tamilnadu

img

தவறான கல்விக்கொள்கைக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவோம்

தி.க.தலைவர் கி.வீரமணி அழைப்பு

சென்னை, ஜன. 31- மத்திய பாஜக அரசின் தவறான கல்விக் கொள்கைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீர மணி  அழைப்பு விடுத்துள்ளர். நீட்தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் குமரி முதல் சென்னை வரை பிரச்சாரம் நடைபெற்றது. இதன்  நிறைவு நிகழ்ச்சி சென்னi எம்.ஜி.ஆர்.நகரில் வியாழனன்று (ஜன.30) நடைபெற்றது. அவர் அவர் பேசியதாவது: ராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு  வந்தார். பழைய கள், புதிய மொந்தை அதுதான் தேசியக் கல்வி ‘நீட்’ என்பது. மக்களின் வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை கல்வி. அந்த அடிப்படையைத் தகர்ப்பதே ஆரியத்தின் மனுதர்மம். இந்து மதம் எங்கே போகிறது? என்ற  நூலில் அக்னிஹோத்திரம் ராமானுஜ தத்தாச்சாரியார் கூறுகிறார், “ஆரியர்  கள் இங்கு வந்தபோது கையோடு மனு தர்மத்தைக் கொண்டு வந்தார்கள்” என்று எழுதியுள்ளார். அம்பேத்கர் அரச மைப்புச் சட்டத்தில் சுதந்திரம், சம தர்மம், சமத்துவத்தை வலியுறுத்தினார். அவற்றுக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  நாம் இன்னும் எத்தனை  அனிதாக்களை இழக்கப் போகிறோம். எனவே மத்திய அரசின் தவறான கல்விக் கொள்கைக்கு எதிராக அனை வரும் ஒன்றிணைந்து தொடர் போராட் டங்களை முன்னெடுப்போம் என்றார்.

கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழ கிரி பேசுகையில், நமது கடந்த கால  வரலாறு மக்களிடையே பிளவு படுத்தப்பட்ட, ஏற்றத் தாழ்வுகள் உரு வாக்கப்பட்டதாகும். இத்தகைய சம நிலையும், சம வாய்ப்பும் இல்லாத ஒரு நாட்டில் சமூக அமைப்பில் தகுதி, திறமை குறித்து பேச முடியுமா? பேச லாமா? சம நிலை உருவான பிறகு தகுதி  திறமை குறித்து பேசலாம். உரிமை மறுக்கப்பட்ட சமுதாயத்தில் சமூகநீதி கட்டாயம் தேவை, அதற்கு உலை வைப்பதுதான் ‘நீட்’ தேர்வு. அதை எப்படி அனுமதிக்க முடியும்? 12  வகுப்புக்குள் ஒரு மாணவன் ஆறு  அரசுத் தேர்வுகளை எழுத வேண்டுமா? தகுதி, திறமை என்கிறார்கள், மேலோட்டமாகப் பார்த்தால், அது சரிதானே என்று கூடத் தோன்றலாம். உண்மை நிலை என்ன? ஒரு கட்டடத் தொழிலாளியின் மகன், சாக்கடை சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளியின் மகன் இவர்கள் கூறும் அந்தத் தகுதியை அடைய முடியுமா? ‘நீட்’ தேர்வு எழுதி தேர்வு பெற்றிட முடியுமா? ஏழை, எளியவர்களும், கல்விச் சூழல் இல்லாதவர்களும், மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல ஆசைப்பட்டால் அது கனவாகி தற்கொலையில்தான் முடியும் என்பதுதான் எதார்த்த நிலை. அனி தாக்களின் தற்கொலைகள் இத னைத்தான் எடுத்துக்காட்டுகின்றன என்றார்.

டி.கே.எஸ்.இளங்கோவன்

டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக) பேசுகையில், தமிழகத்தில் 26 மருத்து வக் கல்லூரிகள் உள்ளன. இவை அல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. வேறு எந்த  மாநிலத்திலும் இந்த நிலை கிடை யாது. நம் மக்கள் வரிப் பணத்தில் நம்  மாணவர்கள் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட மருத்து வக் கல்லூரிகளில், இன்று யார் யாரோ வந்து படித்துவிட்டுப்போகிறார்கள். 

அடிக்கல் நாட்டியதோடு சரி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை என்று கூறி, பிரதமரே வந்து அடிக்கல் நாட்டினார்; அதற்குப் பிறகு  அடுத்த கல்லை கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை. நாங்கள் புத்தர், வர்த்தமானர், மகாவீரர், திரு வள்ளுவர், பெரியார், அம்பேத்கர், அண்ணா சிந்தனைகளை ஏற்று வாழ்கி றோம். கைபர் கணவாய் வழியே வந்த உங்கள் சிந்தனைகளை பிறவியில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் வருண தர்மத்தை நாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும் என்று வினா எழுப்பினார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், மதச் சார்பற்ற கொள்கையைச் சொன்னதற்காக மத வெறியர்களால் கொல்லப்பட்டவர் காந்தி. நாடு சுதந்திரமடைந்த 5 மாதங்க ளுக்கு மேல் அவரை உயிரோடு விட்டு  வைக்காத கூட்டம்தான் இப்போது  நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது.5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கெல் லாம் பொதுத் தேர்வு என்றால், அதன் பொருள் மேல்நிலைப் பள்ளியோடு உன் கல்வியை முடித்துக்கொள், கல்லூ ரிக்குள் நுழையாதே என்பதுதான்.இதற்கு எதிரான போராட்டத்தில் நாம் வென்றே தீருவோம் என்றார்.

எம்.எச்.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவா`ஹிருல்லா பேசுகையில்,  நீட் மற்றும் புதிய கல்விக் திட்டம் சாமனிய மக்களின் கல்வி உரிமையை பறிப்பதோடு, பொது சுகாதாரத் துறை யையும் மாநிலத்திலிருந்து கபளீகரம் செய்ய  மத்திய பாஜக அரசு முடி வெடுத்துவிட்டது என்றார்.

திருமாவளவன்

விசிக தலைவர் தொல்.திருமாவ ளவன் பேசுகையில், ‘நீட்’தேர்வை  மறந்து திசை திருப்பப்படும் பிரச்ச னைகளில் பயணிக்க வேண்டியதா கிறது. அம்பேத்கர் சிலையை உடைத்த வர்கள் இப்பொழுது தந்தை பெரி யார் சிலைகளை உடைக்க ஆரம்பித்துள்ளனர். இவையெல்லாம் நம்மை திசை திருப்ப நடைபெறு கின்றன என்பதை உள்வாங்கி தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார். அழகு சுந்தரம் (மதிமுக) பேசுகை யில், அதிமுக அரசு நீட் தேர்வை வைத்து வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது என்றார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இரா.பெரியார்செல்வன், முனைவர் க.அன்பழகன் ஆகியோரும் பேசினர். முன்னதாக வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன் வரவேற்றார்.




 

;