tamilnadu

img

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி

சேலம், ஏப்.7-

சேலம் புறநகர் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில்திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகின்றார். ஞாயிறன்று வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் இப்பகுதியில் உள்ள முக்கிய தொழிலான வெள்ளி கொலுசு உற்பத்தி வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது. ஜிஎஸ்டி வரியை குறைப்பதுடன், தொழிலாளர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்கவும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் விவசாயகடன், கல்விக் கடன் ஆகியவை ரத்து செய்யப்படுவதுடன் ஏழை மற்றும் தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சன்னியாசி, குண்டு மற்றும் எருமாபாளையம் பகுதிகளில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து எருமாபாளையம், ஆண்டிப்பட்டி, பனங்காடு, திருமலைகிரி, வட்ட முத்தம்பட்டி அரியாகொண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இப்பிரச்சாராத்தில் திமுக புறநகர் மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர மேற்கு சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் ஜெயவேலு, நூர்லக், சிபிஐ மண்டல செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

;