tamilnadu

சென்னையில் 3754 வாக்குச்சாவடிகள் தேர்தல் பணியில் 20 ஆயிரம் ஊழியர்கள்

சென்னை, ஏப்.17-சென்னையில் 3 மக்களவைத் தேர்தல் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வியாழனன்று (ஏப்.18) நடைபெறுகிறது. இதையெட்டி சென்னை மாவட்டத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், பிற பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது:-சென்னை மாவட்டத்தில் மக்களவை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் 100 சதவீதம் செய்து முடிக்கப்பட்டு, வாக்குப்பதிவிற்கு தயார்நிலையில் உள்ளது.3,754 வாக்குச்சாவடிகள் மற்றும் 7 துணை வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வியாழனன்று (ஏப்.18) காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்துவார்கள். பின்னர், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ள வசதியாக வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.


தேர்தல் பணியில் 20,102 அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்க 331 நுண் பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க வசதியாக சாய்வுதளம் வசதி, சக்கர நாற்காலி, கழிவறை, குடிநீர் வசதி, சாமியானா பந்தல் வசதி, இருக்கை வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் மகளிர் வாக்களிக்க தனி வாக்குச்சாவடி ஒன்றும், மாதிரி வாக்குச்சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 1983 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், வாக்குச்சாவடியில் தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்டல அளவில் நடமாடும் வாகனங்கள் மூலம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக சென்னை மாநகர காவல்துறையின் சார்பாக 15,000 காவலர்களும், 5 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், இரண்டு கம்பெனி ஆந்திர மாநில காவல்துறையினரும், இரண்டு கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார். 

;