சென்னை:
காவல்துறையினரால் தாக்கப்பட்டு தென்காசி வீரகேரளம்புதூரைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளி பலியானார். தொடரும் காவல்துறையினரின் அராஜகத்திற்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)கண்டனம்தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் வி.குமார், பொதுச்செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதுரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் குமரேசன் (வயது25) என்பவர் ஆட்டோ தொழிலாளியாவார். இவருக்குதிருமணமாகவில்லை. இவரை கடந்த மாதம் 10 ஆம் தேதி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து நெஞ்சு, முதுகு, உயிர்த்தடம்,வயிறு, கால், கை என கடுமையாக லத்தியாலும், பூட்ஸ் காலாலும் அடித்து உதைத்து குற்றுயிரும் குலைஉயிருமாக வெளியே அனுப்பியுள்ளனர். காவல்நிலையத்தை விட்டு வெளியில் வந்த குமரேசன் இரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்து ஆரம்ப சிகிச்சை பெற்று, நெல்லை அரசு மருத்து
வமனையில் உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அரசு மருத்துவரிடம் தனது இந்த நிலைக்கு காவல்துறையினரின் தாக்குதல்தான் காரணம் என்பதையும் பதிவு செய்துள்ளார்.
தனது மகனின் நிலை கண்டு வேதனையடைந்த நவநீதகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரும் கொடுத்துள்ளார். ஆட்டோ தொழிலாளி குமரேசன் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த நிலையில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆட்டோ தொழிலாளி குமரேசன் ஜூன் 27 அன்று மாலை இறந்துள்ளார்.தூத்துக்குடி சாத்தான்குளத்தில் வியாபாரிகள் இருவரை காவல்துறை அடித்துக்கொன்ற அதிர்ச்சி அடங்குமுன் தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூரில் ஆட்டோ தொழிலாளியை காவல்துறை அடித்துக்கொன்ற சம்பவம்பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு அறிவிக்கபட்ட சூழ்நிலையில் சென்னை ஆர்.கே. நகர் காவல்துறை, கே. பாபு என்ற ஆட்டோ தொழிலாளியை வீட்டில் வந்து மடக்கிபிடித்து, அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று அடித்து உதைத்து கையை ஒடித்த சம்பவமும், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஆட்டோ தொழிலாளியை மிரட்டி தற்கொலை செய்ய வைத்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையின் செயல்பாடும் மிகுந்த கண்டனத்திற்கு உள்ளாகிய போதும் காவல்துறை தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்பதைத் தான் பார்க்க முடிகிறது.கொரோனா காலத்தில் காவல்துறையின் அராஜகம் எல்லை மீறியுள்ளது. கடந்த 23 ஆம் தேதி ஆட்டோ தொழிலாளர்கள் நடத்திய அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் வேலையில் தமிழகம் முழுவதும் காவல்துறை ஈடுபட்டுள்ளது. பல இடங்களில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இக்காலத்தில் பலநூறு ஆட்டோக் களை பிடித்து வழக்கு போட்டு காவல்நிலையத்தில் நிறுத்தியுள்ளனர். வேலை கிடைக்காமல், கிடைக்கும் வேலையை பார்த்து குறைந்த வருமானத்தோடு வருபவர்களின் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், இதர வாகன ஓட்டுநர்களின் வாகனங்களை மடக்கிப்பிடித்து, பல கோடிரூபாய்களை வழிப்பறி போல் அபராதம் விதித்து வசூல் செய்துள்ளனர். இத்தனை வழக்கு பதிந்தோம், இத்தனைவாகனங்களை பறிமுதல் செய்தோம், இத்தனை கோடி ரூபாய் அபராதம் வசூலித்தோம் என காவல்துறை கூறுவது சாதனையல்ல. வழிப்பறி என்பதை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டுகிறது.எந்தவிதமான கட்டுப்பாடுகளும், சட்ட நெறிமுறைகளும் கடைப்பிடிக்காத காவல்துறையின் அராஜகமான செயல்பாடுதான் மேலே சொன்ன விபரங்கள் அனைத்தும் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். இதனை தடுத்து நிறுத்திட தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே காவல்துறையின் எல்லை மீறிய அராஜகம் அரங்கேற உதவியாக அமைந்துள்ளது.
இதன் தொடர் விளைவுகளில் ஒன்றுதான் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஆட்டோ தொழிலாளி குமரேசன் மீதான கொலைவெறி தாக்குதல் ஆகும். ஆட்டோ தொழிலாளி குமரேசன் மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் , சார்பு ஆய்வாளர், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதோடு குமரேசன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் . மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடக்காமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.