tamilnadu

img

வாச்சாத்தி வழக்கு வெற்றிபெற முதல் சாட்சியாக இருந்த தோழர் பெருமாள் காலமானார்

சென்னை:
வாச்சாத்தி வழக்கு வெற்றி பெற முதல் சாட்சியாக இருந்த வாச்சாத்தி ஊர்கவுண்டர் தோழர் பெருமாள் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு, மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
1992 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வாச்சாத்தி கிராமத்தின் சித்தேரி மலையில் சந்தனக்கட்டை பதுக்கல் உள்ளதாக அரூர் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் 269 பேர்கள் வாச்சாத்தி கிராமத்தையே சூறையாடி வீடுகளை அடித்து தரைமட்டமாக்கி, 18 பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கிராமத்தையே நிர்மூல மாக்கிய கொடூரமான சம்பவத்தின் முதல்மனிதனாக நின்று கடைசிவரை வாச்சாத்தி வழக்கின் முதல் சாட்சியாக இவ்வழக்கி னை வெற்றி பெற செய்திட்டவர். வாச்சாத்தியின் ஊர்கவுண்டர் என்று அழைக்கப் படும் தோழர் பெருமாள ஆவார்.

வாச்சாத்தி சம்பவத்தினை மூடி மறைத்திட அன்றைய வனவர்கள் முத்துமாரப்பன், ராஜ்மோகன் ஆகிய இருவரும் பெருமாள் ஊர் கவுண்டருக்கு பல லட்ச ரூபாய் அளிப்பதாகவும், இதில் நீங்கள் கண்டும்காணாததுமாக இருந்தால் போதும், சாட்சி சொல்ல தேவையில்லை என்று பலமுறை பெருமாளிடம் வற்புறுத்தியுள்ளனர்.கிஞ்சுற்றும் அசையாத பெருமாள் கவுண்டர், “எம் மக்களுக்கும்,  கம்யூனிஸ்ட் கட்சிகாரர்களுக்கும் ஒருபோதும் நான் துரோகம் செய்திட மாட்டேன்” என்று கூறி வாச்சாத்தி வழக்கில் முதல் சாட்சியானவர்தான் பெருமாள் கவுண்டர். வாச்சாத்தி கிராமத்தில் மட்டுமல்ல தருமபுரி, பிற மாவட்டங்களிலும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநாடுகள், போராட்டங்கள், நிகழ்ச்சிகள் என்றால்முதல் மனிதனாக வந்துகலந்துகொள்வார்.1942 ஆம் ஆண்டில் பிறந்த பெருமாள் கவுண்டர் சுமார் 29 ஆண்டுகாலம், வாச்சாத்தி பிரச்சனைகளுக்கான போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் படுக்கையாகவே நோய்வாய்ப்பட்ட தினால் தனது 84 வயதில் கடந்த 18.5.2020 தேதியன்று இறந்துவிட்டார்.இவரது இறப்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்டக்குழுவிற்கும், வாச்சாத்தி கிராமத்திற்கும் பேரிழப்பாகும். இவரது பிரிவால் வாடும்,இவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.

மே 19 அன்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, விவசாயிகள் சங்க அரூர் வட்ட தலைவர் கே.என்.ஏழுமலை, பி.குமார், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.கே.முருகன் ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினர்.

;