tamilnadu

img

நாளை வாக்கு எண்ணிக்கை... ஒவ்வொரு மையத்திலும் 2 கேமிராக்கள் அமைப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய உத்தரவு

சென்னை:
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி முழுமையான கேமிரா கண்காணிப்பின்கீழ் நடைபெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாகநடந்து முடிந்து வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜனவரி 2 வியாழனன்றுவாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மாலையே முடிவுகள் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்வாக்கு எண்ணும் பணி போதிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின்கீழ் நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வாக்கு எண்ணும்போது வாக்குச்சீட்டு மீது கேமிரா படும்படி அமைத்திட வேண்டுமென்றும் வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு மனுதாரர்கள் மனுச் செய்திருந்தனர்.

இதை திங்களன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன், வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்தின் விபரங்களைக் கேட்டறிந்தார். தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரேசன், டிசம்பர் 13 மற்றும் டிசம்பர் 26 தேதிகளில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் உத்தரவுகளின் மூலம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விரிவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.விவாதங்களைக் கேட்டறிந்த பின்னர், “வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமிரா உள்ளிட்ட கண்காணிப்பு கேமிரா ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு வாக்கு எண்ணும்மையத்திலும் இரண்டு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்று, அந்த மையத்தில் வாக்கு எண்ணும் பணிக்குநியமிக்கப்படுகிற அதிகாரிகள் தவறாமல் கவனித்து உறுதி செய்ய வேண்டும். மேலும் வாக்கு எண்ணும்  மையங்களில் பொருத்தப்படும் கேமிராக்கள் வாக்குச்சீட்டை நேரடியாக கவனிக்கும் விதத்தில் அமைக்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்ற டிசம்பர் 26 தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள வாசகத்தை ஆணையம் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். வாக்குச்சீட்டுகளின் மீது கேமிராவின் கவனம் இருப்பது போல அமைக்க வேண்டும்”என்று உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார். கே. பாலகிருஷ்ணன் சார்பில் வழக்கறிஞர்கள் ஸ்டாலின்அபிமன்யு, பி.ஆர்.உதயகுமார், ஆர்.செல்வி ஆகியோர் ஆஜராகினர்.

;