tamilnadu

img

ஊரடங்கிலும் தொடரும் சாதிய வன்கொடுமைகள்....

சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கிலும் தொடரும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் மெத்தனப் போக்கிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர்  எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா பரவல் தடுப்புக்காக மக்கள் அதிகம் கூடாத வகையில் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு கூறிக்கொள்ளும் அதே வேளையில் தமிழ் நாட்டில் 30-க்கும் அதிகமான சாதிய வன்கொடுமைகள்  நிகழ்ந்துள்ளன. இந்த வன்கொடுமைகள், தமிழகத்தில் ஊரடங்கிலும் அடங்காத சாதிய வன்மத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரிய ஒன்றாகும். எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த, அதன் செயல்பாட்டை கவனிக்க மாநில முதல்வரே பொறுப்பு. இவ்வளவு சாதிய ஒடுக்குமுறைகள் நடந்துள்ள போதும், முதல்வர் இதைத் தடுக்கும் விதமாக, குறைந்தபட்சம் அதிகாரிகளிடம்  புகார் பற்றியோ, துரித நடவடிக்கைகள் பற்றியோ என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.பாலியல் வன்முறைகள், ஆணவக் கொலைகள், கும்பலாக வந்து தாக்குவது, கட்டிவைத்து அடிப்பது, சாதிய ரீதியில் இழிவுபடுத்தும் நோக்கத்தோடு செயல்படுதல் என வன்கொடுமைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 

விழுப்புரத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிருபர் தாக்கப்படுகிறார். தொக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின   இளைஞர் தன் சகோதரியின் தோழியிடம்  பேசியதற்காக காவலர் ஈஸ்வரன் சாதிய ரீதியில் இழிவாக பேசி கடுமையாக அடித்து சித்ரவதை செய்ததை பார்த்தோம். பட்டியலின மக்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பாசர் தண்டா கிராமத்தில் சாதி ஆதிக்கக் கும்பல், பட்டியலின மக்கள் மீது கொலைவெறித் தாகுதல் நடத்தியுள்ளது. ஆரணியில் வேற்று சாதி பெண்ணை காதலித்ததற்காக அப்பெண்ணின் தந்தை மூர்த்தி மற்றும் உறவினர் ஜெயகுமார் ஆகியோர் சுதாகர் என்ற இளைஞரை கொலை செய்துள்ளனர். சிதம்பரத்தில் நடராஜ் (55) என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். 

செல்வம் என்பவர் மாற்று சாதி பெண்ணான கவிதாவை திருமணம் செய்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. பிரச்சனையை தவிர்க்க சொந்த ஊரில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. சொந்த ஊரான கோட்டைபட்டி கிராமத்திற்கு வந்துள்ளனர். இதை அறிந்து கவிதாவின் உறவினர் பட்டியலின மக்கள் வாழும் இடத்திற்கு சென்று தாக்கியதில் 15 பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திண்டுக்கல், அய்யாபட்டி கிராமத்தில் வாழும் பட்டியலின இளைஞர்கள் தேவராஜ், ஹரிஹரன் ஆகியோரை சாதிய ரீதியில் இழிவுபடுத்தியது மட்டும் அல்லாமல் தாக்கப்பட்டும் உள்ளனர். திருநெல்வேலி, வெப்பன்பாடு கிராமத்தில் பட்டியலின இளைஞர்களை மின்கம்பத்தில் கட்டிவைத்து  தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, உடையகுளம் கிராமத்தில் பட்டியலின சாதியை சேர்ந்த பலவேசம் என்பவர் சாதி இந்துவான முத்துராஜிடம் வீட்டுப் பத்திரம் வைத்து கடன் பெற்றுள்ளார். கடன் மாற்று பத்திரம் திரும்பப்பெறச் சென்றபோது தகராறில் பலவேசம் மற்றும் அவரின் மருமகன் தங்கராஜ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சேலம், புதுக்கடை காலனியை சேர்ந்த விஷ்ணுப்பிரியன் சாதி இந்து செந்தில் குமாரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். 
இதுவரை மூன்று பஞ்சாயத்துத் தலைவர்களை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இது சாதிரீதியான இழிவுபடுத்துதல் என புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.இப்படியாகத் தமிழகத்தில் வன்கொடுமை தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது. எஸ்.சி/எஸ்.டி  சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் தருவதாக இருந்தால் கட்டாயம் பாதிக்கப்பட்டவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், கொரோனா சூழ்நிலையை காரணம் காட்டி பாதிக்கப்பட்டவருக்கு தகவல் தரவேண்டியதில்லை என்று நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது. 

இப்படிப்பட்டச் சூழ்நிலையில் தமிழக அரசாங்கம் குறிப்பாக பட்டியலின மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ஆனால் அதன் பொறுப்பில் இருந்து தவறியுள்ளது.  சமத்துவம், சமஉரிமை, வன்முறையற்ற வாழ்க்கைச் சூழல் அனைவரின் அடிப்படை உரிமை. அதை தொடர்ந்து சமூகத்தில் நடைமுறைப்படுத்த எந்த ஒரு அசாதாரண சூழ்நிலை வந்தாலும் தட்டிக்கழிக்கக் கூடாது. இது அரசின் முதன்மை கடமையாகும். இது கொரோனா பாதிப்பு காலத்திற்கும் பொருந்தும்.எனவே உடனடியாக சாதிய வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், சட்டங்களை சரியாக அமல்படுத்த, சிறப்பு கண்காணிப்புக் குழு அமைத்து தடுக்கும் வழிகளை தமிழக அரசு செய்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;