tamilnadu

4 தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்

சென்னை,ஏப்.21-தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் திங்களன்று (ஏப். 22) தொடங்குகிறது. காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 இடங்களுக்கு கடந்த 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.இந்நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல்செய்ய 29 ஆம் தேதி கடைசி நாளாகும். மே 23 ஆம்தேதி அனைத்து தொகுதிகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றாலும், அந்தத் தொகுதிகள் அமைந்துள்ள கோவை, மதுரை, கரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதிகாரிகள் நியமனம்

மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக மீனாட்சி, உதவி தேர்தல்நடத்தும் அலுவலர்களாக ஈஸ்வரன், அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக பாலகிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஜெயராஜ், மீனாகுமாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.அரவக்குறிச்சி மற்றும் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

;