tamilnadu

img

சென்னை: தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தனியால் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரத்தில் பிரபல கிறிஸ்துராஜா பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை, சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் போர் மூலமும், வெளியில் இருந்து தண்ணீர் லாரிகள் மூலம் டேங்கில் தண்ணீர் ஏற்றி உபயோகித்து வந்தனர். 

இந்நிலையில்  வறட்சி காரணமாக பள்ளியில், குடிநீருக்காக அமைக்கப்பட்டிருந்த, ஆழ்துளை கிணறு, நீரின்றி வறண்டது. லாரிகளில் தண்ணீர் வாங்குவதும் பெரும் சவாலாக மாறி உள்ளது. இதனால் மாணவிகளின் அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். 

இதன்காரணமாக, 6 முதல் 8-ம் வகுப்புவரை படித்துவரும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நேற்று மற்றும் இன்று விடுமுறை அளித்துள்ளது. கல்வித் துறையின் அனுமதி பெற்றே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று வரும் 24ம் தேதிவரை அரைநாள் தான் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பள்ளிகள் மட்டுமின்றி  சென்னையில் பல ஓட்டல்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சிகளால் பொய்யான தோற்றம் உருவாக்கப்பட்டுவதாகவும் அதை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை மக்களிடம் அமைச்சரின் இந்த பேச்சு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 

;