headlines

img

ஆதரவு ‘அழிக்கும்’ விலை....

நரேந்திர மோடி அரசு 2021 - 22 ஆம் ஆண்டுக்கான குறுவை பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துள்ளது. இது,கடந்தாண்டு இருந்த விலையில், எந்தவிதமான பரிசீலனையும் செய்யாமல், இடுபொருள் செலவுகள் அதிகரித்ததைக் கூட கணக்கில் கொள்ளாமல் பெயரளவிற்கு ஒரு சிறு தொகையை மனம்போன போக்கில் அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயிகளுக்கு மோடி அரசு இழைத்துள்ள மிகப் பெரிய வஞ்சகம் ஆகும்.

குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக் கட்டுவதுதான் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் திட்டமாகும். இதையும் உள்ளடக்கிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தித் தான் தில்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் ஆறு மாத காலமாக போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை கைவிடச் செய்வதற்காக மோடி அரசு, குறைந்தபட்ச ஆதார விலை என்றஏற்பாட்டை மேலும் வலுப்படுத்துவோம் என்றெல்லாம் கூறியது. ஆனால் அது விவசாயிகளை ஏமாற்றுவதற்காக கூறப்பட்ட பொய் என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளது, தற்போதைய குறைந்தபட்ச ஆதார விலைகள் அறிவிப்பு.

விவசாய விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலையை, அந்த விளை பொருளுக்கான இடுபொருட்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த உற்பத்திச் செலவுடன் குறைந்தபட்சம் 50 சதவீதம் லாபம்என்பதை சேர்த்து, மொத்த உற்பத்திச் செலவைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு விலை கிடைக்குமாறுகணக்கீடு செய்து அறிவிக்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை அமலாக்குமாறு அகில இந்திய விவசாயிகள் சங்கம் உட்பட நாட்டின் அனைத்து விவசாயிகள் அமைப்புகளும், இடதுசாரிக்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால்இதை அமலாக்க மோடி அரசு பிடிவாதமாக மறுத்துவருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.650 விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். கேழ்வரகு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1129, மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.611, துவரம்பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1636, நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1548, சூரியகாந்தி விதைகுவிண்டால் ஒன்றுக்கு ரூ.1525, பருத்தி குவிண்டால்ஒன்றுக்கு ரூ.2027 என மிகப் பெரிய அளவிற்கு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதை அகில இந்திய விவசாயிகள் சங்கம் பட்டியலிட்டுள்ளது.பல்வேறு மாநிலங்களில் விவசாய விளை பொருட்களுக்கு மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட ஒன்றிய அரசு தற்போது அறிவித்துள்ள விலைகள் மிகமிக குறைவாக உள்ளன. உதாரணத்திற்கு நெற்பயிரை பொறுத்தவரை, உற்பத்திச் செலவைப் போல ஒன்றரை மடங்கு விலை என்ற கோட்பாட்டின்படி நிர்ணயம் செய்தால் தற்போது குவிண்டால்ஒன்றுக்கு ரூ.2590 நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு ரூ.1940 என நிர்ணயித்துள்ளது.  ஆந்திரப் பிரதேசத்தில் மாநில அரசு மதிப்பிட்டுள்ள ரூ.2114, பஞ்சாப் அரசு மதிப்பிட்டுள்ளரூ.1995,கேரள அரசு மதிப்பிட்டுள்ள ரூ.2044 - போன்றவிலைகளுடன் ஒப்பிடும் போது ஒன்றிய அரசின்விலை நிர்ணயம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வேளாண்மையிலிருந்து விவசாயிகளை வெளியேற்றத் திட்டமிட்டுள்ள அரசிடமிருந்து வேறுஎன்ன எதிர்பார்க்க முடியும்?