tamilnadu

img

செப்.25 விவசாயிகள் போராட்டத்திற்கு மாதர் சங்கம் ஆதரவு...

புதுதில்லி:
மத்திய பாஜக அரசாங்கம்,விவசாயிகள் எதிர்ப்புச்சட்டங்களை நிறைவேற்றியிருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக செப்டம்பர்25 அன்று விவசாயிகள் மேற்கொள்ளும் எதிர்ப்பியக்கத்திற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடாளுமன்றத்தில் அனைத்துஜனநாயக ஒழுங்குவிதிமுறைகளையும் ஒழித்துக்கட்டிவிட்டு, விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டமுன்வடிவுகளையும், மின்சார சட்டத்தில் திருத்தங்களையும் நிறைவேற்றியிருக்கும் மோடிஅரசாங்கத்தின் எதேச்சதிகார நிலைப்பாட்டிற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும்கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. முறையாக விவாதங்கள் நடத்துவது தொடர்பான அனைத்து நாடாளுமன்ற நடைமுறைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன.
செப்டம்பர் 25 அன்று நாடுதழுவிய அளவில் எதிர்ப்பியக்கங்களை நடத்திட அகில இந்தியவிவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அறைகூவலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முழுமையாக ஆதரிக்கிறது. அன்றையதினம் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் பந்த் மேற்கொள்ள அறைகூவல் விடுத்திருப்பதற்கும் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது.

உணவு தானியங்கள், பருப்புவகைகள், சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருள்கள் அனைத்தும் இன்றியமையாப் பண்டங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறுஇவற்றை நீக்கி, இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்திருப்பது, பெரும்பான்மை ஏழை மக்களின், முக்கியமாக பெண்களின்,  உணவுப் பாதுகாப்பைக் கடுமையாகப்பாதிக்கும். இனிவருங்காலங்களில் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை போன்றவை கிரிமினல்குற்றங்களாகக் கருதப்படமாட்டாது. கிராமப்புறங்களில் மக்கள் மத்தியில் பட்டினிச்சாவுகள் தொடங்கிவிட்டதாக ஏற்கனவேசெய்திகள் வெளிவரத்தொடங்கிவிட்டன. இந்நிலையில் இவ்வாறுசட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது, நாட்டில் பசி-பட்டினித் தொற்றை வேகமாகப் பரப்புவதற்கு இட்டுச் செல்லும்.ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கம், நாட்டில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன்காரணமாக கொண்டுவரப்பட்ட சமூகமுடக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகளுக்கு துன்ப துயரங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது அம்பானி, அதானி, பிர்லா, ஐடிசிபோன்று தங்களுக்குத் தேர்தல்நிதி அளித்துவரும் முதலாளித்துவ நண்பர்களுக்கு உதவுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

விவசாயிகளின் போராட்டங்களுடன் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும்அவர்களுக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவித்திட வேண்டும் என்றும்மாதர் சங்க கிளைகள் அனைத்திற்கும், நம்மைப்போன்று இயங்கும்மாதர் அமைப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் அறைகூவல் விடுக்கிறது.           (ந.நி.)