tamilnadu

img

சுகாதார சீர்கேட்டு மையமாக மாறி வரும் சேலம் குமரகிரி ஏரி ஸ்மாட் சிட்டி நிதி இருந்தும் சீரமைக்காத சேலம் மாநகராட்சி

சேலம் மாநகரத்தின் மையப் பகுதியில் அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது குமரகிரி ஏரி. சுமார் 39ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தஏரி சேலம் பகுதியின் முக்கிய நீர்நிலையாக விளங்கி வருகிறது.பல ஆண்டுகளாக சாயக்கழிவுகள் கலந்தும், தூர்வாரப்படாமலும் இருந்த இந்த ஏரியை தூய்மைப்படுத்தி பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக சேலத்தில் உள்ள தனியார் இயற்கை ஆர்வலர்களிடம் கடந்த 2013-ம் ஆண்டு சேலம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்தது.இதையடுத்து தனியார் இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்து இந்த ஏரியை தன்னார்வலர்கள் தூய்மைப்படுத்தினர். பின்பு ஏரியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டும், ஏரியின்உள்ளே மணல் திட்டு அமைத்தும்,பராமரிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் நடைபயிற்சி மற்றும் குழந்தைகள் விளையாடுகின்ற வகையில் பூங்கா மற்றும்நடைபயிற்சி தளங்கள் அமைக்கும்பணிகள் மேற்கொண்டு பராமரிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், தனியார் இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து மீண்டும் பராமரிப்பு பணியை சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள முடிவு செய்தது. மேலும், சேலம் ஸ்மாட் சிட்டி நிதி மூலம் ரூ.50 கோடி குமரகிரி ஏரி பராமரிப்புக்கு செலவிட உள்ளதாகவும் மாநகராட்சி அறிவித்தது. ஆனால், அதன் பிறகுமுறையான பராமரிப்பு இல்லாததாலும், சேலம் மாநகரத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்துவருகின்ற சாயகழிவு நீர் இந்த ஏரியில் கலந்து மெல்ல மெல்ல குமரகிரி ஏரி பழைய நிலைக்கு திரும்பியது. இதனால் தற்போது அந்த ஏரி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. தூரத்திலிருந்து காண்கின்ற பொழுது இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காணப்படும் இந்த ஏரி அருகில் சென்றதும் முகம் சுளிக்கும் வகையில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், ஆகாய தாமரை ஏரியை சூழ்ந்துள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள சாயப் பட்டறைகளில் இருந்து வெளிவரும் ரசாயன கழிவு நீரை இந்த ஏரியில் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஏரியை தூய்மைப்படுத்தி சாய மற்றும் சாக்கடை நீர் கலக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.- எழில்.

;