tamilnadu

img

அலைகளின் அடையாளம் பி.சித்ரேஷ் தத்தா!

அலைகளின் அடையாளம் பி.சித்ரேஷ் தத்தா!

விளையாட்டுத் துறையின் பரந்த வெளியில் தமிழ்நாடு, இந்தியா என்கிற பெயரை பறைசாற்றி வரும் திறமையாளர்களில் பி.சித்ரேஷ் ஒருவர். சென்னையைச் சேர்ந்த இவர், கடல்காற்றின் அலைகளின் சக்தியையும் தனது உழைப்பால் பாய்மரப் படகு விளையாட்டில் ஒரு சிறப்பான அத்தியாயத்தை எழுதியிருக்கிறார். குடும்பப் பின்னணி ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் அவரின் மனம் மிகவும் தனித்துவமான கனவுகளால் நிரம்பியிருக்கிறது. சிறு வயதிலேயே உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உயர்த்திப் பிடித்த இந்த வீரர், இன்று தமிழ்நாடு அரசாங்க வேலை பெற்று (சிப்காட் நிறுவனத்தில் உதவி அலுவலர்) இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னோடியாக விளங்குகிறார். சென்னை கீழ்ப்பாக்கம், பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த சித்ரேஷ், தனது 8 வயதிலேயே பாய்மரப் படகோட்டத்தில் ஆர்வம் கொண்டார். கோவளம் கடற்கரையில் கைட் சர்பிங் செய்வதை பார்த்த பிறகு, தண்ணீர் பயம் இருந்த போதிலும், இந்த அசாதாரண விளையாட்டில் ஈடுபட விரும்பினார். தனது சகோதரியின் ஊக்கத்தால் ஈர்க்கப்பட்ட சித்ரேஷ், தினமும் 6 மணி நேரம் கடுமையாக பயிற்சி எடுத்து, ஆப்டிமிஸ்ட் டிங்கி பிரிவில் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். சித்ரேஷின் வாழ்க்கையில் 2014ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வெறும் 12 வயதில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் மிக இளம் வயது பாய்மரப் படகு வீரர் என்ற பெருமையை பெற்றார். தேர்வுப் போட்டியில் 15 பந்தயங்களில் 8-ஐ வென்று, மீதமுள்ள பந்தயங்களில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்து, நாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பை பெற்றார். சித்ரேஷின் சாதனைகள் நமது நாட்டின் எல்லைகளை தாண்டிப் பரவியுள்ளன. சீனாவின் ஹாங்காங்கில் நடந்த 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர், தொடர்ந்து இங்கிலாந்து, துருக்கி, பிரான்ஸ், நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் மால்டா போன்ற நாடுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். தேசிய அளவில் சாம்பியனாக உயர்ந்த சித்ரேஷ், பின்னர் பார்முலா பிரிவில் தனது திறமையை விரிவுபடுத்தினார். 2023இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் இந்தியாவுக்கு பிரதிநிதித்துவம் செய்த சித்ரேஷ், 2024ஆம் ஆண்டு நடந்த சைல் இந்தியா தேசிய தரவரிசைப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்தியாவின் முதல் பார்முலா கைட் வீரர் என்ற பெருமையையும், பல முறை தேசிய சாம்பியன் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். தனது விளையாட்டுத் திறமையையும் கல்வியையும் சமநிலையாகக் கொண்டு செல்கிறார். தமிழ்நாடு அரசு இந்த திறமையான வீரரின் சாதனைகளை அங்கீகரித்து, அரசாங்க வேலை வழங்கி கவுரவித்திருப்பது, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் முக்கிய முடிவாக அமைந்துள்ளது. சித்ரேஷின் பயணம் நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகிறது. சிறு வயதில் இருந்த பயத்தை வென்று, கடுமையான பயிற்சியின் மூலம் சாதனை படைத்திருப்பது, இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த உதாரணம். விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை வழிமுறையாகவும் இருக்க முடியும் என்பதை இவரது வெற்றி நிரூபிக்கிறது. தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களுக்கு வேலை வழங்குவதன் மூலம், இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள ஊக்கமளிக்கிறது. இது வெறும் ஒரு வேலை வழங்குதல் மட்டுமல்ல, விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பையும், நாட்டிற்காக பெருமை சேர்க்கும் அவர்களது பங்களிப்பையும் மதிக்கும் ஒரு நடவடிக்கையாகும். சித்ரேஷின் கதை, கனவுகளை நனவாக்க முடியும் என்பதற்கான நம்பிக்கையின் அடையாளம். சென்னை கடற்கரையில் இருந்து உலக அரங்கிற்கு பயணித்த இந்த வீரர், தமிழ்நாட்டின் பெருமையாக விளங்குகிறார். அவரது சாதனைகள் எதிர்கால விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும், மாநில அரசின் ஆதரவுடன் இன்னும் பல சித்ரேஷ்கள் வெளிவர இந்த முயற்சி உறுதுணையாக இருக்கும். - சி. ஸ்ரீராமுலு