tamilnadu

திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காக்கள்...

சென்னை:
சென்னை உள்பட 9 மாவட்டங்களில் புதிய ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

பட்ஜெட் உரையில் அவர் மேலும் கூறியதாவது: ஒற்றைச் சாளர அமைப்புமுறை திறம்பட செயல்படுத்தப்பட்டு, அதன் கீழ் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேலும் 100 சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேலும் 110 சேவைகளும் ஒற்றைச் சாளர வலைவாசலின் கீழ் கொண்டு வரப்படும்.வளர்ந்து வரும் துறைகளில் தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்காக உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றிற்கான புதிய தொழில் கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். அதிக அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்க புலம்பெயர் தமிழர்களுடனான உறவு வலுப்படுத்தப்படும். முதலீட்டாளர்களின் முதலீடு சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், சிறப்பாக திட்டமிடுவதற்கும், மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளைப் பற்றி விவரமான, துல்லியமான தரவுதளம் உருவாக்கப்படும்.தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45,000 ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் 1,000 கோடி ரூபாய் செலவில் அறை கலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும். 

;