும் நம்பிக்கைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்களை பிளவுபடுத்த பசு பாதுகாப்பு என்ற பெயரில் பலர் தாக்கப்பட்டுள்ளனர். சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாம் கொண்ட நம்பிக்கை மற்றும் கருத்துரிமைக்காக பலர் கொல்லப்படுகின்றனர். தலித் பெண்கள்மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இவற்றின் காரணமாக இந்திய சமூகத்தின் மத நல்லிணக்கம் சிதைக்கப்படுகிறது இட ஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் தாண்டக் கூடாது என்று காரணம் கற்பித்து கிறிஸ்தவர்களுக்கு சமூகநீதியை அரசு மறுத்து வருகிறது. ஆனால் உயர் சாதியில் பொருளாதார அடிப்படையிலான 10 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் இயற்றி உள்ளது. இது சமூகநீதியை மறுப்பதோடு கிறிஸ்தவர்களின் இட ஒதுக்கீட்டை தடுக்கிறது. இந்திய கல்வி திட்டத்தை மாற்றி அமைத்து ஒற்றை கலாச்சாரத்தின் அடிப்படையில் கல்வியை கட்டமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கிறிஸ்துவ மக்களின் வாழ்வாதாரம் மேம்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது என அமைப்பின் சார்பில் முடிவு எடுத்துள்ளதாக கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர்.

;