திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கின் விசாரணை பாஜக தலைமை வரை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் சில சுங்கத்துறையினரை இடமாற்றம் செய்வதற்கான நகர்வுகள் துவங்கியுள்ளன. விசாரணையை வழிநடத்தும் தடுப்பு பிரிவு ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் விசாரணைக்கு தலைமை தாங்கிய இணை ஆணையர் அனீஷ்பி.ராஜன் நாக்பூருக்கு மாற்றப்பட்டார். அதோடு மேலும் எட்டு பேரும் மாற்றப்பட்டனர். தடுப்பு ஆணையர் சுமித் குமார் மற்றும் கண்காணிப்பாளர் வி.விவேக் இப்போது இடமாற்றம் அச்சுறுத்தலில் உள்ளனர். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே பாஜக தலைமைக்கு உறுத்தலாக உள்ளனர். சுமித் குமாரின் தைரியமான முடிவுகளே தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்டதற்கு எதிரான வழக்கு இதுவரை எட்ட வழிவகுத்தது.
ஆர்எஸ்எஸ் தொலைக்காட்சியான ஜனம்டிவி தலைவர் அனில் நம்பியாரை விசாரித்த நிலையில், அவர் கைது செய்யப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளதால் இந்த நகர்வு துவக்கப்பட்டுள்ளது. அனீஷ் பி.ராஜனைத் தொடர்ந்து முக்கியமான அதிகாரிகளுக்கு இடமாற்றம் குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டதால் விசாரணைக் குழுவினர் மிகவும் அவநம்பிக்கை அடைந்து வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட குற்றம்சாட்டப் பட்டவர்கள் சுங்க சட்டத்தின் பிரிவு 108-ன் கீழ் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரையும் விசாரித்து பலரை கைது செய்துள்ளனர். சதித்திட்டத்தில்அனில் நம்பியாரின் பங்கு சொப்னாவின் வாக்குமூலத்தில் தெளிவாக இருந்தது. ஆயினும் கூட விசாரணைக்கு அழைக்கக் கூடாது என்று கடுமையான அழுத்தம் இருந்தது. இருப்பினும், அதற்கு சுமித் குமார் அடிபணியாததால் தாமதமாகவேனும் அனில் நம்பியார் விசாரிக்கப்பட்டார்.