சென்னை, மே 5- கோயம்பேடு சந்தை மூடப்பட்டதையடுத்து அடுத்த 5 நாட்களுக்கு சரக்குகள் நிறுத்தி வைக்கப்படுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதால் சென்னையில் காய்கறி தட்டுபாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.. கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகளவில் பரவியதால் செவ்வாய்க்கிழமை (மே 5) முதல் சந்தை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து கோயம்பேடு சந்தையின் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டன. அரசின் முடிவு குறித்து கோயம்பேடு அனைத்து மொத்த வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் செவ்வாயன்று (மே 5) நடைபெற்றது.
பின்னர் கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காய்கறி மொத்த வியாபாரத்தை திருமழிசை பகுதிக்கு மாற்றினால் மொத்த வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும், திருமழிசை பகுதியில் அடிப்படை வசதி, வியாபாரம் மூலம் கிடைக்கும் பணத்தை எடுத்து செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும் திருமழிசை பகுதியில் மொத்த வியாபாரம் செய்வதற்கும், 1500க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைப்பதற்கான இடவசதிகள் இருக்கிறதா என்பதை வரும் 8ஆம் தேதி ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறினார். இதன் காரணமாக வரும் 10ஆம் தேதி வரை வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் சரக்குகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கோயம்பேடு மொத்த விற்பனை கடைகளுக்கு விடுமுறை அளிப்பதாகவும் தெரிவித்தார். இதனால் சென்னையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.