நண்பர் வீட்டில் மது அருந்திய பெண் பலி
சென்னை, செப். 19- சென்னை மதுரவாயலில் நண்பர் வீட்டில் மது அருந்திய பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரவாயல் ஆலப்பாக்கம் காமாட்சியம்மன் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சி.கணேஷ் ராம் (26). இவர் தமிழ் திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். கணேஷ் ராமும், ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணும் இன்ஸ்ட்டாகிராம் மூலம் பழகி வந்தனர். இந்த பெண், நந்தனத்தில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இதற்கிடையே நெருக்கமாக பழகி வந்த இருவரும், நாளடைவில் காதலிக்கத் தொடங்கினர். இந்நிலையில் அந்த பெண், கணேஷ் ராமை வியாழக்கிழமை இரவு அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதில் மதுபோதையில் கழிவறையில் வழுக்கி விழுந்து அந்த பெண், அங்கேயே உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணேஷ் ராம், மதுரவாயல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் அந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
மகனை வெட்டி கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம், செப்.19 - திண்டிவனம் அருகே குடிபோதையில் மகனை வெட்டிக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், அன்னம் பாக்கம் கிராமம், அண்ணாநகரை சேர்ந்தவர் விநாயகம். தனது மகன் ஹரி பிரசாந்த்துடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு மே மாதம் குடிபோதையில் 28 வயதான மகன் ஹரி பிரசாந்துடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். குறித்து மற்றொரு மகனான ரஞ்சித் செல்வம் ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டிவனம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குமார் குற்றவாளி விநாயகத்திற்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இன்று மின்தடை
சென்னை, செப்.19- சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, சனிக்கிழமையன்று (செப்.20) கிண்டி , தாம்பரம், மெப்ஸ், ஆவடி,கிரீன் பீல்டு, சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர், வெங்கடேஸ்வரா நகர், ஒரகடம் சொசைட்டி, ஆழ்வார்திரு நகர், செம்பியம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.