districts

பத்திரப் பதிவு அலுவலகத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி வழக்குப் பதிவு செய்யாமல் போலீசார் தாமதம்

திருப்பூர், ஜன. 6 - திருப்பூர் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்ற பிரச்சனையில் இணை  சார் பதிவாளர்கள் உள்பட ஏழு பேர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டனர். எனினும் இந்த விவகாரத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் தாமதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பகுதியில் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகம் செயல்பட்டு  வருகிறது. இங்கு மாவட்ட பதிவுத்துறை யில் ஆறு சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பத்தி ரப்பதிவு செய்வதற்கு ஆன்லைன் முறை யில் பயனாளிகள் பணம் செலுத்துவ தில் ரசீது முறைகேடு செய்தது கண்டுபிடிக் கப்பட்டது. ஆறு அலுவலகங்களிலும் ரூ.68 லட்சத்து 70 ஆயிரத்து 657 முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக இணை சார்பதிவாளர்கள், உதவியாளர்கள் உள்பட ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் புகார் அளிக்கப்பட்டு ஒரு மாதமான பின்னும், மோசடி உறுதியாகி ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் இன்னும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் தாமதித்து வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டோர் ஆதாரங்களை அழிக்கவும், தப்பவும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த முறைகேடு குறித்து 30 பேரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், முழுமையான விசாரணை முடிந்த பின் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.