ஏற்காடு, நவ.3- ஏற்காடு தாலுகாவிலுள்ள மலை கிராமச் சாலைகள் தொடர் மழையால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா, மார மங்கலம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங் கள் மேல் கேவிலூர் மற்றும் தாழ் கேவிலூர் ஆகும். ஏற்காடு பேருந்து நிலை யத்தில் இருந்து 20கி.மீ., தொலைவில் உள்ள கூத்துமுத்தல் கிராமம் பகுதியில் இருந்த 6 1/2 கி.மீ.,மண் சாலை வழியாக இக்கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இந்த இரு கிராமங்களிலும் 400க்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிரா மத்தில் நியாயவிலைக்கடை இல்லாததால், கூத்துமுத்தல் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில் பொருட்கள் வாங்கி தங்கள் கிராமங்களுக்கு திரும்பும் நிலை உள்ளது. இந்நிலையில் மண் சாலை அவ்வப்போது குண்டும், குழியுமாக மாறி விடும். எனவே மண்சாலையை தார்ச் சாலையாக மாற்றி அமைக்கக்கோரி இரு கிராம மக்களும் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்க ளாகவே ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் கேவிலூர் செல்லும் மண் சாலையில் பல்வேறு இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 அடி ஆழம் வரையிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் பாறை சரிந்து கிடக்கிறது. இதனால் கடந்த 5 நாட்களுக்கு மேலாகவே, கேவிலூர் கிராமம் ஏற்காட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட கிராமமாகியுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேவிலூரில் இருந்து பாப்பி ரெட்டிப்பட்டி செல்லும் பாதையும் பாதிக் கப்பட்டுள்ளதால், கேவிலூர் கிராம மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி, கேவிலூர் கிராமத்தில் உள்ள பிரதான குடிநீர் கிணற்றில் மழை நீர் முழுவதும் நிரம்பியுள்ளது. மேலும் மழை நீர் கிணற்றை சுற்றிலும் தேங்கி நிற்கிறது. இதனால் கிணற்று தண்ணீரை மக்கள் பயன் படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் அந்த கிணற்றின் சுற்று சுவர் இடிந்து கிணற்றிற்குள் விழும் நிலை உள்ளது. இது குறித்து கேவிலூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் கூறியதாவது, “எங்கள் கிராம மண் சாலையில் ஏற்கெனவே இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலையில் உள்ளன. ஆனால் தற்போது நடந்து மட்டுமே செல்ல முடிகிறது. தற்போது ஏற் பட்டுள்ள சாலை அரிப்பால் நியாயவிலை கடை சென்று பொருட்களை வாங்கி வர முடியவில்லை. பள்ளி குழந்தைகளும் அதி காலை 7 மணிக்கு புறப்பட்டு பள்ளிக்கு சென்று மாலை 7 மணிக்கும் திரும்பும் நிலை உள்ளது.” எனவே அதிகாரிகள் விரைந்து கேவிலூர் கிராம சாலைகளை தார்ச் சாலைகளாக மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.