எந்த தொழிலும் அர்ப்பணிப்புடன் செய்தால் வெற்றி பெறலாம் :கோ.வி.செல்வம்
வேலூர், அக்.17- வேலூர் விஐடி துணைத்தலைவர் கோ.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு தலைமுறை பேரவை மற்றும் நாராயணி மருத்துவமனை சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நாராயணி மருத்துவ குழும தலைவர் டாக்டர் பாலாஜி தலைமை வகித்தார். வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ப.சிவ காமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். நிறைவாக விஐடி துணைத்தலைவர் கோ.வி.செல்வம் பேசுகையில், பிறப்பு முதல் இறப்பு வரை உழைக்கும் சமுதாயம் மருத்துவ சமுதாயம் என்றும், நாம் பிறப்பது மற்றவர்களுக்கு உதவுவதற்காக தான் என்றும் கூறினார். பணம் இருந்தால் போதாது, மனம் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்ய நல்ல மனம் வேண்டும். நீங்கள் செய்யும் தர்மம் தான் உங்கள் தலையை காக்கும் என்று அவர் வலியுறுத்தினார். எந்த தொழிலையும் ஈடுபாட்டுடன், அர்ப்பணிப்புடன் செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றும், கையில் சொந்த தொழில் இருந்தால் முன்னேற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். முகாமில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பி னர்களுக்கும் இலவசமாக மருத்துவ காப்பீடு திட்டம் செய்து தரப்படும் என்று அவர் அறிவித்தார். பின்னர் தலைமுறை பேரவை சார்பில் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைமுறை பேரவை உறுப்பினர்கள் மாறன் அசோசியேட்ஸ் பி.டி.கே.மாறன், பெப்சி சீனிவாசன், விஐடி ஆல்மார்ட் சதீஷ்குமார், வேலூர் மாநகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்க பூமிநாதன், சீனிவாசன், கே.எஸ்.சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
