tamilnadu

img

செங்கல் சூளைகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு இடங்களில் செங்கல் உற்பத்தி என்பது பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 100க்கு அதிகமான சிறிய அளவிலான செங்கல் சூளைகளும், ஒரே ஒரு சேம்பர் எனும் பெரிய செங்கல் தொழிற்சாலையும் பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டுவருகிறது. தற்போது சுய தொழிலாக செங்கல் சூளைகளை நடத்திவரும் சிறு உற்பத்தியாளர்கள் , பல நடைமுறை சிரமங்களுக்கு இடையே இத்தொழிலை நடத்தி வருகின்றனர். இது குறித்து பொள்ளாச்சி கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின்(சிஐடியு) நிர்வாகி கே.வெள்ளியங்கிரி என்பவர் கூறுகையில், செங்கல் சூளை தொழில் என்பது தவிர்க்க முடியாத ஒரு கட்டுமானத் தொழில் ஆகும். ஆனால், இத்தொழில் செய்வதற்கு சொந்த நிலங்கள் பெரும்பாலும் சிறு உற்பத்தியாளர்களிடம் இருப்பதில்லை. குத்தகைக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்வீதம் நில உரிமையாளர்களிடம் கொடுத்துத்தான் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது செம்மண் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. சூளையிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மண் எடுக்கப்பட்டால் ஒரு லோடு செம்மண் 3500ரூபாயாகவும், 10 கிலோ மீட்டர்தூரத்திலிருந்து கிடைக்கப்பெற்றால் ரூபாய் 4500 வரை விலைநிர்ணயிக்கப்படுகிறது.சூளையில் தயாரிக்கப்படும் செங்கல் ஒன்றின் விலை முன்னர்4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது. இன்று 50 காசுகள் அதிகரித்துள்ளது. அதேநேரம், ஆலைசெங்கல் ரூ.6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்தகையபெரிய செங்கல் ஆலைகளுக்குவங்கிகள் மூலமாக கடன் தொகைவழங்கப்படுகிறது. ஆனால் சிறுதொழிலாக நடத்தப்படும் செங்கல்சூளைகளுக்கு அரசு சார்பில் எந்ததொழில் கடன்களும் வழங்கப்படுவதில்லை.


இதனால் தொழிலை மேற்கொண்டு நடத்தவும் வழியற்று கிடக்கின்றனர். மேலும், வசதி படைத்த உற்பத்தியாளர்கள் சிலர் தண்ணீரை அதிக அளவில் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், சிறிய உற்பத்தியாளர்களுக்கு இது சாத்தியமில்லை. தண்ணீர் ஒரு லோடு (7000லிட்டர்) ரூபாய் 900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 600 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். தற்போது திடீரென டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால் தண்ணீர் விலையும் அதிகமாகிறது. சராசரியாக ஆயிரம் செங்கல் தயாரிப்பதற்கு ரூ.200 வரை தண்ணீருக்காக செலவாகிறது. இதில் தொழிலாளர்களுக்கு ஒரு கல்லுக்கு 80 பைசா வீதம் 1000 கல் தயாரிப்பதற்கு கூலியாக ரூ.800 வழங்கப்படுகிறது. இவ்வாறு தயாரித்த செங்கல்லை பதப்படுத்துவதற்கு முன்னரே ரூ.3 ஆயிரம் அளவுக்கு செலவாகிறது.ஆனால் பெரிய, பெரிய செங்கல் தொழிற்சாலைகளில் உற்பத்தியும், இலாபமும் அதிகமாக இருந்தபோதும், ரூ.40 பைசா மட்டுமே தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. காரணம், முன் தொகையாகலட்ச கணக்கில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதால் தொழிலாளர்களின் கூலி குறைத்துவழங்கப்படுகிறது. இச்சூழலில் தற்போது இயந்திரங்களின் வரவினால் பெரிய செங்கல் ஆலைகளிலும் தொழிலாளர்கள் வேலையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.ஆகவே, செங்கல் சூளைகளுக்கான உரிமம் வழங்குதல் எளிதாக்கப்பட வேண்டும். பெரும்பாலும் சிறுசெங்கல் சூளைகளுக்கு உரிமம்வழங்கப்படுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. முந்தைய காலத்தில் அந்தந்த ஒன்றிய அலுவலகத்திலுள்ள உதவியாளர்கள் நேரடியாக வந்து, ஆவணம் சரிபார்த்து வழங்குவர். ஆனால் தற்போது நிலத்தின் பட்டா, நோட்டரி வழக்கறிஞர் கையெழுத்து மற்றும் மறைமுக கமிசன்கள் என பல பிரச்சனைகளை அனுதினம் சிறு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, செங்கல் சூளைகளை காப்பாற்ற அரசு அதிகாரிகள்செங்கல் சூளைக்கு உரிமம் வழங்குவதை எளிமையாக்க வேண்டும். வங்கிக் கடன் சலுகைகள், மானியம் உள்ளிட்ட சலுகைகள்மற்ற தொழில்களுக்கு வழங்கப்படுவதை போன்று செங்கல் சூளைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் . பெரும்பாலும் கட்டுமானத் தொழில்களை நம்பியிருக்கக்கூடியவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வேகமாக சிறு தொழில்கள் அழியும் பட்டியலில் செங்கல்சூளையும் இடம் பெறலாம்என வேதனையுடன் தெரிவித்தார்


.- மணியாழன்

;