districts

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை திரும்பப் பயன்படுத்தினால் நடவடிக்கை ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி. ஏப். 8-  ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பப் பயன்படுத்தினால் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்சராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். முறுக்கு, சிப்ஸ், காரசேவு, சீவல், மிக்ஸர் போன்ற நொறுக்கு தீனி தயாரிப்பாளர்கள், வடை, சமோசா, மீன் வறுவல், சிக்கன்-65, கோபி-65 போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கும் சிறு வணிகர்கள், /பிரைடு சிக்கன் போன்றவற்றை தயாரிக்கும் கேஎப்.சி போன்ற பெருவணிகர்கள் மற்றும் அப்பளம் பொரித்து சாப்பாடு விற்பனையில் ஈடுபடும் ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்ட்ராண்ட்கள் ஆகியவற்றில் தினந்தோறும் அதிக அளவில் சமையல் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. அவ்வாறு பயன்படுத்திய எண்ணெயை ஒருமுறை மட்டும் பயன்படுத்தாமல் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தும்பட்சத்தில், சமையல் எண்ணெயில் டோட்டல் போலார் காம்பொனண்ட்ஸ் என்ற கேடுவிளைவிக்கும் கொழுப்புகள் மற்றும் பெராக்ஸைடுகள் அதிகம் உருவாகி பொதுமக்களின் பொது சுகாதார நலனிற்கு ஊறுவிளைவிக்கின்றது.

பயோடீசல் தயாரிப்புக்கு...
அதனால், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டும் பயன்படுத்தவும், அதனை மறுமுறை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதனால், உணவு வணிகர்களுக்கு ஏற்படும் சிறு பொருளாதார இழப்பினை ஈடுசெய்ய அவ்வாறு ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை பயோடீசல் தயாரிப்பிற்கு உரிய விலையைப் பெற்றுக் கொண்டு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை பயோடீசல் தயாரிப்பிற்கு அனுப்பி வைக்கும் திட்டம் இம்மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இன்னும் சில உணவு வியாபாரிகள், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதும், டீக்கடைகள், வடைக் கடைகள், சிக்கன் கடைகள், தெருவோரக் கடைகள் உள்ளிடவற்றிற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை விற்பனை செய்வதும், பண்டமாற்று முறையில் சமையல் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கே திரும்பவும் விற்பனை செய்வதாகவும் தெரியவருகின்றது. மேலும், FSSAI-னால் அங்கீகரிக்கப்படாத நபர்கள் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை வாங்கி தெருவோரக் கடைகளுக்கும், சமையல் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கும் விற்பனை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.  

வியாபாரிகளின் இம்முறைகேட்டினால், இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு பொதுமக்களின் பொது சுகாதார நலனிற்கு கேடு விளைவிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, சமையல் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்தும் மேற்கூறிய வணிகர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் அதனை மீறும் வணிகர்கள் மீது எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50 லிட்டருக்கு மேல் பயன்படுத்தும் உணவு தயாரிப்பாளர்கள் FSSAI வகுத்துள்ள படிவத்தின் படி பதிவேடு பராமரித்திடல் வேண்டும். சமையல் எண்ணெயைப் பயன்படுத்தும் அனைத்து உணவு வியாபாரிகளும் சமையல் எண்ணெய் கொள்முதல் மற்றும் பயன்பாடு குறித்த பில்கள் மற்றும் பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். சமையல் எண்ணெயைப் பயன்படுத்தும் அனைத்து உணவு வியாபாரிகளும் சமையல் எண்ணெயை சூடுபடுத்தி பயன்படுத்திய பின்னர் குளிர வைத்துவிட்டால் அந்த எண்ணெயைத் திரும்ப சமைக்கப் பயன்படுத்தக்கூடாது. அதை ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயாகக் கருதி தனியாக ஒரு கொள்கலனில் சேமித்து வைக்க வேண்டும்.

கடை/ஆலை மூடப்படும்
சமையல் எண்ணெய் வாணலியில் கொதித்துக்கொண்டிருக்கும் போது அல்லது சூடாக இருக்கும் போது புதிய சமையல் எண்ணெயை சேர்க்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை FSSAI-யினால் அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்களிடம் மட்டுமே விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். அதற்கு உரிய பில்கள் பெற்றிருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை FSSAI-னால் அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கோ அல்லது தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட வேறு வகையான உணவு வியாபாரிகளுக்கோ வழங்கக்கூடாது. மீறினால், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை விற்பனை செய்த கடையை மூடவும், அதை கொள்முதல் செய்து பயன்படுத்தும் வணிகர்களின் கடையை அல்லது சமையல் எண்ணெய் தயாரிப்பு ஆலையை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவ்வணிகர்களுக்கெதிராக உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு வணிகர் உரிமம் ரத்து
சோப் ஆயில் உள்ளிட்ட உணவற்ற பொருட்களின் தயாரிப்பாளர்களுக்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை விற்பனை செய்தாலும், அவை FSSAI-யினால் அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மீறினால், பொது சுகாதார நலனிற்கு ஊறுவிளைவித்ததாகக் கருதி, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை விற்பனை செய்த உணவு வணிகரின் உரிமம் ரத்து செய்யப்படும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயின் மேலாண்மை குறித்தும், அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்கள் குறித்தும் விபரங்கள் அறிய https://fssai.gov.in/ruco/ என்ற இணையத்தளத்தை பார்க்கலாம். மேலும், நுகர்வோர்கள் தரமற்ற பொருள் அல்லது பயன்படுத்திய உணவு எண்ணெயை மீண்டும் மீண்டும் வணிகர்கள் பயன்படுத்துவது குறித்து புகார் அளிக்க விரும்பினால், 9444042322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் மாநில வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.