tamilnadu

img

கிராமங்கள் தோறும் செங்கொடியை கொண்டு சென்றவர்..... தோழர் ஜி.மணி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தலைவர்கள் புகழாரம்.....

தோழர் ஜி.மணி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தலைவர்கள் புகழாரம்

கிராமப்புற உழைப்பாளி மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு அய ராது போராடிய, செங்கொடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழர் ஜி. மணி. அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில்  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் காணொளி காட்சி மூலம்  ஜூன் 27 ஞாயிற்றுக்கிழமை மாலை  6 மணி முதல் 8 மணி  நினைவேந்தல் கூட்டம் நடை பெற்றது. இந்த நிகழ்வில் அகில இந்திய மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்று தங்களது நினைவு களை பகிர்ந்து கொண்டனர். மேலும் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்களையும் அவற்றை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.முன்னதாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் பழனிச்சாமி வரவேற்றார். நிறைவாக மாநில பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

மாற்றம் உருவாவது நிச்சயம்!

ய கூலித் தொழிலாளர்களுக்காக சிவப்பு கொடி யுடன் களத்தில் நின்று எண்ணற்ற போராட்டங் களை நடத்தியவரும் அகில இந்திய விவசாய  தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான சுனீத் சோப்ரா தனது புகழஞ்சலியில்,” தோழர் மணி  மறைந்தார் என்ற செய்தி கேட்டதும் நான் பேரதிர்ச்சி யடைந்தேன். காரணம், அவரும் நானும் ஒரே கால கட்டத்தில் 1972 ஆம் ஆண்டில் செங்கொடி இயக்கத்திற்குள் காலடி எடுத்து வைத்தோம். அந்தத் தருணம், ஏராளமான இளைஞர்கள் பல்வேறு நிலைகளிலும் போராடிக் கொண்டிருந்தனர். அத்தகையோரில் அடையாளம் கண்டு நமது செங்கொடி இயக்கத்திற்குள் கொண்டு வந்தது மட்டுமல்ல, அடித்தட்டு, உழைப்பாளி மக்களையும் மாணவர்களையும் அணிதிரட்டி எண்ணற்ற போராட்டங்களை நடத்தியவர் மணி என்றார். நமது  அமைப்பை தமிழ்நாட்டில் விரிவுபடுத்தி கிராமங்கள் தோறும் செங்கொடியை கொண்டு சென்ற, வலு வான அமைப்பை கட்டியமைத்த தோழர் மணியின் பங்களிப்பை, போராட்ட உணர்வை, தலைமைப் பண்புகளை சுனீத் சோப்ரா விரிவாக எடுத்துரைத்தார்.

மாணவர் சங்கத்தில் தொடங்கி கரும்பு விவசாயி களை அணி திரட்டியது. கிராமப்புற ஏழை-எளிய விவசாயிகள், கூலித் தொழிலாளர்களை அடை யாளப்படுத்தியது.  தோழர் வி.பி.சிந்தன் காட்டிய பாதையில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் போராடி, வாதாடி ஒன்று சேர்த்த தோழர் மணியின் மகத்தான பணிகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.  எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த தோழர் மணி, கடந்த ஐந்து ஆண்டு களுக்கு மேலாக நோய்வாய்ப்பட்ட நிலையிலும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் இளைஞர்களையும் அடுத்த தலைமுறையினரையும் இயக்கத்திற்கு கொண்டு வருவதற்கும் பல்வேறு வகையிலும் தூணாக நின்றார்.  அத்தகைய சிறந்த போராளியை இழந்திருக்கும் இந்த நேரத்தில் நாடு எதிர்கொண்டி ருக்கும் சவால்கள் அனைவரும் அறிந்ததே.  தற்போது, அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதை எதிர்க்கும் போராட்டத்திலும் செங்கொடி இயக்கம் முழுமை யாக ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு மிகப்பெரிய போராட்டக்களமாக மாறி இருப்பதும்,  3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற ஏழு மாதமாக தொடர்ந்து தலைநகர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுக்க மூலைமுடுக்கெல்லாம் வெகுண்டெழுந்த விவசாயிகளின் எழுச்சியையும் அவர் சுட்டிக்காட்டி னார்.   நாடே போராட்டக் களமாக மாறி வரும் பின்னணி யில் தான், கேரளாவில் இடது ஜனநாயக முன்ன ணியே தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் ஆட்சி அமைப்பதற்கு மக்கள் வாய்ப்புக் கொடுத் திருக்கிறார்கள். அது போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் அமைப்புகளுக்கு மிகப் பெரிய உற்சா கத்தை கொடுத்திருக்கிறது என்றும் கூறினார். தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்ட ங்கள் ஒருபோதும் வீண்போகாது என்றும், அது இந்தியாவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்  உறுதிபட  தெரிவித்தார் சுனில் சோப்ரா.

பட்டினிச் சாவை தடுப்போம்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம்,” சமகாலத்தில் பணியாற்றிய தோழர் மணியின் பணி ‘உள்ளங்கை  நெல்லிக்காய்’ போன்றது. தனது கடின உழைப்பால் களப்பணி மட்டுமல்ல, எழுத்துப் பணியையும் மிகச்சிறப்பாக செய்து காட்டியவர். கிராமப்புற மக்களை அணி திரட்டுவதில் அவர் பின்பற்றிய அணுகுமுறைகளை நாம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். பாட்டாளி வர்க்கத்தை, கிராமப்புற உழைப்பாளி மக்களை, செங்கொடி இயக்கத்தின் கீழ் திரட்டுவதே தோழர் மணிக்கு நாம் செய்யும் புகழஞ்சலி” என்றார். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும், அவரது பொறுப்புகள் என்ன?  கடமைகள் என்ன?  என்பதை தெரிந்துகொள்ள தோழர் மணியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அவர் அத்தகைய அனைத்து பொறுப்பு களையும் முழுமையாக நிறைவேற்றிக் காட்டியவர்‌. இறந்த பின்னும் வாழ்கிற சாதியாய் திகழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்கள் பட்டியலில் தோழர் மணிக்கும் இடமுண்டு என்றும் கூறினார்.

தாராளமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப் பட்டதால் கிராமப்புற மக்களும் விவசாயக் கூலித்  தொழிலாளர்களும் வாழ்வாதாரங்களை இழந்து  பிறந்த மண்ணிலேயே வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால், பிழைப்புக்காக மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்களை நோக்கி ஓட வேண்டிய கொடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை யும், பிறந்த மண்ணை பிரிந்து சென்று சுயமரி யாதையை இழந்து, கிடைக்கும் வேலையை செய்து கொண்டு உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் விவசாயத் தொழிலாளர்களின் அவல நிலைமைகளையும் விரிவாக எடுத்துரைத்த சண்முகம், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும் சட்டப்படியான உரிமைகளை நிலைநாட்ட வேண்டியதும் மிக முக்கியமான கடமை என்றும் தெரிவித்தார். தாராளமயக் கொள்கையை தீவிரமாக அமல் படுத்தக் கூடிய ஒரு ஆட்சி தில்லியில் அமைந் திருப்பதால், விவசாயத்தில் போதுமான வரு மானம் இல்லை, விவசாய நிலங்கள் வேறு பயன் பாட்டுக்கு மாற்றப்படுகின்றன. இந்த பாதிப்புகள், விளைவுகளுக்கு எதிராகவும் தமிழக மக்களை குறிப்பாக கிராமப்புற மக்களை திரட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் நம்முன் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத்தையும் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களை யும் அழித்தொழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாப்பது  என்கிற ஒரே நோக்கத்திற்காக மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசாங்கம் அடாவடித்தனமான முறையிலும் ஜனநாயகத்து க்கு விரோதமான முறையிலும் நிறைவேற்றி இருக்கும் மூன்று வேளாண்  சட்டங்களும் நடை முறைக்கு வந்தால் அரசு கொள்முதல் இருக்காது. பொது விநியோக திட்ட முறை அடியோடு ஒழிக்கப் படும். இதை நம்பி இருக்கக்கூடிய 70 கோடி விவ சாயத் தொழிலாளர்கள் பட்டினி கிடந்து சாகும் கொடூரமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவ்வ ளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களை மிக வும் நல்லது என்று சொல்லக்கூடிய ஒரு அரசாங்க மாக மோடி அரசாங்கம் இருந்து வருகிறது.  ஆகவே விவசாயிகள் சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கமும் செய்ய வேண்டிய முக்கிய பணி இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வைப்பது ஒன்றுதான். அது தான் முன்னுரிமைப் பணியாக இருக்க வேண்டும். இதற்காகத்தான், உயிரை பணயம் வைத்து விவசாயிகள் இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, உழைப்பாளி வர்க்கத்தோடு ஒன்றி ணைந்து ஒன்றுபட்ட போராட்டத்தை தீவிரப் படுத்துவதே தோழர் மணிக்கு நாம் செலுத்தும் அர்த்தமுள்ள அஞ்சலியாக இருக்கும் என்று சண்முகம் தெரிவித்தார்.

சாதிய ஒடுக்குமுறை இல்லா தமிழகமாக மாற்றுவோம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தனது புகழஞ்சலி உரை யில், “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த அந்த காலகட்டத்தில் இடதுசாரி சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, உழைப்பாளி மக்களுக்கு தன்னுடன் கடலூர் மாவட்டத்தில் தொடங்கிய தோழர் மணியின் நீண்ட நெடிய பயணத்தையும், இணைந்து பணி யாற்றிய, பழகிய அனுபவங்களையும் அவரது எளிமையான எழுத்துக்களையும் முழுமையாகப் பகிர்ந்து கொண்டதுடன் அவரது இழப்பு உழைப்பாளி மக்களுக்கு மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பு” என்றார். தமிழ் நாட்டில் எண்ணற்ற போராட்டங்கள் நடை பெற்று வந்தாலும் மனைப்பட்டா கேட்டு சுமார் 5 லட்சம் பேரை திரட்டி புதிய வரலாறு படைத்த அந்தப்  போராட்டத்தின் விளைவு அரசாங்கம் புதிய உத்த ரவை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு ஒரு கூட்டு தலைமையை உருவாக்கி வழிநடத்திச் சென்ற தோழர் மணியின் பணியும் அளப்பரியது என்றும் புகழ்மாலை சூட்டினார்.

தோழர் மணி, தனது வாழ்நாளில் ஒரு சிறந்த  கம்யூனிஸ்டாக, உழைப்பாளி மக்களின் போராளி யாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து  வாழ்ந்தார் என்பது நமக்கெல்லாம் பெருமை யாகும். ஆனாலும் இந்த கொடிய கொரோனாவின் கொடூரத்திற்கு தோழமையை இழக்க நேரிட்டது என்றும் கடந்த காலங்களில் நிலப்பிரபுக்களை எதிர்த்து, கூலிக்காக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். விவசாயி களுக்கு ஆதரவாகவும் போராடி இருக்கிறோம். ஆனால் அத்தகைய சூழல் தற்போது மாறி விவ சாயத் தொழிலாளர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் கூறினார். தற்போதைய சூழலில் பட்டியலின மக்கள், பழங்குடி மக்கள் அதிகமாக எதிர்கொள்ளும் சாதியக் கொடுமை, தீண்டாமை உள்ளிட்ட சமூக ஒடுக்கு முறை பிரச்சனைகளில் விவசாயிகள் சங்கமும் விவசாய தொழிலாளர் சங்கமும் முன்பைக் காட்டி லும் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். இத்தகைய போராட்டத்தை நடத்தி இடதுசாரி இயக்கங் களை வலுமிக்க இயக்கங்களாக மாற்றி உறுதி மிக்க போராட்டத்தின் மூலம் சாதிய ஒடுக்குமுறை இல்லா தமிழகமாக மாற்றுவதே தோழர் மணிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றும் கே. பாலகிருஷ்ணன் கூறினார்.

கம்பீரமாக எழுவோம்!

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ஏ. லாசர் தமது தலை மை உரையில்,” தோழர் ஜி. மணியின் மகத்தான பணிகளை பதிவு செய்ததுடன் செங்கொடி இயக்க த்தின் வர்க்க, வெகுஜன அமைப்புகளின் பல்வேறு பொறுப்புகளிலும் கம்பீரமாக பணியாற்றி தனி முத்திரை பதித்தவர்.  அதுவே அவரிடம் உள்ள தனிச்சிறப்பு” என்று புகழாரம் சூட்டினார். தோழர் மணியுடன் இணைந்து பணியாற்றிய  அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு,  இயக்கத் திற்காக அவர் செய்த பணிகளையும், அவர் கற்றுக் கொடுத்த பாடங்கள், படிப்பினைகள் அடுத்த தலை முறைக்கும் உந்து சக்தியாகவும் உறுதுணை யாகவும் நிற்கிறது என்றும் லாசர் புகழஞ்சலி செலுத்தினார்.

கலங்கரை விளக்கு!

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தர்மலிங்கம் தமது புகழ்  அஞ்சலியில்,”தலைமைப் பண்பின் சிறந்த அடை யாளம். செங்கொடி இயக்கப் பாதையில் ஏராள மான தலைவர்களை உருவாக்கிய ஆசான். கிராமப்புற ஏழை, எளிய மக்களின் போர்ப்படைத் தளபதி” என்றெல்லாம் புகழ் மாலை சூட்டினார். கிராமப்புற வேலைத் திட்டம் அறிமுகமான பிறகு, நமது அமைப்பை விரிவுபடுத்தி சங்கத்தின் தோற்றத்தையே மாற்றிக் காட்டினார். சிறந்த வழிகாட்டியாய் கலங்கரை விளக்காய் திகழும் அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க, முன்னோடியாய் வாழ்ந்து காட்டிய, அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றும் தெரிவித்தார்.

அடித்தட்டு மக்களின் போராளி!

இந்த நிகழ்வில் பங்கேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும் கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை,” தமிழக அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டு காலம் அடித்தட்டு மக்களுக்காக, ஏழை-எளிய, உழைக்கும் மக்களுக்காக, தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்களில் தோழர் மணியும் ஒருவர் “ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல் வாழ ஊர் சொல்ல வேண்டும்” என்கிற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய மிகச் சிறந்த தலைவரை உழைப்பாளி மக்களின் சிறந்த போராளியை இந்த கொடூரமான காலத்தில் கொடூர வைரஸ் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்  விட்டுச் சென்ற பணிகளை செவ்வனே செய்து தமிழக உழைப்பாளி மக்களிடம் எடுத்துச் செல்வதும் விவசாய தொழிலாளர் சங்கத்தை சக்திமிக்க அமைப்பாக கட்டி அமைப்பதும்தான் அவருக்கு செய்யும் உண்மையான புகழஞ்சலியாக இருக்க முடியும் என்றும் கூறினார்.

 - தொகுப்பு : சி. ஸ்ரீராமுலு






 

;