tamilnadu

img

ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி

சேலம், ஏப்.10-கைத்தறி நெசவுத் தொழிலைபாதுகாக்க ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். இவர் புதனன்று எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பாடி நகரம், ஆவடி, பேரூர், வெள்ளரி வெள்ளி, பக்க நாடு, இருப்பாளி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், எடப்பாடி பகுதியில் கைத்தறிநெசவு தொழில் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அதனைபாதுகாக்க ஜிஎஸ்டி வரி விதிப்பில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி கைத்தறி, விசைத்தறிதொழிலை பாதுகாக்க இப்பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பால் தறி தொழில் முழுமையாக முடங்கியுள்ளது. தொழில் முன்னேற்றம் பெற எடுக்க வேண்டியஅனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


நெசவுத் தொழிலில் ஈடுபடும் அனைவருக்கும்இலவச மின்சாரம் மற்றும் மானியகடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்குவேலை வாய்ப்பை உருவாக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் தொகுதியான எடப்பாடி தொகுதியில் கூட படித்த இளைஞர்களுக்கு வேலைகிடைக்க எந்தநடவடிக்கையும் எடுக்காத ஒரு முதல்வர் என அவர் குற்றம் சாட்டினார். இப்பகுதியில் சிறு தொழிற்சாலைகள் கூட கொண்டு வரவில்லை. மக்கள் மேம்பாட்டை உயர்த்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த எந்த வசதிகளும்செய்யவில்லை. ஒரு முதல்வர்நினைத்தால் ஒரு தொகுதியில்எந்த திட்டங்களை வேண்டுமானாலும் கொண்டு வரலாம். ஆனால் தமிழக முதல்வர் தனதுசொந்த தொகுதியான எடப்பாடியில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.இப்பிரச்சாரத்தில், திமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடப்பாடி தாலூகா செயலாளர் பெரியண்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.